வெள்ளி, 26 அக்டோபர், 2018

கால பைரவர் கோவில், உஜ்ஜயின்



உஜ்ஜயின், மதுரையை போன்றே இந்தியாவின் புராதான நகரங்களில் ஒன்று. மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் மற்றும் சுதாமர் அவர்களின் குருவான சண்டபாணியிடம் இங்குள்ள சண்டபாணி ஆசிரமத்தில் தான் குருகுல கல்வி பயின்றார்கள் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கால பைரவர் கோவிலும் ஒன்று.

பொதுவாக சைவ வழிப்பாட்டில் அஷ்ட பைரவர்களை வழிபடுவது வழக்கம். அஷ்ட பைரவர்களுக்கும் தலைவராக கருத்தப்படுபவர் தான் கால பைரவர். கால பைரவர் சிவ பெருமானின் ஒரு அவதாரமாகவே கருதப்படுவார். தமிழகத்தில் அஷ்ட பைரவர்களுக்கும் கோவில்கள் உண்டு. அஷ்ட பைரவர்களும் எட்டு திசையையும் காப்பதாக ஐதீகம். பைரவர் சிவனின் ருத்ரமூர்த்தி. குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய பைரவ கோவிலுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்வது தமிழ் நாட்டில் வழக்கம். சீர்காழியிலுள்ள சட்டநாதர் கோவிலில் உள்ளது 1. அசிதாங்க பைரவர் .தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவர் கிழக்கு திசையை காக்கும் கடவுள். நன்னிலம் அருகிலுள்ள திருமருகையிலுள்ள ரத்னகிரீஸ்வரர் ஆலயத்திலுள்ளது 2. .ருரு பைரவர் - .தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -கார்த்திகை, உத்திராடம், உத்திரம்- தென் கிழக்கு திசையை காக்கும் கடவுள். வைதீஸ்வரன் கோவிலிலுள்ளது 3. சந்த பைரவர். திசை -தெற்கு, தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம். திருநாரையூரிலுள்ள திருவிசநல்லூர் கோவிலில் உள்ளது 4. க்ரோத பைரவர் - திசை தென் மேற்கு, தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள்- ரோகிணி, அஸ்தம், திருவோணம், 5. உன்மத்த பைரவர் - திருவீழிமலை திசை மேற்கு தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள்- தெரியவில்லை. 6.கபால பைரவர் , தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்பந்துருத்தியிலுள்ள திருவினன்குடி ஆலயம், திசை வட மேற்கு, தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -பரணி, பூரம், பூராடம். 7. பீஷண பைரவர், பிரண்மலை, திசை -வடக்கு- தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -திருவாதிரை, ஸ்வாதி, சதயம், அஸ்வினி, மகம், மூலம் 8. சம்ஹார பைரவர்- திருவெண்காடு மற்றும் வைரவன்பட்டி, திசை வடகிழக்கு- தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி.

அகோரிகள் பைரவரையே அதிகம் வழிபடுவார்கள். உஜ்ஜயினில் அகோரிகள் அதிகம் உள்ளனர். இங்கு பைரவருக்கு பக்தார்களால் மது வேண்டுதலாக வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வெளியே விதவிதமாக மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்கிறார்கள். சனிகிழமைகளில் வரும் பௌர்ணமியன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். காளிதாசர் இங்கு பைரவரை வழிப்பட்டதாக சொல்கிறார்கள். இங்கு பக்தர்களால் அளிக்கப்படும் மதுவை பூசாரி பைரவர் விக்கிரகத்தின் உதட்டருகில் உள்ள ஒரு சிறு பிளவில் சற்று சரித்து ஊத்துகிறார். பைரவருக்கு பின்பு ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் மது மாயமாக மறைந்து விடுகிறது. பாட்டிலில் மீதமுள்ள மதுவை பகத்ருக்கே பிரசாதமாக திரும்ப கொடுத்து விடுவார்கள்.

உஜ்ஜயின் மஹா காளி கோவில்


எனது பதிவுகளை வாசிக்கும் அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். எனது உடல்நிலை காரணமாக வெகு நாள் இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும் வலைப்பதிவுக்கு திரும்பியுள்ளேன். கடந்த நான்காம் மாதம் உஜ்ஜயின் பதிவுக்கு பிறகு விட்டு போன பதிவுகளை இப்போது பதிவிடுகிறேன்.

மகாகாலேஸ்வர் தரிசனம் முடித்து விட்டு நாங்கள் உஜ்ஜயின் மஹா களி கோவிலுக்கு சென்றோம். வட இந்தியர்கள் காளி என்றும் ஹர சித்தி மாதா என்றும் அழைக்கிறார்கள். நமது நாட்டிலுள்ள முக்கியமான சக்தி பீடங்களில் உஜ்ஜயின் மாகாளி கோவிலும் ஒன்று. மன்னர் விக்ரமாதித்யர் இந்த காளி தேவியை வழிப்பட்டதாக கூறுகிறார்க்ள். விக்ரமாதித்யர் 11 முறை தனது தலையை வெட்டி காளி மாதாவுக்கு காணிக்கையாக செலுத்தினார் என்றும் ஒவ்வொரு முறையும் காளி மாதா அவரை உயிர்ப்பித்தார் என்பதும் வரலாறாக இங்கு கூறப்படுகிறது. கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு அரங்கில் ஒரு பெரிய விக்ரமாதித்யர் படம் வைத்துள்ள்ர்கள்.

இன்னொரு முக்கியமான ஸ்தல வரலாறுபடி ஒரு காலத்தில் அந்தகாசுரன் என்ற ஒரு அசுரன் உஜ்ஜயினை ஆண்டு கொண்டிருந்தார். அவரருக்கிருந்த ஒரு அசுர சக்தி மூலம் அவரது உடலில் இருந்து சிந்தும் ஒவ்வொரு இரத்த துளியும் பூமியில் விழுந்த உடனே அதிலிருந்து இன்னொரு அந்தகாசுரன் தோன்றினான். இவ்வாறாக அவன் அழிவில்லாதவனக இருந்தான். கடைசியில் சிவ பெருமான் திருசூலம் மூலம் அவனின் உடலை கிழித்து அசுரனை கொல்கிறார். அந்த நேரம் கீழே ஒரு துளி இரத்தம் கூட விழாமல் மாகாளி அனைத்து இரத்தத்தையும் குடித்து உஜ்ஜயின் மக்களை அந்த அசுரனிடமிருந்து காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது. மகாலக்ஷ்மி மற்றும் மகாசரஸ்வதி சிலைகளுக்கு நடுவில் மகா காளி சிலை உள்ளது. காளி சிலை சிந்தூர நிறத்தில் இங்கு காணப்படும். இங்கு இரண்டு உயரமான தீபம் ஏற்றும் தூண்கள் உள்ளது. நவராத்ரி விழாவின் போது இந்த தூண்களில் விளக்கு ஏற்றுவார்கள் என்று சொன்னார்கள்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

மகாகாலேஸ்வர் கோவில், உஜ்ஜயின் (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)

மகாகாலேஸ்வர்



மத்யபிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜையின் என்ற ஊரில் உள்ளது இந்த சிவாலயம். மிகவும் பிரசித்தமான ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று இது. கும்பமேளா நடக்கும் ஊர்களில் உஜஜயினியும் ஒன்று. கோவில் வளாகம் மிக பெரியது. மூலவரை தரிசனம் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. தரைத் தளத்திலிருந்து நில மட்டத்துக்கு கீழே அமைந்திருக்கிறது மூலஸ்தானம். மூலஸ்தானம் செல்லும் வழியில் ஒரு குளக்கரையும் உள்ளது. சற்று பிரம்மாண்டமான அமைப்புடன் கூடிய கோவில் இது. சற்று பெரிய நந்தியும் சிவபெருமானையும் தள்ளி இருந்து தான் தரிசனம் செய்ய முடிந்தது. டிக்கெட் வாங்கி உள்ளே செல்ல அனுமதி இருந்தாலும் நாங்கள் சென்ற நேரம் அந்த தரிசன நேரம் முடிந்ததென சொன்னார்கள். உள்ளே பிள்ளையார், பார்வதி மற்றும் கார்த்திக் (முருகன்) சன்னதிகள் உள்ளது என சொன்னார்கள். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு சிவ பெருமான்  தெற்கு நோக்கி அமைந்திருப்பது. கோவிலின் மூன்றாவது நிலையில் நாகசந்ந்திரேஸ்வர் அமைய பெற்றுள்ளது. நாகபஞ்சமி அன்று மட்டுமே அங்கு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும். இங்கு மகாசிவராத்ரி மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

ஓம்காலேஸ்வர் கோவில், சிவபுரி (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)

ஓம்காலேஸ்வர் கோவில்


இந்த ஆலயம் மிகவும் புராதனமான சிவாலயம். மத்யப்ரதேச மாநிலத்தில் உஜ்ஜயின் என்ற ஊரில் இருந்து சுமார் 140 கி. மீ தொலைவில் காண்ட்வா ரோடில் உள்ள சிவபுரி என்ற தீவில் உள்ளது. நர்மதா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. நதியை படகில் கடந்து தான் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். படகில் சென்று வர ஒரு நபருக்கு 20 ரூபாய் வசூல் செய்கிறார்கள். படகில் ஆலயம் செல்லும் பொழுதே சற்று தொலைவில் நர்மதா அணை தெரியும். அக்கரைக்கு சென்ற பிறகு படிகள் ஏறி மேலே ஆலயத்துக்கு செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியிலயே பஞ்சமுக கணபதிக்கும் பார்வதி தேவிக்கும் தனி சன்னதிகள் இருப்பதை பார்க்கலாம். இங்கும் வட இந்திய கோவில்களில் எல்லாம் உள்ளது  போல சிவ பெருமானுக்கு பக்த ஜனங்கள் நீராபிஷேகம் செய்யலாம். சிவலிங்கம் சற்று தாழ்வாக இருப்பதால்  நாம் கொண்டு போகும் நீரை அதற்கான துவாரம் வழியாக ஊற்றினால் அந்த நீர் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது போல விழுகிறது. இந்த சிவாலயத்துக்கு கீழே ஒரு குகை உள்ளது .அதற்கு பெயர் ஆதி சங்கரர் குகை.ஆதி சங்கரர் அவரது குருவான கோவிந்தபாதரை இந்த குகையில் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. ஓம்காலேஸ்வர் கோவில் அமைந்திருக்கும் மலை ஓம் வடிவத்தில் உள்ளதால் இந்த கோவிலுக்கு ஓம்காலேஸ்வர் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

மாமலேஸ்வர் கோவில்

படகுத்துறைக்கு செல்லும் வழியில் இன்னொரு மிக புராதனமான சிவன் கோவில் உள்ளது. சிலர் இது தான் ஜ்யோதிர்லிங்க கோவில் என்றும் சொல்கிறார்கள். இங்கு ஈசனுக்கு பெயர் மாமலேஸ்வர் அல்லது அம்ரேஸ்வர். முதலாம் நூற்றாண்டு கோவில் என சொல்கிறார்கள். கோவிலின் பழமை பார்த்தாலே தெரியும். இங்குள்ள சிவலிங்கம் ஓம்காலேஸ்வரரை விட சற்று பெரியது. இங்கும் விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. சிதிலமடைந்திருந்தாலும் பழங்கால சிற்ப கலைகள் கண்டு ரசிக்கலாம்.

வியாழன், 1 மார்ச், 2018

சோமாநாத் கோவில், சோமநாத் (12 ஜ்யோதிர்லங்களில் ஒன்று)


குஜராத் மாநிலத்தின் மேற்கு கடற்கரையோரத்தில் உள்ள சோம்நாத் என்ற ஊரில் உள்ளது இந்த புகழ்பெற்ற சிவாலயம். இந்த கோவில் 12 ஜ்யோதிர்லிங்க கோவில்களில் முதலாவது. பல்வேறு முஸ்லீம் மன்னர்களாலும் போர்த்துகீஸ் ஆட்சியிலும் பல முறை படையெடுப்பின் போது முற்றிலுமாக அழிகிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஒரு சரித்திர புகழ் வாய்ந்த சிவஸ்தலம் இது.  தற்போதுள்ள கோவில் 1951 ஆம் ஆண்டு சாளூக்கிய கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்டது. இங்கு மூலவர் நாமம் சோமேஸ்வர் அல்லது சோம்நாத். கோவிலின் காலை மற்றும் மாலை ஆரத்தி தரிசனம் பார்க்க வேண்டிய ஒன்று.

முதன் முதலாக இந்த கோவில் எப்போது கட்டபட்டது என்பதற்கு சரியான வாலாற்று சான்றுகள் இல்லை. ஆனால் இரண்டாம் முறை 6 ஆம் நோற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. பின்பு 7 ஆம் மற்றும் 8 ஆம் நூற்றாண்டில் படையெடுக்கப்பட்டு மீண்டும் கட்டியெழ்ழுப்பப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் முகமது கஜினி படையெடுத்து ஜ்யோதிர்லிங்கத்தை எடுத்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. தவிர கோவிலை சேர்ந்த பெரும் செல்வங்களையும் கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது. பின்பு 12 ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜி விலைமதிப்பற்ற கோவில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான். பின்பு 13 ஆம் நூற்றாண்டில் இரு முறை கோவில் மீது படையெடுத்தார்கள். அதன் பின்பு 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் பல இந்து ஆலயங்கள் மற்றும் மசூதிகளை அழித்தார்கள். அதில் சோமாநாத் ஆலயமும் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப் சோம்நாத் ஆலயத்தை முற்றிலுமாக அழிக்க உத்தரவிட்டார். 17ஆம் நூற்றாண்டில் மாறாத்திய மன்னர் லாகூர் சென்று கோவிலிலிருந்து திருடி சென்ற 3 வெள்ளி கதவுகளை திரும்ப கொண்டு வந்தார். ஆனால் கோவில் பூசாரிகள் மீண்டும் அந்த கதவுகளை கோவிலில் நிறுவ மறுத்ததினால் அந்த கதவுகள் உஜ்ஜைனிலுள்ள மகா காலேஸ்வர் கோவிலிலும்(மற்றொரு ஜ்யோதிர்லைங்க கோவில்) கோபால் கோவிலில் வைத்துள்ளதை இன்றும் பார்க்கலாம். மூன்ஸ்டோன் என்ற பிரபல ஆங்கில நாவலில் சொல்லப்படும் வைரம் சோம்நாத் கோவிலிலிருந்து திருடப்பட்டது தான். சோமாநாத், ஜூனாகத் என்ற சம்ஸ்தானத்தை சேர்ந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பொழுது ஜூனாகத் மன்னர் அவரது சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைத்தார். அதை ஏற்றுக்கொள்ளாத வல்லபாய் பட்டேல் இந்திய ராணுவத்தை அனுப்பி ஜூனாகத் ஐ கைபற்றினார். கைப்பற்றியது மட்டுமில்லாமல் கோவிலை புனருத்தாரணம் செய்ய உத்தரவிட்டார். அங்கிருந்த மசூதியை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு கோவிலை மீண்டும் கட்டியெழுப்பினார். இன்று நாம் காணும் சோம்நாத் ஆலயம் 1951 ஆண் ஆண்டு கட்டியெழுப்பியது தான். இந்த வரலாறு முழுதும் கோவிலில் மிக அழகாக  ஒலி ஒளி காட்சியாக காண்பிக்கிறார்கள். தினமும் இரவு ஆரத்தி முடிந்தவுடன் இரு காட்சிகளாக அரை மணி நேரம் இந்த ஒலி ஒலி காட்சி நடைபெறுகிறது. இதற்கு தனி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கடற்கரையோரம் இந்த கோவில் உள்ளது. வெளிப்புறத்தில் இருந்து கடல் நோக்கி அமர்ந்து இயற்கையை ரசிக்கவும் பெஞ்சுகள் போட்டுள்ளார்கள்.


பாணஸ்தம்பம்


இன்னொரு சுவாரசியமான தகவல் சோம்நாத் கடற்கரையிலிருந்து அண்டார்டிக்கா வரையுள்ள நேர்கோடில் உள்ள ஒரே நிலப்பகுதியில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள அம்பு தூண்(Arrow Pillar) அமைந்திருக்கும் இடம் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையிலான நிலப்பகுதியிலுள்ள புவி நெடுங்கோடின் முதல் புள்ளியாகும். இத்தகவலை பாணஸ்தம்பம்  என்றழைக்கப்படும் அந்த தூணில் வடமொழியில் எழுதி வைத்துள்ளார்கள். இந்த கோவிலில் முன்பு இடிக்கப்பட்ட பார்வதி கோவில் மட்டும் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் அதே இடத்தில் வெறும் அடித்தளத்துடன் அப்படியே விட்டு வைத்துள்ளார்கள்.ஏனென்று தெரியவில்லை. 

பழைய சோம்நாதர் ஆலயம்


கோவிலுக்கு வெளிப்புறம் பழைய சோமநாதர் ஆலயம் என்றொரு ஆலயம் உள்ளது. அதுவும் பார்க்க வேண்டிய ஒன்று.  மராத்தா ராணி அகல்யாபாயி ஹோல்கர் என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த கோவில். அடிக்கடி நடக்கும் படையெடுப்பினால் அழிந்து போகும் சோம்நாத் ஆலயம் குறித்து ராணி அகல்யா மிகவும் வருந்தினார், அவரது கனவில் இங்குள்ள சுயம்புலிங்கம் இருக்கும் இடம் தெரிந்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இங்கு சுயம்பலிங்கம் இருப்பதை கண்டு கோவில் கட்டியதாகவும் கூறப்படுகிறது. வேறு சிலர், படையெடுப்பை தவிர்ப்பதற்காக அசல் சோமேஸ்வர் லிங்கத்தை இங்கு இந்துக்கள் புதைத்து வைத்ததாக கூறுகிறார்கள். இங்குள்ளது தான் அசல் சிவலிங்கம் என அவர்கள் கூறுகிறார்கள். இங்கு பக்தர்கள் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கோவிலை இங்குள்ள மக்கள் அகல்யாபாய் ஹோல்கர் கோவில் என்றும் அழைக்கிறார்கள். 



செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

துவாரகேஷ் கோவில், துவாரகா & நாகேஸ்வரர் கோவில், துவாரகா (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)

துவாரகேஷ் கோவில்




குஜராத் மாநிலத்தில் துவாரகா என்ற ஊரில் உள்ளது இந்த கிருஷ்ணன் கோவில். இந்த மாவட்டத்துக்கு பெயரே தேவபூமி துவாரகா என்பது தான்.  108 திவ்ய தேச கோவில்களில் துவரகீஸ்வர் கோவிலும் ஒன்று. மிகவும் பழமையான கோவில். கோமதி நதி, அரபி கடலுடன் இணையும் முகத்துவாரத்தில்  அமைந்துள்ளது இந்த கோவில். 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் தான் கிருஷ்ணனின் அரண்மனை இருதது என நம்பப்படுகிறது. ஆதி சங்கரர் இந்தியாவில் அமைத்த நான்கு சங்கர மடங்களில் முதல் மடம் துவாரகையில் தான் 9 ஆம் நூற்றாண்டில் நிறுவினார். துவரகீஷ்வர் கோவிலுக்கு முன்பாகவே கோவிலை ஒட்டியே சங்கர மடம் உள்ளது. துவாரகா ஒரு துறைமுக நகரமும் கூட. பண்டைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு ஆழிபேரலையால் துவாரகா நகரத்தின் பெரும்பகுதி நீரில் மூழ்கியதாக நமபப்படுகிறது. கோவிலுக்கு மேல் பறக்கும் கொடிக்கம்பத்தில் சூரியன் மற்றும் சந்திரன் உருவங்கள் காணலாம். இங்கு கிருஷ்ண ஜென்மாஷ்டமி மிக சிறப்பாக கொண்டாடப்ப்டுகிறது. 



                              துவாரகீஷ்வர் 



கோவிலில் கிருஷ்ணர், பலராமர், ருக்மணி, பிரதியும்னன், தேவகி, புருஷோத்தமர், குசேலர் போன்றவர்களுக்கு தனி சன்னதிகள் உண்டு. இந்த கோவில் கிருஷ்ணனின் பேரன் வஜ்ரனாப் என்பவரால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. நான்கு முறை ஆழிபேரலையால் அழிக்கபட்டு ஐந்தாவது முறை மீண்டும் கட்டப்பட்டது தான் தற்போது இருக்கும் கிருஷ்ணர் கோவில். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்நகரத்தின் பழமைக்கு சான்று கூறும்படி பல்வேறு செப்பேடுகளை கண்டெடுத்துள்ளார்கள். இப்பொழுது இருக்கும் துவாரகா நகர குடியிருப்பு ஏழு முறை அழிந்து எட்டாவது முறையாக கட்டமைக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. துவாரகாவிலிருந்து 14 கி.மீ தொலைவில் கோபி என்று ஒரு ஊர் உள்ளது . இங்கு தான் கிருஷ்ணர் கோபிகைகளுடன் ராச லீலைகள் செய்தார் என சொல்லப்படுகிறது. இது ஒரு ஏரிக்கரையில் உள்ளது .ஆனால் தற்பொழுது ஏரியில் நீர் இல்லை. இங்கும் 5000 ஆண்டு பழமையான ஒரு கிரூஷ்ணர் கோவில் உள்ளது.  ஒரு பழமையான வீடு போல உள்ளது இந்த சிறிய கோவில். துவாரகா வில் இருந்து 2 கி மீ தொலைவில் ருக்மணிக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது.  

பேட் துவாரகா


கேஷ்வராஜ்


பேட் துவாரகா என்பது, துவாரகாவின் மேற்கு கடல் எல்லையான  ஓகா(Okha) இல் உள்ள ஒரு கடலோர தீவு, தற்போது கச் வளைகுடா என அறியப்படும் பகுதியின் முகத்துவாரம் தான் இந்த தீவு. 3 கி. மீ சுற்றளவுள்ள இந்த தீவில் மக்கள் வசிக்கிறார்கள். இது துவரகா நகரத்தில் இருந்து சுமார் 19 கி. மீ தொலைவில் உள்ளது. பெரும்பாலும் கடலோர காவல்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த பகுதி. இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இந்த பேட் துவாரகா பகுதியும் கிருஷ்ணர் காலத்தில் துவாரகாவின் பகுதியாக இருந்துள்ளது. தொன்மையான துவாரகா நகரம் எந்த அளவுக்கு பெரிய நகரமாக இருந்தது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. சுனாமி பேரலையில் சிதறுண்டு தனித்து தீவு போல காட்சியளிக்கும், மக்கள் வசிக்கும் இந்த பகுதிக்கு தான் பேட் துவாரகா எனறு பெயர். இந்த பகுதிக்கு மோட்டார் படகில் அழைத்து செல்கிறார்கள். அழைத்து செல்லவும் திரும்ப கொண்டு விடவும் நபருக்கு 10 ரூபாய் என வசூல் செய்கிறார்கள். மகாபாரதத்திலும் ஸ்கந்தபுராணத்திலும் சொல்லப்படும் துவாரகா ,தற்போதைய பேட் துவாரகாவும் இணைந்த ஒரு பெரும் நகரம். கிருஷ்ணரின் தலைநகரம். தொல்பொருள் நிபுணர்கள் சிந்து சமவெளி காலத்தை சேர்ந்த ஒரு நகரம் இந்த பகுதியில் கடலுக்கடியில் புதையுண்டு கிடக்கிறது என சொல்கிறார்கள். இந்த தீவில் கேஷவராஜ் கோவில் என்ற ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு மீனவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். மீன்பிடி தொழில் தான் அவர்களது வாழ்வாதாரம். பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அருகில் உள்ளதால் குஜராத் மீன்வர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் பொழுது பாகிஸ்தான் கடற்படை அவர்களை அடிக்கடி கைது செய்கிறார்கள்.


நாகேஸ்வரர் கோவில், துவாரகா (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)



இந்த கோவிலும் துவாரகாவில் உள்ளது. 12 ஜ்யோதிர்லிங்கங்களில் இந்த ஆலயமும் உள்ளது என கூறப்படுகிறது. இந்த ஆலயம் துவராகாவில் இருந்து சுமார் 16 கி மீட்டர் தொலைவில் உள்ளது .இது புராதன கோவில் என சொன்னாலும் கோவிலை பார்த்தால் ஒரு நவீன் கோவில் போல தெரிகிறது. இந்த கோவில் குறித்து ஒரு சர்ச்சையும் உள்ளது. உண்மையான நாகேஸ்வர் கோவில் என்ப்து உத்தராகண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற ஊரில் உள்ளது தான் 12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேஸ்வர் ஆலயம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.  புராணாத்தில் தூராகவன என்று குறிப்பிட்டதை வைத்து இந்த கோவிலை தவறாக நாகேஸ்வர் கோவில் என சொல்கிறார்கள் என்பது சிலரது வாதம். ஆனால் இந்த இடத்தில் எந்த வனமும் இருந்ததாக தெரியவில்லை. 

செவ்வாய், 16 ஜனவரி, 2018

பீமாஷங்கர் ஆலயம் (12 ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று)



2017 நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நாங்கள் சென்று வந்த பீமஷங்கர் (மகாராஷ்ட்ரா), த்வாராகேஷ்வர்,நாகேஷ்வர், சோமநாதர் ஆலயம் (குஜ்ராத்),உஜ்ஜைன் மகாகாலேஷ்வர், மகா காலிகா மா, கால பைரவர் மற்றும் ஓம்காரேஷ்வர், மகாகாலேஷ்வர்(மத்திய பிரதேசம்) கோவில்களை பற்றி இனி வரும் பதிவுகளில் எழுத உள்ளேன்.

பீமாஷங்கர் ஆலயம் அடர்ந்த வனபகுதியில் புனேயிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது. நாங்கள் புனேயிலிருந்து வாடகை காரில் இந்த கோவிலுக்கு சென்று வந்தோம். இது 12 ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று. மேற்கு மலை தொடர்ச்சியில் உள்ள சாயாத்ரி மலைகள் என்று இதற்கு பெயர். இங்கிருந்து தான் பீமா நதி உற்பத்தியாகிறது.

ஸ்தலபுராணம்: இங்கு பீமா என்று ஒரு அசுரன் வாழந்ததாகவும் (கும்பகர்ணனின் மகன்) வாழ்ந்ததாகவும், அவன் விஷ்ணுவை பழிவாங்குவதற்காக தவமிருந்து பிரம்மனிடம் வரம் பெற்று மூவுலகத்தில் உள்ள அனைத்து தேவர்களையும் தனது செயல்களால் மனவருத்தம் அடைய செய்கிறான். இவனது தீய செய்லகளிலிருந்து தங்களை காப்பாற்றிகொள்ள பிரமன் தலமையில் அனைத்து தேவர்களும் சிவ பெருமானை வேண்டுகிறார்கள். கமரூபேஷ்வர் என்ற சிவனடியாரை பீமா துன்புறுத்தி சிவனை வணங்காமல் தன்னை வணங்க வாற்புறுத்துகிறார். சிவனைடியார் அவ்வாறு செய்ய மறுக்கிறார். கோபமடைந்த பீமா உடனே அவர் பூஜை செய்யும் சிவலிங்கத்தை அழிக்க வாளை எடுக்கிறான். கோபமுற்ற சிவபெருமான் அங்கு பிரத்யக்ஷ்மாயி பீமா என்ற அசுரனை பஸ்மாமாக்கிறார். நாரதர் மற்றும் மற்ற தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவ பெருமான் அங்கயே தங்கி அருள் புரிவதாக ஸ்தலபுராணம். பீமன் என்ற அரக்கனை அழித்ததினால் இங்கு சிவவபெருமானுக்கு பெயர் பீமாஷங்கர். பீமனுடன் நடத்திய போரின் போது சிவபெருமானின் உடலிலிருந்து வந்த வியர்வை தான் பீமா நதியாக உருவாகியது என இங்கு நமபப்படுகிறது.

இன்னொரு ஸ்தலபுராணம் சிவபெருமான் இங்கு ஆதியும் அந்தமுமில்லா ஜ்யோதியாக காட்சியளித்தார் என்பது தான். இது 13 ஆம் நூற்றாண்டு கோவில் என சொல்லப்ப்டுகிறது. வீர சிவாஜி 18 ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

மலை ஏறி சென்றாலும் கோவில் தாழவான பகுதியில் உள்ளது. படிகளில் கீழ் நோக்கி இறங்க வேண்டும். சமதளத்தில் கோவில் உள்ளது. வட நாட்டு கோவில்கள் போல இங்கும் சிவலிங்கத்துக்கு நாம் அபிஷேகம் செய்யலாம்.

கோவில் உள்ளே செல்லும் இடத்தில் முதலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது .நேரே எதிர்புறமாக மூலஸ்தானம் உள்ளது.
மூலஸ்தானம் சுயம்புலிங்கம்.நந்தி முன்புறம் அர்த்தமண்டபத்தில் உள்ளது. சன்னதிக்கு வெளியில் காலபைரவருக்கு சன்னதி உள்ளது.


கோவிலுக்கு 1 கி.மீ முன்னதாக ஒரே ஒரு ஹோட்டல் உள்ளது .அதை தவிர்த்து கோவிலுக்கு அருகில் ஏதுமில்லை. சிறு கடைகள் கோவில் அருகில் உள்ளது. 

தபகேஷவ் மகாதேவ் கோவில், டெராடூன்


தபகேஷவ் மகாதேவ் 

ரிஷிகேஷிலிருந்து மசூரி சென்றோம். இது ஒரு மலை பிரதேசம். சரியான குளிர். இங்கிருந்து தான் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி செல்ல வேண்டும் (கங்கை மற்றும் யமுனை உற்பத்தியாகும் இடங்கள்) நாங்கள் அங்கு செலவில்லை. ஆனால் மசூரியில் ஒரு நாள் தங்கிருந்தோம். அங்கு மிகவும் உயரமான சிகரமான gun hill பாயிண்ட் என்ற இடத்துக்கு ரோப் காரில் சென்றோம். அங்கு சிகர உச்சியிலிருந்து இமைய மலையை 360 டிகிரி கோணத்தில் காணலாம். மிகவும் ரம்மியமாக இருந்தது. அங்கு சுமார் 6 டெலெஸ்கோப் சிறிதும் பெரிதுமாக வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் பார்த்தால் பனியால் மூடிய இமையமலை சிகரங்கள் காணலாம். டெலெஸ்கோப் மூலம் யமுனோத்ரி பார்க்கலாம். பனி குறைவாக உள்ள நாட்களில் கங்கோத்ரியும் தெரியும் என சொல்கிறார்கள்.

பின்பு அங்கிருந்து டெராடூன் வந்தோம். அங்கு தபகேஷவ் மகாதேவ் கோவிலுக்கு சென்றோம். இது ஒரு மிக பிரசித்தமான சிவன் கோவில். இங்கு மூலஸ்தானம் இயற்கையாக அமைந்த ஒரு குகைக்குள் உள்ளது. அந்த பாறையிலிருந்து நீர் சிவ பெருமான் மேல் தொடர்ந்து அபிஷேகம் செய்வது போல விழுந்துகொண்டே இருக்கிறது. இந்த குகைக்கு பெயர் த்ரோணர் குகை. த்ரோணர் இந்த குகையில் தங்கியிருந்ததாக நம்பபடுகிறது. 



ஒரு வனதிற்கு நடுவில் ஒரு நதிக்கரையில் இந்த அழகான கோவில் அமைந்துள்ளது. ஆற்றை தாண்டி அடுத்த கரையில் ஒரு ஆஞ்சநேயர் குகை கோவில் உள்ளத .மறுகரைக்கு செல்ல ஒரு சிறு பாலம் உள்ளது.


திங்கள், 18 டிசம்பர், 2017

ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவர் கோவில்

பல்வேறு சொந்த காரணங்களால், எனது வலைபதிவுகளை தொடர்ந்து எழுத முடியாமல் இருந்ததுது. ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் எழுதுகிறேன்.  ஹரித்வாரில் தக்ஷன் கோவில் மற்றும் பவன் தாம் போன்ற கோவில்களையும் பார்த்த பிறகு நாங்கள் ரிஷிகேஷ் சென்றடைந்தோம். ரிஷிகேஷில் கங்கை கரை ஓரம் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். அங்கிருந்து பார்த்தால் லக்ஷ்மண் ஜூலா தெரியும். லக்ஷ்மண் ஜூலா என்பது கங்கையின் இரு கரைகளையும் இணைக்கும் ஒரு தொங்கு பாலம். இந்த பாலம் இருக்கும் இடத்தில் லக்ஷ்மணன் ஒரு கயிறு மூலமாக இந்த கரையில் இருந்து அந்த கரைக்கு கடந்ததாக நம்பப்படுகிறது. அதனால் அதற்கு லக்ஷ்மண் ஜூலா என்று பெயர். 1924 ஆம் ஆண்டு கங்கையில் வந்த வெள்ள பெருக்கால் பாலம் அடித்து சென்ற போது 1930 ஆண்டு பொதுபணித்துறையால் மீண்டும் கட்டப்பட்டது. இதற்கு இணையாக 2 கி.மீ தள்ளி இன்னொரு பாலம் உள்ளது. அதற்கு ராம் ஜூலா என்று பெயர்.

 
லக்ஷ்மண் ஜூலா
லக்ஷ்மண் ஜூலா வழியாக அக்கரைக்கு சென்று அங்கிருந்து டாக்ஸி அல்லது Van மூலம் நீலகண்டர் கோவிலுக்கு செல்ல வேண்டும். போக வர ஒரு நபருக்கு 120 ரூபாய் வாங்கினார்கள். மலை மேல் செல்லும் பாதை மிகவும் குறுகலாகவும் மோசமாகவும் இருந்தது. வழி நெடுக குரங்குகள் இருந்தன. நாங்கள் சென்ற வண்டியை தொற்றிக்கொண்டே குரங்குகள் வந்தது. கீழே கங்கை நதி ஓடுவதை பார்த்து கொண்டே மலை மேல் செல்லலாம். கோவிலுக்கு சிறிது முன்பே வண்டிகள் நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து சிறிது தூரம் நடந்து தான் போக வேண்டும். இந்த கோவில் கோபுரம் நாம் தமிழ்நாடு கோவில்கள் கோபுரம் போன்று உள்ளது. சுற்றிலும் அடர்ந்த காடுகளுக்கு நடுவே கோவில் உள்ளது. தேவர்களும் அசுரர்களும் சமுத்திரத்தில் அமிர்தம் கடைந்த போது வந்த நஞ்சை இந்த இடத்தில் தான் சிவ பெருமான் அருந்தி தன் கண்டத்தில் நிறுத்தி நீல நிறமாக காட்சியளிதிதார் என்பது வரலாறு. சிவராத்ரி சமயங்களில் பக்தர்கள் ஹரித்வாரிலிருந்து இந்த கோவிலுக்கு பாதயாத்திரையாக வருவது வழக்கம். வடநாட்டில் உள்ளது போல இங்கும் சிவலிங்கம் தாழ்வாக உள்ளது. இங்கும் நாம் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்யலாம். தரிசனம் செய்த பின்பு கீழே வந்தோம்.
நீலகண்ட மகாதேவர் கோவில்
 
திரிவேணி காட் 






ரிஷிகேஷிலும் ஹரித்துவார் போலவே காலையிலும் மாலையிலும் கங்கா ஆர்த்தி செய்கிறார்கள். இதை காண்பதற்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறார்கள். திரிவேணி காட் மற்றும் பரமார்த்த நிகேதன் என்று இரு இடங்களில் கங்கா ஆர்த்தி செய்கிறார்கள். இரண்டு இடங்களிலும் நாங்கள் கங்கா ஆர்த்தி பார்த்தோம். ஒரு நாள் மாலை திரிவேணி காட்டிலும் இன்னொரு நாள் பரமார்த்த நிகேதனிலும் பார்த்தோம். பஜன் முடிந்தவுடன் ஆர்த்தி காட்டுகிறார்கள். படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கும் பக்தர்களிடமும் ஆரத்தி தட்டு தருகிறார்கள். நாமும் கங்கைக்கு ஆரத்தி காண்பிக்கலாம். ஹரித்துவாரில் செய்தது போலவே இங்கும் செய்கிறார்கள். கங்கையில் தீபம் பக்தர்கள் மிதக்கவிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்த ஒரு மிக பெரிய சிவ பெருமான் சிலையை 2013 இல் வந்த மிக பெரிய வெள்ளம் அடித்து சென்று விட்டது.



                                                                           பரமார்த்த நிகேதன்

இது தவிர ரிஷிகேஷ் ஊருக்குள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த இரு கோவில்கள் உள்ளது. (எழுமலையான் கோவிலும் சந்திரமௌலீஸ்வரர் கோவிலும்). இரு கோவில்களும் அருகருகே உள்ளது. தேவஸ்தானத்தை சேர்ந்த தங்கும் விடுதிகளும் இங்கு உள்ளது. 









வெள்ளி, 5 மே, 2017

பில்கேஷவர் கோவில் ஹரித்வார்


ஹரித்வாரிலுள்ள மற்றொரு புராதன கோவில் பிகேஷ்வர் மந்திர். சிறிய கோவில் தான். மரங்கள் சூழ அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த இடத்தின் ஸ்தல புராணம் ஹிந்தியில் ஒரு கல்லில் இங்கு எழுதி வைக்கபட்டுள்ளது. இங்கு ஒரு விலவ் மரம் உள்ளது.வில்வ மரத்தை ஹிந்தியில் பில்வ என சொல்லுகிறார்கள். இங்கு பார்வதி தேவி அமர்ந்து சிவ பெருமானை வேண்டி தவம் இருந்ததாக ஒரு இடம் உள்ளது. அந்த தவத்தின் பொருட்டு சிவ பெருமான் இந்த வில்வ மரத்தின் கீழ் தோன்றி அம்பாளுக்கு காட்சியளித்ததாக ஸ்கந்தபுராணத்தில் கூறபட்டூள்ளது என இங்கு எழுதி வைத்துள்ளார்கள். பக்தர்கள் ஈசனுக்கு வில்வ இலைகளை போட்டு கங்கா நீரில் இங்கு அபிஷேகம் செய்யலாம். நந்தியும் உள்ளது .


அது தவிர பிள்ளையார், ஆஞ்சநேயர் மற்றும் பார்வதி தேவிக்கு தனி சன்னதிகளும் உள்ளது.




புதன், 26 ஏப்ரல், 2017

சண்டிதேவி கோவில் மற்றும் மாயா தேவி கோவில் ஹரித்துவார்

சண்டிதேவி கோவில்
மானசா தேவி கோவில் பதிவு எழுதிய அடுத்த வாரமே சண்டி தேவி பதிவும் எழுத வேண்டியது. பல்வேறு காரணங்களால் இந்த பதிவு எழுத தாமதமாகி விட்டது.

இந்த கோவிலில் இருக்கும் சண்டி தேவி ஆதி சங்கரரால் 8 ஆம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என நம்படுகிறது. இருந்தாலும் 1929 ஆம் ஆண்டு காஷ்மீர் மன்னரால் இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. இதுவும் ஒரு சக்தி பீடமே. ஹரித்வாரில் 3 சக்தி பீடங்கள் உள்ளன. ஒன்று மானசா தேவி, மற்ற இரண்டும் சண்டி தேவி ,மாயா தேவி ஆகியவைகளாகும். சண்டி தேவிக்கு இன்னொரு பெயர் சண்டிகா. தேவி. சிவனின் காலடி என சொல்லப்படும் கங்கா ஆரத்தி நடக்கும் இடத்திலிருந்து சுமார் 4 கி. மீ தொலைவில் இந்த கோவில் அடிவாரம் உள்ளது. இங்கும் ரோப் காரில் மலை மேலே கொண்டு விடுகிறார்கள். பின்பு அங்கு சிறிது உயரத்திலுள்ள மலை மீதுள்ள கோவிலுக்கு படிகள் வழி செல்ல வேண்டும். படிகளின் இரண்டு புறமும் எக்கச்சக்கமாக குரங்குகள் இருப்பதை காணலாம்



இந்த மலைக்கு நேர் எதிரில் இன்னொரு சிறிய மலையும் மலை உச்சியில் இன்னொரு கோவிலும் உள்ளது . அது அநுமனின் தாயார் அஞ்சனை மாதாவின் கோவில். அந்த கோவிலுக்கு நடந்து தான் போக வேண்டும். அந்த மலை ஏறமுடியாதென்பதால் நாங்கள் அங்கு செல்லவில்லை.

ஸ்தல புராணம்: சும்பன் நிசும்பன் என இரண்டு அரக்கர்கள் இந்திரலோகத்தை அடைந்து இந்திரனை அங்கிருந்து விரட்டி அடிக்கிறார்கள். கடவுளின் தப வலிமையால் பார்வதி தேவி சண்டிதேவியின் உருவில் அவதாரம் எடுக்கிறாள். சண்டி தேவியின் அழகில் மயங்கிய அசுரன் சும்பன் சண்டியை மணக்க விரும்புகிறான். சண்டி தேவி மறுக்கவும் சண்டா முண்டா என்ற இரண்டு அரக்கர்களை அனுப்பி சண்டி தேவியை கொலை செய்ய சொல்கிறான். ஆனால் கோபமுற்ற சண்டி தேவி சாமுண்டா என்ற அரக்கனின் ரூபத்தில் சும்பனையும் நிசும்பனையும் வதம் செய்கிறாள். அதன் பிறகு இந்த நீல பர்வதத்தின் மேல் வந்து சற்று நேரம் ஓய்வெடுக்கிறாள். அந்த புராணக்கதையை குறிக்க இந்த மலை மேல் இந்த கோவில் எழுப்பபட்டதாக சொலப்படுகிறது. அதனாலயே இந்த மலையில் உள்ள இரண்டு சிகரங்களுக்கும் பெயர்கள் சும்பன் என்றும் நிசும்பன் என்றும் வைக்கபட்டுள்ளது.

ஹரியானா ,மகாராஷ்ட்ரா ,நேபால் மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் போன்ற பல வட மாநிலங்களிலும் பல ஊர்களில் சண்டி தேவி கோவில்கள் மிகவும் பிரசித்தம். பார்வதியின் ஒரு அவதாரமாகவே சண்டி தேவியை வட இந்திய மக்கள் வழிபடுகிறார்கள். சண்டிகர் நகரத்திற்கு அந்த பெயர் வர காரணமே அங்குள்ள சண்டி தேவி ஆலயம் தான்.


மாயா தேவி கோவில் 

மாயாதேவி கோவில் ஹரித்வார் நகருக்குள்ளே இருக்கிறது, மாயா தேவி கோவிலும் ஒரு சக்தி பீடமே. ஹரித்வார் செல்பவர்கள் முக்கியமாக இந்த 3  சக்தி பீடங்களும் தரிசனம் செய்கிறார்கள். மாயாதேவி மூன்று தலை நான்கு கைகளுடன் கூடிய ஒரு அம்மன். ஹரித்வார் ஒரு காலத்தில் மாயாபுரி என்றே அழைக்கபட்டிருந்தது

 
காளி தேவி, மாயா தேவி, காம்க்யா தேவி 
இந்த கோவிலில் மூல ஸ்தானத்தில் 3 அம்மன் சிலைகள் உள்ளது. நடுவில் மாய தேவியும் இடது புறம் காளியும் வலது புறம் காம்க்யா தேவியும் உள்ளனர். காம்க்யா தேவி என்பது தென்னிந்தியாவில் நாம் வழிபடும் திருபுரசுந்தரி தான். மிக சிறிய கோவில் தான் ஆனால் புராதனமானது.

அடுத்த பதிவில் ஹரித்வாரில் உள்ள மிக பழமையான பில்கேசவ் மகாதேவ் கோவில் மற்றும் தக்ஷேஸ்வர் மகாதேவா கோவில் பற்றி எழுத உள்ளேன். 




வியாழன், 23 பிப்ரவரி, 2017

மானசா தேவி கோவில் ஹரித்வார்

மானசா தேவி கோவில் ஹரித்வார்


ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ்  பயணத்தின் போது தரிசத்த கோவில்களை பற்றி எழுத உள்ளேன். முதலில் ஹரித்வார் சென்றடைந்தோம். டெராடூன் வரை விமான பயணம்,பின்பு அங்கிருந்து சாலை வழியாக ஹரித்வார் சென்றடைந்தோம், சுமார் 52 கி. மீ சாலை வழி பயணம். ஹரித்வாரில் இரண்டு மலை கோவில்கள் பிரசித்தம். ஒன்று மானசா தேவி கோவில். மற்றொன்று சண்டி தேவி கோவில். இரண்டு கோவில்களும் எதிர் எதிர் உள்ள இரண்டு மலைகளின் உச்சியில் உள்ளது. இரண்டு மலைகளுக்கு நடுவில் சுமார் 4கி.மீ இடைவெளி இருக்கும். இந்த பகுதியில் தான் கங்கை நதி ஓடுகிறது. இரண்டு கோவில்களுக்கும் ரோப் காரில் தான் செல்ல வேண்டும். இரண்டு கோவிலுக்கும் நடந்து செல்ல மலை பாதை வழி இருந்தாலும் பெரும்பாலும் பக்தர்கள் அனைவரும் ரோப் கார் வழியே செல்கிறார்கள். இரு கோவில்களுக்கான  ரோப் கார் பயணம் (போகவும் வரவும்) மற்றும் மானசா கோவிலில் இருந்து சாலை வழியே சண்டி தேவி கோவில் மலை அடிவாரதிற்கு அழைத்து செல்வது மற்றும் திரும்ப சாலை வழியே  அழைத்து வருவது உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 320 க்கு டிக்கட் கட்டணம் வசூலிக்கிறார்கள். .


ரோப் கார் 

ரோப் காரில் மலை உச்சிக்கு சுமார் 1770 அடி பயணம் செய்ய வேண்டும். ரோப் காரில் செல்லும் போதே கீழே ஹரித்வார் நகரத்தின் நிலபரப்பும் கங்கை நதி ஓடும் காட்சியையும் பார்க்கலாம். ஹிமாலய மலைகளிலுள்ள கங்கோத்ரியில் இருந்து துவங்கும் கங்கை நதி முதன் முதலாக சமவெளியில் ஓடுவது ஹரித்வாரிலிருந்து தான்.

மானசா தேவி கோவில் இருக்கும் மலைக்கு பெயர் வில்வ மலை. ஹிந்தியில் 'பில்வ பர்வத்' என்று அழைக்கிறார்கள். 52 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. கஷ்யப முனிவரின் மனதில் தோன்றியதால் அம்மனுக்கு மானசா தேவி என்று நாமம். பக்தர்கள் மனசில் நினைக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதாலும் அம்மனுக்கு மானசா தேவி என்று பெயர்.  மானசா தேவி ஒரு நாக கடவுளாக வணங்கபடுகிறது. இந்த கோவிலில் இரண்டு மானசா தேவி சன்னதி உள்ளது, ஒரு சன்னதியிலுள்ள அம்மன் சிலைக்கு ஐந்து கைகளும் மூன்று முகங்களும் இருக்கிறது, இன்னொரு அம்மன் சிலைக்கு எட்டு கைகள் தென்படுகிறது.

இந்த கோவிலில் ஒரு புனித மரம் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற கயிரை மரத்தை சுற்றி கட்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய உடன் மீண்டும் வந்து அந்த கயிரை அவிழ்க்க  வேண்டும்  என சொல்கிறார்கள். மானசா தேவியும் சண்டி தேவியும் பார்வதியின் அமசம் என்றும் சொல்கிறார்கள்.

ஹரித்வார் தவிர பல வட மாநிலங்களிலும் மானசா தேவி கோவில்களை காணலாம். வங்காளம், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் மானசா தேவி கோவில்கள் மிகவும் பிரசித்தம்.

'கங்கா ஆர்த்தி

 இன்னொரு முக்கிய அம்சம் ஹரித்வார் கும்பமேளா நடக்கும் ஊர்களில் ஒன்று. இங்குள்ள கங்கை நதிக்கரையில் "ஹர் கி பௌரி" என்று ஒரு இடம் உள்ளது. இதற்கு ஹரனின் காலடி என்பது அர்த்தம் அதாவது "சிவனின் காலடி" என்று பொருள். இந்த இடத்தில் தினமும் மாலை கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து பூஜை செய்கிறார்கள். பஜனை பாடி ஆரத்தி காண்பித்து மலர் தூவி தீபங்களை கங்கை நதியில் மிதக்க விட்டு பூஜை செய்கிறார்கள். இதற்கு மக்கள பெரும் திரளாக தினமும் மாலை கூடுகிறார்கள். இதற்கு 'கங்கா ஆர்த்தி' என பெயர். ஹரித்வாரில் இதே போன்று கங்கா ஆர்த்தி இன்னும் இரண்டு இடங்களில் தினமும் மாலை கங்கை கரையில் நடைபெறுகிறது, ஆனால சிவன் காலடி என சொல்லப்படும் இந்த இடத்தில் நடக்கும் ஆரத்தி தான் மிகவும் பிரசித்தம். இதே போன்று தினமும் கங்கா  ஆரத்தி நடக்கும் மற்ற இரண்டு ஊர்கள் காசி மற்றும் ரிஷிகேஷ்.  ஏற்கனவே காசியில் நடக்கும் கங்கா ஆரத்தி பற்றி எனது காசி பயண பதிவில் எழுதியுள்ளேன்.

மானசா தேவி கோவில் தரிசனம் முடித்து திரும்பும் வழியிலயே சண்டி தேவி கோவிலுக்கு செல்வதற்கான பஸ் நிற்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து சாலை வழியே சண்டி தேவி கோவில் செல்வதற்கான மலை அடிவாரதிற்கு அழைத்து செல்கிறார்கள். அங்கிருந்து சற்று தூரம் நடந்து ரோப் கார் இடத்த்கிற்கு செல்ல வேண்டும். அடுத்த பதிவில் சண்டி தேவி கோவில் பற்றி எழுதுகிறேன். 



வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிபுலியூர்

தற்போது கடலூர் என அறியப்படும் ஊரே திருப்பாதிரிபுலியூர். இன்றும் கடலூர் தொடர்வண்டி நிலையத்தில் ஊர் பெயர் திருப்பாதிரிபுலியூர். என்றே உள்ளது. 

இந்த ஊரில் இருக்கும் சிவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது.பாடல் பெற்ற ஸ்தலம். இறைவனின் திருநாமம் பாடலேஸ்வரர், அம்மன் பெயர் பெரியநாயகி மற்றும் அருந்தவ நாயகி. தல விருட்சம்- பாதிரி மரம். திருநாவுக்கரசரரும்,திருஞானசம்பந்தரும் இக்கோவில் குறித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மன்னர் மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரை கல்லுடன் சேர்த்து கட்டி கடலில் வீசியபோது அப்பரடிகள்  

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயமே 

என பாடி கரைசேர்ந்த அதிசயம் நிகழ்ந்த ஊர். இன்றும் அப்பர் கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்" என அறியப்படுகிறது. திருநாவுக்கரசரை முதல் முதலில் ஞானசம்பந்தர் அப்பர் என அழைத்த தலமும் இதுவே.இங்கு இருக்கும் சிவ பெருமான் ஒரு சுயம்பு மூர்த்தி. ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். பலமுறை நடந்த ஆட்டத்திலும் சிவ பெருமான் தோல்வியுற்றார். ஆனால் வெற்றி தங்கே என கூறினார். உடனே பார்வதி தேவி இறைவனின் முகத்தை தான் கைகளால் மூடுகிறாள். உடனே உலகம் முழுதும் இருண்டு விடுகிறது. இறைவனின் அருள் வேண்டி அம்மன் அரூபமாக இருந்து தவம் செய்கிறாள். 
இப்படி தேவி அரூபமாக இருந்து தவம் செய்த இடம் தான் இந்த கோவில். சுவாமி சன்னதியில் அம்மன் உருவமில்லாமல் இருந்து ஸ்வாமியை வழிபட்ட இடம் இன்றும் அருந்தவநாயகி சன்னதி உள்ளது. உருவமில்லாமல் இருப்பதால் அங்கு வெறும் பீடம் மட்டுமே உள்ளது. பொதுவாக சிவன் கோவில்களில் பள்ளியறை அம்மன் சன்னிதியிலயே இருக்கும். இங்கு மட்டும் பள்ளியறை ஸ்வாமி சன்னதியில் உள்ளது. அம்மன் இங்கு தினமும் பள்ளியறைக்கு எழுந்தருளுவதாக ஐதீகம். 

இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடல்கள் இயற்றியுள்ளார். புலிக்கால் முனிவர் என்பவர் தவம் செய்த இடம் இந்த ஊர். அதனாலயே இந்த ஊர் பாதிரிபுலியூர் என அறியப்படுகிறது. 

சனி, 27 ஆகஸ்ட், 2016

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்

மீனாக்ஷி அம்மன்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனது வலைதளதிற்கு வந்த பின்னூட்ட்ங்களில் ஒரு நண்பர்,மதுரைக்காரன் என பெயர் வைத்து கொண்டு மீனாக்ஷி அம்மன் கோவிலை பற்றி ஏன் இன்னும் எழுதவில்லை என கேட்டிருந்தார். உண்மையில் நான் இந்த வலை பதிவை ஆரம்பித்த புதிதில் முதல் பதிவு மீனாக்ஷி அம்மன் கோவிலை பற்றி தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். பின்பு அதற்கு பதிலாக வாரியார் சுவாமி அருளிய மீனாக்ஷி அந்தாதி தான் எனது முதல் பதிவாக இருந்தது. இருந்தாலும் பிறிதொரு சமயம் மீனாக்ஷி அம்மன் கோவில் குறித்து எழுதாலாம் என இருந்தேன். இந்த பதிவில் மீனாக்ஷி அம்மன் கோவில் குறித்து மிகவும் விரிவாக எழுதியுள்ளேன்.


இந்தியாவின் மிக பழமையான ஐந்து நகரங்களில் ஒன்று மதுரை.  மற்ற நான்கு நகரங்கள் காசி, பாட்னா, உஜ்ஜைன் மற்றும் புஷ்கர் என்பவையாகும். இன்னும் சொல்ல போனால் மதுரை தான் இந்தியாவிலயே மிகவும் தொனமையான நகரம். நான் குறிப்பிடுவது குமரி கண்டத்தில் மூழ்கிய பழைய தென் மதுரையை.

     மதுரையின் வான் பார்வை 

மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ஆம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மெகஸ்தனிஸின் வருகைக்குப் பிறகு, ஏராளமான ரோமானியர்களும், கிரேக்கர்களும் மதுரைக்கு வந்து பாண்டிய அரசர்களுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்தனர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு பாண்டி நாட்டிலிருந்து முத்து, மயில் தோகை, அகில், சந்தனம் போன்ற பொருட்கள் ஏற்றுமதியானதாக கிரேக்க நாட்டுப் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.

வால்மீகி ராமாயணமும்,வியாசபாரதமும் கூட பாண்டியர்களைப் பற்றியும் கபாடபுரத்தைப் பற்றியும் பேசுகின்றன

"உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்."
-பரிபாடல்

உரை

நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள் (மதுரை தவிர) அனைத்தினது பெருமைகளையும் ஒரு தட்டிலிடும் நிறையாகவும், தனது (மதுரை) பெருமையை ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு, சீர்தூக்குமிடத்து உலகத்துள்ள ஏனை அனைத்து நகரங்களின் பெருமையும் மெலிந்தேற, தன் பெருமை அங்ஙனம் மெலியாமல் தன் பெருமையாலே துலாத்தட்டு தாழும் தன்மையுடைத்து  பாண்டியன் ஆளும் நான்மாடக்கூடல்நகர்.

இந்தியாவின் மிக பெரிய கோவில்களில் ஒன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில். ஏழு உலக அதிசயங்களுக்கு இந்தியாவில் இருந்து  பரிந்துரைக்கபட்ட அதிசயங்களில் ஒன்று மீனாக்ஷி அம்மன் கோவில்.

அம்மன் பெயர்கள் : மீனாக்ஷி அம்மன்,அங்கயற்கண்ணி
ஸ்வாமி பெயர்    : சுந்தரேஸ்வர்,சொக்கநாதர்  
தொனமை        : 3 ஆம் நூற்றாண்டு கோவில்

சிறப்புகள்-
  • சிவபெருமானுக்கும் மீனாக்ஷி அம்மனுக்கும் திருமணம் நடந்த இடம்.
  •  சிவபெருமானின் பெரும்பாலான திருவிளையாடல்கள் நடந்த இடம்
  •   நக்கீரன் வாழ்ந்த இடம்
  •   சங்க தமிழ் வளர்த்த தொனமை நகரம்
  •   திருவிளையாடல்கள் இடம் பெற்ற பொற்தாமரை குளம் உள்ள கோவில்
  •  ஆயிரங்கால் மண்டபம் உள்ள கோவில்
  •   உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடக்கும் ஊர்.
  •  பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர் மன்னர்கள்  போன்ற பல மன்னர்களால் திருப்பணி செய்யபட்ட பழம்பெரும் ஆலையம்.
  •  நவக்கிரக புதன் ஸ்தலம்.
  •  ராமன்,லக்ஷ்மணன் மற்றும் வருணன் சிவ பெருமானை வணங்கிய இடம்.
  •   நடராஜர் கால் மாற்றி ஆடிய ஊர். வெள்ளியம்பலம் என அறிய படுகிறது .பஞ்ச சபைகளில் ஒன்று. மற்ற எல்லா இடங்களிலும் இடது  காலை  தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்

வெள்ளியம்பல நடராசர்

  •  ஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் இருவராலும் பல பதிகங்கள்  பாட பெற்ற ஸ்தலம்.
  •  குமார்க்குருபரர் பிள்ளை தமிழ் பாடிய ஊர். மீனாட்சியை குழந்தையாக பாவித்த குமரகுருபரர், அவளின் சிறப்புக்களை பாடியபோது, குழந்தை வடிவில் வந்து பாடலை கேட்டாள்.அவருக்கு தன் கழுத்தில் அணிந்து இருந்த முத்து மாலையை எடுத்து அணிவித்தாள். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், அம்பாள் சன்னதியை சுற்றியுள்ள சுவரில் சிற்பமாக உள்ளது. 
  • மெய் ஞானியான நீலகண்டதீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராக திகழ்ந்தார். திருமலை நாயக்கர், இவரை தனது முதலமைச்சராக நியமித்தார். திருமலை மன்னரின் மனைவியின் சிலையை தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலதுதொடையில் ஒரு லேசான சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாக தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றி தெரிவித்தார்.ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும் படி கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். தீட்சிதர் மீனாட்சியம்மைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய், கற்பூர ஜோதியை தம் கண்ணில் வைத்து கண்களைப் பொசுக்கிக் கொண்டார்.மன்னருக்கு செய்தி பறந்தது. அவர் தம் தவறை உணர்ந்து தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்கு திருநெல்வேலி அருகிலுள்ள பாலாமடை என்ற இடத்தை தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவலாயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.
  • சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானபோதுசம்பந்தர் சிவனை வேண்டி திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார். மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர். எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.
  •  நால்வரில் ஒருவரான திருவாதவூரரூ!க்கு சிவ பெருமான் மாணிக்க்கவாசகர் என பெயர் சூட்டிய ஊர்.·
  •  மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படை யெடுப்பின் போது மீனாட்சி அம்மன் திருவுருவத்தையும், சுந்தரேஸ்வரரையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர். கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளது. சுந்தரேஸ்வரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டுஇருந்தது. இது அதிசயமாக கருதப்பட்டது.·
  •  உற்சவ மூர்த்தி அம்மனுக்கு பெயர் பிரியாவிடை அம்மன். பிரியாவிடை என்பது வேறு யாருமல்ல.இறைவனை விட்டு எப்போதும் பிரியாமல் இருக்கும் பார்வதி தேவியே. மீனாக்ஷி அவரது மானிட அவதாரமே.பார்வதி நிலைசக்தி மீனாக்ஷி இயங்கு சக்தி.
  • சிவன் பிட்டுக்கு மண் சுமந்த ஊர் 
  •  சிவபெருமான் நரியை பரியாகவும்,பரியை நரியாகவும் மாற்றிய ஊர்.·
  •  64 சக்தி பீடங்களில் ஒன்று.·
  •  கோவிலின் பரப்பளவு 25 ஏக்கர் 
  • கோவிலை சுற்றியுள்ள தெருக்கள் தமிழ் மாத பெயர்களால் அறியபடுகிறது. ஆடி வீதி,ஆவணி வீதி ,சித்திரை வீதி மற்றும் மாசி வீதி.
  • மொத்தம் 12 கோபுரங்கள் கொண்ட கோவில். மீனாக்ஷிக்கு நான்கு கோபுரங்கள்,சொக்கநாதருக்கு நான்கு கோபுரங்கள், வெளி மதி சுவரில் நான்கு கோபுரங்கள் என 12 கோபுரங்கள் கொண்ட கோவில் · 
  • மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் கிழக்கு கோபுரத்தின் நடுவில் இருந்து மேற்கு கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத்தின் நடு உச்சி வழியாக போகும். அதேபோல், வடக்கு தெற்கு கோபுரங்களுக்கு கோடிட்டு பார்த்தால் சுவாமி சன்னதியை இரண்டாக பகிர்ந்து செல்லும். இது தமிழக சிற்பக் கலைஞர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது,·
  •  மீனாக்ஷி அம்மனுக்கு 1.5 கிலோ எடையுள்ள தங்கத்தாலான கிரீடத்தில் 300 காரட் வைர கற்கள் மற்றும் 154 காரட் பச்சை மற்றும் சிவப்பு கறகளால் அலங்கரிக்கபட்ட வைர கிரீடம் உள்ளது. வெள்ளிக்கிழமைகளிலும் மற்ற பண்டிகைய நாட்களிலும் இந்த கிரீடம் அம்மனுக்கு  சார்த்தப்படும். . இதன் மதிப்பு சுமார் ஒன்றை கோடிக்கு மேல் இருக்கும் என நம்பபடுகிறது
  • ,உலகின் மிக சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்று லண்டனிலுள்ள அஷ்மோலியான் அருங்காட்சியகம், இங்கும் லண்டனிலுள்ள இந்தியன் ஆபீஸ் நூலகம், ஒக்ஸ்போர்ட், மற்றும் ஹூஸ்டன், டெக்ஸாசிலுள்ள மீனாக்ஷி கோவிலகளிலும் மதுரை மீனாக்ஷி கோவிலின் மிகவும் தொன்மைவாய்ந்த புகை படங்களை ஆவண காப்பகத்தில் வைத்துள்ளார்கள்.·
  •  மீனாக்ஷி அம்மனுக்கு வைர கிரீடமும் வைர மூக்குதிதியும் உள்ளது.·
  •  ஆங்கில மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியை சார்ந்த வெள்ளைக்காரர்கள் மீனாக்ஷி அம்மனுக்கு தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார்கள்.ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் ரோஸ் பீட்டர் என்பவரின் கனவில் மீனாக்ஷி அம்மன் தோன்றி தூங்கி கொண்டிருந்த அவரை கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல சொல்லியிருக்கிறார். அவர் வெளியே சென்ற சிறிது நேரத்திலயே அந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்து விட்டது. அதனால் அவர் கோவிலுக்கு தங்க காலணிகளை காணிக்கையாக செலுத்தினார்,
  • இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும்.எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு.·
  • இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
  • சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன,· 
  •  இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம் பிரிசித்தி பெற்றதாகும்

  • மதுரை நகரின் மற்ற பெயர்கள் நான்மாடக் கூடல்,திரு ஆலவாய், மற்றும் கடம்பவனம்,
  •  இங்குள்ள மீனாக்ஷியம்மன் விக்கிரகம் மரகத கல்லால் ஆனது.
  •  இங்கு அம்மனுக்கு செய்யும் அபிஷேகத்தை பக்தர்கள் பார்க்க அனுமதியில்லை,
  •  தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம்  மற்றும் வைகை.
  • கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர்

பொற்தாமரைக் குளம் 





  •  ·             பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம் இன்றும் ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
  • ·    இங்குள்ள சிவலிங்கம் கடம்பமரத்தின் கீழே சுயம்புவாக தோன்றிய லிங்கம்.·    தமிழகத்துக் கோவில்களிலேயே கோபுரத்தில் அதிக அளவு பொம்மைகள் இருப்பது மதுரைக் கோவிலில்தான்
  • ·        கடம்ப மரம்:மீனாக்ஷி அம்மன் கோவில் தற்பொழுது இருக்கும் இடம் முன்பொரு காலத்தில் கடம்பமர வனமாக இருந்த இடம். இந்திரன் கடம்பவன காட்டில் சுயம்புவாக எழும்பிய சிவலிங்கத்தை வழிபட்ட இடத்தில் தான் கோவில் எழுப்பபட்டது என்பது வரலாறு. அதற்கு சாட்சியாக சாமி சன்னதிக்கு வெளிபுறம் துர்க்கை சன்னதிக்கு எதிரில் இன்றும் இந்திரன் அமர்ந்து தவம் செய்த ஒரு கடம்ப மரம் சாட்சியாக உள்ளது. 
கடம்ப மரம் 



  • ·            இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ த்தி (மூக்குத்தி தீபாராதனை) நடக்கிறது. அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

ஆயிரங்கால் மண்டபம் 
  •      ஆயிரங்கால் மண்டபம்: இதில் சப்தஸ்வர ஓசை தரும் ஏழு தூண்கள்     உள்ளன.  பெயர் தான் ஆயிரங்கால் மண்டபம்.ஆனால் 985 தூண்களே உள்ளது 
  • .      வருடத்தின் 12 மாதங்களிலும் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.  
  •       சம்பந்தரால் திருநீற்றுப் பதிகம்பாடப்பட்டது  இந்த தலத்திலேயே.முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து அம்மன் சன்னதி வரும் வழியில் இந்த சாம்பல் உள்ளது மக்களுக்காக இடப்பட்டு இருக்கும்
  •    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பூகோள சக்கரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  •                      சைவமும், வைணவமும், இணைந்து கொண்டாடும்  ஒரு பெருவிழா என்றால், அது மதுரை சித்திரைத் திருவிழா தான்.சைவமும் வைணவமும் போட்டிப் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில்,  இருவரையும் இணைக்கும் விதத்தில் ,வேறு வேறு காலங்களில் நடந்து கொண்டிருந்த,  மதுரை மீனாக்ஷி அம்மனின் திருவிழாவையும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் ,திருமலை நாயக்கர் மன்னர், ஒன்றாய் இணைத்து  கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.


சுழலும் லிங்கம் 
 ·              

  • சுழலும் லிங்கம்: அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் முக்குருணி விநாயகர் அருகில் மேற் கூரையில் இந்த ஓவியம் வரைய பட்டுள்ளது . இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும் லிங்கத்தின் பீடம் நம்மை நோக்கி இருப்பது போல தோன்றும் .கிழக்கு நோக்கி நின்றால் பீடம் உங்கள் பக்கம் திரும்பி விடும்.குறுக்காக நின்று பார்த்தால் அந்த பக்கம் வந்து விடும்.சிவன் எங்கும் இருக்கிறார் என்பதை சுட்டி காட்டும் அதிசய ஓவியம் இது .சுற்றி வந்து எந்த திசையில் இருந்து பார்த்தாலும் நம்மை நோக்கி சுழன்றபடி காட்சி அளிப்பதால் இதற்க்கு சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளார்கள். சமீபத்தில் கோவில் சென்றிருந்த போது நான் இந்த அதிசய லிங்கத்தை புகை படம் எடுத்தேன் .அதையும் இங்கு வெளியுட்டுள்ளேன் . நான் நின்ற பக்கத்திற்கு லிங்கத்தின் பீடம் திரும்பிவிட்டது .அடுத்த முறை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது இந்த அதிசய ஓவியத்தை பார்த்து மகிழுங்கள்.
  •  சுந்தரானந்தர் சித்தர்: சுந்தரானந்தர் ஒரு சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவர் சிவபெருமானின் வடிவம் என்றும் நம்படுகிறது. சுந்தரானந்தர் மதுரை நகரின் வீதிகளில் ஆணைப் பெண்ணாக்கியும், பெண்ணை ஆணாக்கியும், ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும், திடிரென மறைந்தும் பல சித்துக்கள் செய்ததை மக்கள் மன்னனிடம் தெரிவிக்க சித்தரை அரண்மனைக்கு அழைத்துவர ஆள் அனுப்ப, சுந்தரானந்தர் அரசன் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி விட்டார். ஒரு நாள் எதேச்சையாக மன்னரும் சித்தரும் கோயிலில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர்.  அப்போது ஒருவன் கையில் கரும்புடன் நிற்க சித்தருடன் பேசிக்கொண்டிருந்த அரசன், சித்தரே இவன் கையில் இருக்கும் கரும்பை அந்தக் கல்யானை உண்ணும்படியாகச் செய்யுங்கள் என்றார். சித்தர் கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்து கண்சிமிட்டினார். யானை கரும்பை பெற்று உண்டது. மீண்டும் கல் யானையாக மாறியது. அந்தக் கல்யானை கரும்பைத் தின்னது மட்டுமின்றி, மன்னன் கழுத்தில் உள்ள முத்து மாலையையும் தன் தும்பிக்கையை நீட்டி எடுத்தது. தன் தவறை உணர்ந்த மன்னவன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்.அதைக் கண்ட அனைவரும் அதிசயப்பட்டனர்.  கோவிலில் உள்ளே சென்று சித்தர் மறைந்தார். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சமாதி இருக்கின்றது. துர்க்கை சன்னதிக்கு அருகில் சுந்தரானந்த சித்தருக்கு தனி சன்னதி மீனாக்ஷி அமன் கோவிலில் உள்ளது. வியாழக் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக குரு தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். புத்ர பாக்யம் உண்டாகும். புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும். சித்த பிரமை வியாதி குணமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். வயிறு குடல் நோய்கள் தீரும். வறுமை அகன்று வளமான வாழ்வாகும். வேண்டுதல் நிறைவேறிய உடன் சித்தருக்கு பூப்பந்தல்  அலங்காரம் செய்து பூஜை செய்வது மதுரை வாழ் மக்களின் பழக்கம்.
   முக்குறுணி விநாயகர்

  • முக்குறுணி விநாயகர்:  மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுவாமி சன்னதிக்குச் செல்லும் வழியில் எட்டு அடி உயரத்தில் காட்சி தருகிறார்..ஒரு குறுணி என்பது 6 படி. இவ்விநாயகருக்கு 3 குறுணி, அதாவது பதினெட்டு படி பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை  விநாயகர் சதுர்த்தி  நாளன்று இந்த விநாயகருக்குப் டைக்கப்படுகிறது.  எனவே இந்த விநாயகர் முக்குறுணி விநாயகர் என்று அறியப்படுகிறார். .மன்னர் திருமலை நாயக்கர்  வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டும்போது, கண்டெடுக்கப்பட்ட இவ்விநாயகரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்து வழிபட்டனர்.
  • மீனாக்ஷி அம்மன் கோவில் காசி விஸ்வநாதர் சன்னிதி: சுவாமி சன்னதியின் வெளி பிராகாரத்தில் சித்தர் சன்னதிக்கு பின்புறமுள்ள காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி விக்கிரகங்கள் காசி மன்னரால் கோவிலுக்கு வழங்கபட்டது என்று சொல்லப்படுகிறது.
  • சாட்சி கிணறு: மதுரைக்கு அருகில் வாழ்ந்த ஒரு வணிகருக்கு ஏராளமான சொத்துக்களும் ஒரு அழகான மகளும் இருந்தாள்.அவர் தன் மகளுக்கு முறை மாப்பிளையை மணம் செய்ய விரும்பினார். துரதிருஷ்ட வசமாக வணிகர் இறந்து போகவே, அந்த மாப்பிள்ளை கிராமத்திற்கு வந்து அவர் சொத்துக்களை எடுத்துக்கொண்டும், அவர் மகளைக் கூட்டிக்கொண்டும் சென்றான். அங்கும் விதி விளையாடவே, அவன் பாம்பு தீண்டி இறந்தான். இந்த சோக நிகழ்ச்சியைக் கேட்டறிந்த திருஞான சம்பந்த பெருமான், அந்தப் பெண்ணின்பால் கருணை கொண்டு, அந்த மாப்பிள்ளையை உயிர்பித்தார். அதோடு, ஒரு சிவலிங்கம் மற்றும் ஒரு கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு அவர்கள் திருமணத்தை நடத்திச் சென்றார்.அதன் பின்னால் ஒரு உண்மை தெரிய வந்தது; அவன் ஏற்கனவே மணம்முடித்தவன் என்பது. இரு பெண்களுக்கெதிரில் பிரச்சிணை எழுந்தது. முதல் மனைவி, இரண்டாம் பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கேட்க, சாட்சிக்கிணறும் லிங்கமும் அந்த இடத்திற்கு வந்து சாட்சி கூறியதாகவும், அதன் பின்னர் அந்த மூவரும் மீனாட்சியம்மன் கோயிலை நினைவில் கொண்டு வாழ்ந்ததாக அந்தக் கதை இயம்புகிறது. இந்த சாட்சி கிணறு இன்றும் கோவிலில் உள்ளது.
  • வன்னி மர விநாயகர்: மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோவிலில் வன்னி மர விநாயகர் மிகச் சிறப்பு வாய்ந்தவர் .ஆடி வீதியில் யானை கொட்டடிக்கு எதிரில் வன்னி மர விநாயகர் சன்னதி உள்ளது. இங்கு விநாயகரை வேண்டி வணங்கினால் வேண்டிய காரியம் உடனடி நிறைவேறும்.பெண்கள் இங்கு குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுவதை பார்க்கலாம். ராமபிரான் , இராவணுடன் போருக்கு செல்லும் முன் ,வன்னி மரத்தை வணங்கி விட்டு,சென்றதாக புராணங்களில்  கூறப்படுகிறது .வன்னி மரம் சிவ பெருமானின் அம்சம் .இந்த மரத்தடியில் தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும் .வில்வத்திற்கு  அடுத்தது வன்னி மரம் தான் சிவனுக்கு உரியது.
  • கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி: இது துர்க்கை சன்னதிக்கு எதிரில் உள்ள வாசல் வழியே வெளி பிராகாரத்திற்கு வந்தால் காணலாம். இது பிற்காலத்தில் வீரப்பன் அவர்கள் அறநிலைய துறை அமைச்சராக இருந்த பொழுது ஏற்படுத்தபட்ட சன்னதி. இங்கு ஒரு சிறு மண்டபமும் மீனாக்ஷி அம்மனும் சிவ பெருமானும்  திருமண கோலத்தில் இருப்பதையும் காணலாம். பெருமாள் கன்னிகாதானம் செய்யும் காட்சி. புதுமண தம்பதிகள் இங்கு வணங்கி ஆசி பெறுவதை காணலாம் மற்றும் எளிமையாக மாலை மாற்றி திருமணம் செய்யும் பலர் இந்த சன்னதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
  • பழனி தண்டாயுதபாணி,திருத்தணி முருகன்,மற்றும் கழுகுமலை முருகன் போன்றவர்களுக்கும் நவக்கிரக சன்னதிக்கு அருகில் தனி சன்னதிகள் உள்ளது. 
வீரபத்திரர் 


வெண்ணை காளி 

வளரும் ஆஞ்சநேயர் 


  • இதே பிராகாரத்தில் நவகிரக சன்னதி,வீரபத்திரசாமி, பத்திரகாளி, சடையப்பர் மற்றும் தியான மண்டபம் போன்றவைகளை காணலாம். பத்திரக்காளிக்கு இங்கு வெண்ணை சாத்துவது சிறப்பு. பத்திரக்காளிக்கு எதிர்புறம் ஒரு தூணில் ஆஞ்சநேயர் விக்கிரகம் உள்ளது. இந்த ஆஞ்சநேயர் முதலில் இருந்ததை விட காலபோக்கில் சிறிது வளர்ந்துள்ளதாக நம்பபடுகிறது. 
  • அம்மன் சன்னதிக்கு வெளிபிராகாரத்தில் வலது புறம் கூடல் குமரனுக்கு தனி சன்னதி உள்ளது

  • ·மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள் உள்ளன. ஆனால், வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார்.
  • மகாலிலிருந்து மன்னர் திருமலை நாய்க்கர் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு வருவதற்கு சுரங்க பாதை ஒன்று இருந்தது. இச்சுரங்கப் பாதை, இன்றும் சொக்கநாதர் சன்னதியின் வடபுறம் மகாலெட்சுமி சன்னதி அருகே பொற்படியான்என்ற சிறிய கதவை உடையதாக உள்ளது.. கத்வு மட்டுமே உள்ளது .உள்ளே சுரங்கபாதை மூடபட்டுள்ளது என சொல்கிறார்கள்.
    தாயுமானவர் 
     
  •   தாயுமானவர்: கம்பத்தடி மண்டபத்தில் வடக்கு நோக்கிய தூணில், கர்ப்பமான ஒரு பெண் நிற்பதையும், அவளுக்கு கீழே ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கும் நிலையில் நிற்பதையும் காணலாம். கீழே நிற்கும் பெண் தாயுமானவர்எனப்படுவார். சிவபெருமானுக்கு தாயுமானவர்என்று ஒரு பெயர் உண்டு. தனது பக்தையின் பக்திக்கு இணங்கி சிவபெருமானே பேறுகாலம் பார்த்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவருக்கு கோயில் திருச்சியில் உள்ளது. அந்தக் காட்சி இந்த தூணில் வடிக்கப்பட்டுள்ளது. சுகப்பிரசவம் ஆக இந்த சிற்பத்திற்கு எண்ணெய்க்காப்பிட்டு கர்ப்பிணிகள் வேண்டிக் கொள்கிறார்கள்.
  • சரபேஸ்வரர்: இரணியனைக் கொன்ற நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகி இங்கும் அங்கும் அலைந்தார். அசுரனின் ரத்தம் நரசிம்மரை கோபத்திற்கு ஆளாக்கியது. ஆவேசத்தைத் தணிக்கும்படி தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் மனிதன், மிருகம், பறவை என்ற அதிசய உருவெடுத்து வந்து நரசிம்மரை ஆலிங்கனம் செய்து (தழுவுதல்) சாந்தப்படுத்தினார். இச்சரபப்பெருமான் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள தூணில் காட்சிதருகிறார். ராகுகாலத்தில் வழிபாடு செய்கின்றனர்
    ஆயிரங்கால் மண்டப சிற்பங்கள் 


  • ராவணன் 10 தலையுடன் வீணை வாசிக்கும் சிற்பம் கூட மீனாக்ஷி அம்மன் கோவிலில் உள்ளது
வீணை வாசிக்கும் ராவணன் 

எனக்கு தெரிந்த அளவில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் சிறப்புகளை பற்றி எழுதியுள்ளேன். இதில் விட்டு போன தகவல்கள் ஏதேனும் இருந்தால் வாசக அன்பர்கள் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம்