செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

துவாரகேஷ் கோவில், துவாரகா & நாகேஸ்வரர் கோவில், துவாரகா (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)

துவாரகேஷ் கோவில்




குஜராத் மாநிலத்தில் துவாரகா என்ற ஊரில் உள்ளது இந்த கிருஷ்ணன் கோவில். இந்த மாவட்டத்துக்கு பெயரே தேவபூமி துவாரகா என்பது தான்.  108 திவ்ய தேச கோவில்களில் துவரகீஸ்வர் கோவிலும் ஒன்று. மிகவும் பழமையான கோவில். கோமதி நதி, அரபி கடலுடன் இணையும் முகத்துவாரத்தில்  அமைந்துள்ளது இந்த கோவில். 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் தான் கிருஷ்ணனின் அரண்மனை இருதது என நம்பப்படுகிறது. ஆதி சங்கரர் இந்தியாவில் அமைத்த நான்கு சங்கர மடங்களில் முதல் மடம் துவாரகையில் தான் 9 ஆம் நூற்றாண்டில் நிறுவினார். துவரகீஷ்வர் கோவிலுக்கு முன்பாகவே கோவிலை ஒட்டியே சங்கர மடம் உள்ளது. துவாரகா ஒரு துறைமுக நகரமும் கூட. பண்டைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு ஆழிபேரலையால் துவாரகா நகரத்தின் பெரும்பகுதி நீரில் மூழ்கியதாக நமபப்படுகிறது. கோவிலுக்கு மேல் பறக்கும் கொடிக்கம்பத்தில் சூரியன் மற்றும் சந்திரன் உருவங்கள் காணலாம். இங்கு கிருஷ்ண ஜென்மாஷ்டமி மிக சிறப்பாக கொண்டாடப்ப்டுகிறது. 



                              துவாரகீஷ்வர் 



கோவிலில் கிருஷ்ணர், பலராமர், ருக்மணி, பிரதியும்னன், தேவகி, புருஷோத்தமர், குசேலர் போன்றவர்களுக்கு தனி சன்னதிகள் உண்டு. இந்த கோவில் கிருஷ்ணனின் பேரன் வஜ்ரனாப் என்பவரால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. நான்கு முறை ஆழிபேரலையால் அழிக்கபட்டு ஐந்தாவது முறை மீண்டும் கட்டப்பட்டது தான் தற்போது இருக்கும் கிருஷ்ணர் கோவில். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்நகரத்தின் பழமைக்கு சான்று கூறும்படி பல்வேறு செப்பேடுகளை கண்டெடுத்துள்ளார்கள். இப்பொழுது இருக்கும் துவாரகா நகர குடியிருப்பு ஏழு முறை அழிந்து எட்டாவது முறையாக கட்டமைக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. துவாரகாவிலிருந்து 14 கி.மீ தொலைவில் கோபி என்று ஒரு ஊர் உள்ளது . இங்கு தான் கிருஷ்ணர் கோபிகைகளுடன் ராச லீலைகள் செய்தார் என சொல்லப்படுகிறது. இது ஒரு ஏரிக்கரையில் உள்ளது .ஆனால் தற்பொழுது ஏரியில் நீர் இல்லை. இங்கும் 5000 ஆண்டு பழமையான ஒரு கிரூஷ்ணர் கோவில் உள்ளது.  ஒரு பழமையான வீடு போல உள்ளது இந்த சிறிய கோவில். துவாரகா வில் இருந்து 2 கி மீ தொலைவில் ருக்மணிக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது.  

பேட் துவாரகா


கேஷ்வராஜ்


பேட் துவாரகா என்பது, துவாரகாவின் மேற்கு கடல் எல்லையான  ஓகா(Okha) இல் உள்ள ஒரு கடலோர தீவு, தற்போது கச் வளைகுடா என அறியப்படும் பகுதியின் முகத்துவாரம் தான் இந்த தீவு. 3 கி. மீ சுற்றளவுள்ள இந்த தீவில் மக்கள் வசிக்கிறார்கள். இது துவரகா நகரத்தில் இருந்து சுமார் 19 கி. மீ தொலைவில் உள்ளது. பெரும்பாலும் கடலோர காவல்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த பகுதி. இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இந்த பேட் துவாரகா பகுதியும் கிருஷ்ணர் காலத்தில் துவாரகாவின் பகுதியாக இருந்துள்ளது. தொன்மையான துவாரகா நகரம் எந்த அளவுக்கு பெரிய நகரமாக இருந்தது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. சுனாமி பேரலையில் சிதறுண்டு தனித்து தீவு போல காட்சியளிக்கும், மக்கள் வசிக்கும் இந்த பகுதிக்கு தான் பேட் துவாரகா எனறு பெயர். இந்த பகுதிக்கு மோட்டார் படகில் அழைத்து செல்கிறார்கள். அழைத்து செல்லவும் திரும்ப கொண்டு விடவும் நபருக்கு 10 ரூபாய் என வசூல் செய்கிறார்கள். மகாபாரதத்திலும் ஸ்கந்தபுராணத்திலும் சொல்லப்படும் துவாரகா ,தற்போதைய பேட் துவாரகாவும் இணைந்த ஒரு பெரும் நகரம். கிருஷ்ணரின் தலைநகரம். தொல்பொருள் நிபுணர்கள் சிந்து சமவெளி காலத்தை சேர்ந்த ஒரு நகரம் இந்த பகுதியில் கடலுக்கடியில் புதையுண்டு கிடக்கிறது என சொல்கிறார்கள். இந்த தீவில் கேஷவராஜ் கோவில் என்ற ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு மீனவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். மீன்பிடி தொழில் தான் அவர்களது வாழ்வாதாரம். பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அருகில் உள்ளதால் குஜராத் மீன்வர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் பொழுது பாகிஸ்தான் கடற்படை அவர்களை அடிக்கடி கைது செய்கிறார்கள்.


நாகேஸ்வரர் கோவில், துவாரகா (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)



இந்த கோவிலும் துவாரகாவில் உள்ளது. 12 ஜ்யோதிர்லிங்கங்களில் இந்த ஆலயமும் உள்ளது என கூறப்படுகிறது. இந்த ஆலயம் துவராகாவில் இருந்து சுமார் 16 கி மீட்டர் தொலைவில் உள்ளது .இது புராதன கோவில் என சொன்னாலும் கோவிலை பார்த்தால் ஒரு நவீன் கோவில் போல தெரிகிறது. இந்த கோவில் குறித்து ஒரு சர்ச்சையும் உள்ளது. உண்மையான நாகேஸ்வர் கோவில் என்ப்து உத்தராகண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற ஊரில் உள்ளது தான் 12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேஸ்வர் ஆலயம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.  புராணாத்தில் தூராகவன என்று குறிப்பிட்டதை வைத்து இந்த கோவிலை தவறாக நாகேஸ்வர் கோவில் என சொல்கிறார்கள் என்பது சிலரது வாதம். ஆனால் இந்த இடத்தில் எந்த வனமும் இருந்ததாக தெரியவில்லை. 

கருத்துகள் இல்லை: