மதுரைக்காரன்

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா, சிவமொன்றே யுள்ளதென சிந்தைசெய்தார் போதுமடா. --- பாரதியார்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

மணக்குள விநாயகர் ஆலயம்,பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியில் உள்ளது மணக்குள விநாயகர் ஆலயம்.நகரின் மத்தியில் உள்ளது.ஆளுநர் மாளிகையின் பின்புறம் அமைந்துள்ளது இந்த ஆலயம்.500 ஆண்டு பழைமையான ஆலயம் இது.விநாயக சதுர்த்தி இங்கு விமரசியாக கொண்டாடப்படும்.ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவம் இங்கு பிரபலம். 18 நாட்கள் வெகு சிறப்பாக இந்த விழா கொண்டாடப்படும்.பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த சமயம், பல முறை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் விநாயகர் சிலையை அகற்ற முயற்சித்த பொழுது மீண்டும் மீண்டும் விநாயகர் அங்கு தோன்றிய அதிசயம் நடந்ததாக சொல்லப்படுகிறது.ஆண்டு திருவிழா நடத்த பிரெஞ்சு ஆதிக்க அதிகாரிகள் தடை விதித்த போது அதிக அளவில் மக்கள் சென்னைக்கு குடிபெயற முயற்சித்த பொழுது, இதனால் அங்கிருந்த பிரெஞ்சு ஜவுளி ஆலை பாதிக்க படும் என்று தெரிந்து( பெரும்பாலோர் ஜவுளி ஆலை தொழிலாளர்கள்) பிரெஞ்சு அரசு விழா நடத்த அனுமதித்தது.இறுதியில் பிரெஞ்சு துரை டுப்லே விநாயகர் பக்தராக மாறிய அதிசயமும் நடந்தது.கடலுக்கு மிக அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்றாகி விட்டது.கோவிலுக்குள் ஒரு சின்ன குளம்
காண படுகிறது.இந்த இடம் சற்று இருள் சூழ்ந்து காணப்படுவதால் சூடன் ஒளியில் இந்த கிணற்றை பூசாரி பக்தர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.தனி விநாயக ஆலயங்களில் மணக்குள விநாயகர் ஆலயம் மிகவும் பிரசத்தி பெற்றது.

தென்னாங்கூர் பாண்டுரெங்கன் ஆலயம்

தென்னாங்கூர்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்.காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ளது.ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளால் எழுப்பப்பட்ட ஆலயம். தலை வாயில் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியிலும்,கருவறை விமான கோபுரம் பூரி ஜெகநாதர் ஆலயம் பாணியிலும் அமைந்துள்ளது. ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளின் குரு அவரது கனவில் வந்து பண்டரிபுரம் செல்ல சொல்கிறார்.அதன்படி அங்கு சென்ற சுவாமிகளுக்கு பண்டரிபுரம் கோவில் பூசாரி பாண்டுரெங்கன்-ரகுமாயி சிலைகளை கொடுத்துவிட்டு குரு ஞானாந்த சுவாமிகள் அவரின் கனவில் வந்து ஹரிதாஸ் சுவாமிகளிடம் குடுக்க சொன்னார் என்று சொல்கிறார்.அப்போது தான் ஹரிதாஸ் சுவாமிகளுக்கு பாண்டுரங்கன் ஆலயம் எழுப்பும் யோசனை வருகிறது.அந்த சிலைகளை உற்சவர்களாக கொண்டு பெரிய மூல ஸ்தான சிலைகள் அமைக்கபட்டு பாண்டுரங்கன் ஆலயத்தை ஹரிதாஸ் சுவாமிகள் எழுப்பினார்.பாண்டுரங்கன் ரகுமாயி சிலைகள்
முறையே 10 1/2 அடி மற்றும் 8 1/2 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது.வரதராஜ பெருமாள் சீதேவி பூதேவியுடன் பஞ்சலோக சிலைகளாகவும் இங்கு காணலாம்.வெள்ளி கிழமைகளில் பாண்டுரங்கன்-ரகுமாயி திருப்பதி வெங்கடாசல பெருமாள்-மகாலக்ஷ்மி அலங்காரத்தில் காண்பது கண் கொள்ளா ஆட்சி. கருவறை கோபுரம் 120 அடி உயரம்.அதன் மேல் உள்ள தங்க விமானம் 10 1/2 டி உயரம்.மதுரை மீனாக்ஷி அம்மனுக்கும் தென்னான்கூருக்கும் ஒரு தொடர்பு உள்ளது.பாண்டிய மன்னன் குழந்தை வேண்டி தென்னாங்கூரில் தான் யாகம் நடத்துகிறார்.அந்த இடத்தில் தோன்றிய குழந்தை தான் மீனாக்ஷி. பாண்டிய மன்னன் அந்த குழந்தையை அழைத்து கொண்டு மதுரை சென்றதாக சொல்கிறது புராணம்.அப்படி சப்தரிஷிகளால் யாகம் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த ஸ்தலத்தை காஞ்சி மகா பெரியவர் 'மீனாக்ஷி தோன்றிய ஸ்தலம்' என்று குறிப்பிட்டுள்ளார்.கோவிலுக்கு பின்புறம் ஞானாந்த சுவாமிகளின் மடம் உள்ளது.அங்கு ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளுக்கு துளசி பிரிந்தாவனமும் உள்ளது.

திங்கள், 9 பிப்ரவரி, 2009

பன்னாரி அம்மன் கோவில்

ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பன்னாரி மாரியம்மன் கோவில்.ஈரோடில் இருந்து 75 கி.மீ தொலைவிலும் சத்யமங்கலத்தில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ளது.கோவை,ஈரோடு,திருப்பூர்,அவினாசி போன்ற இடங்களில் இருந்தும் பன்னாரி சென்று வர பேரூந்து வசதிகள் உள்ளது.தற்பொழுது பன்னாரி அம்மன் ஆலயம் இருக்கும் இடம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தன நாயக்கன் காடு என்று அழைக்கப்பட்டது.இங்கு சிறுவர்கள் வழக்கமாக பசுக்களை மேயவிட்டு வந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.அப்படி மேயப்பட்ட பசுக்களில் ஒரு குறிப்பிட்ட பசு மட்டும் கன்றையும் நெருங்கவிடவில்லை ,பாலும் கறக்க அனுமதிக்கவில்லை.மேய்ப்பவன் அந்த பசுவை தொடர்ந்து கண்காணித்து வந்தபோது ஒரு விஷயம் புலப்பட்டது.அந்த பசு ஒரு குறிப்பிட்ட வேங்கை மரத்தின் அடியில் போய் நின்ற உடன் தானகவே மடுவில் இருந்து பால் சுரக்க ஆரம்பித்தது.இதை மாடு மேய்க்கும் சிறுவன் தெரிவித்த உடன் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்துக்கு வந்து வேங்கை மரத்தின் அடி பாகத்தை தோண்டி பார்த்த பொழுது அங்கு ஒரு சுயம்பு சிவ லிங்கம் இருந்தது.அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு இறை அருள் வந்து அருள் வாக்கு சொல்லி இருக்கிறார்.அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வணிகர்கள் சுமைகளை மாடுகள் மேல் சுமந்து மைசூருக்கு இந்த பாதை வழியாக தான் அப்பொழுது சென்று வந்துள்ளார்கள்.அவ்வாறு செல்லும் வணிகர்களின் காவல் தெய்வம் தான் என்றும் தனக்கு இந்த இடத்தில் ஒரு ஆலயம் அமைத்து பன்னாரி அம்மன் என்ற பெயரில் வழிபடவும் என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.அன்று முதல் பன்னாரி அம்மனை அந்த பகுதி மக்கள் அங்கு வழி பட்டு வந்திருக்கிறார்கள்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம் இது.கோவையில் இருந்து மைசூர் செல்லும் பாதையில் சாலை ஓரமாக இந்த ஆலயம் உள்ளது.

மருதமலை முருகன் கோவில்

கோவை அருகே உள்ளது மருதமலை.இது முருக பெருமானின் மற்றொரு பிரபல மலை கோவில்.கோவையில் இருந்து தடாகம் சாலை வழியாக மருதமலை சென்றடையலாம்.மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மருதமலைக்கு போவதற்கு பேரூந்துகள் உள்ளன.மருத மலையில் மிகுந்த அளவில் மருத மரங்கள் உள்ளது.மிகவும் களைப்படைந்த ஒரு முனிவர் மருத மரத்தின் நிழலில் அமர்ந்து தண்ணீர் வேண்டி முருக பெருமானை வேண்டியபொழுது ஒரு மருத மரத்தின் வேரில் இருந்து தண்ணீர் பிரவாகம் எடுத்து சுரந்ததாக ஸ்தல வரலாறு.தண்ணீரை பார்த்த முனிவர் மருத ஜலம் வந்ததால் மருதாச்சலபதி என்று முருக பெருமானை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.மலை கோவிலின் இன்னொரு சிறப்பு மலை மேல் இருக்கும் பாம்பாட்டி சித்தர் குகை. பாம்பாட்டி சித்தர் குகையில் அமர்ந்து முருகனை நினைந்து தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.இங்கு ஒரு பாம்பாட்டி சுனையும் உள்ளது.சித்தர் குகையில் உள்ள நாகராஜர் சுயம்பு என்றும் சொல்லப்படுகிறது.மலை கோவிலுக்கு செல்ல படிகள் உள்ளன. தேவஸ்தான பேரூந்துகளும் உள்ளன.மூல சன்னதிக்கு வெளி புறமாக பக்தர்கள் அமர்வதற்கு ஏதுவாக ஒரு பெரிய கூடம் உள்ளது. மருத மலையில் இருந்து வரும் மூலிகை காற்றினை இங்கு அமர்ந்து அனுபவிக்கலாம். மலை மேல் முருக பெருமானின் திரு உருவ தரிசனம் முடித்து விட்டு வெளியில் வந்து பார்த்தால் கோவை நகரின் அழகை காணலாம். மருத மலையில் தான் கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் உள்ளது.

புதன், 28 ஜனவரி, 2009

அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயம்


அவினாசி கோவையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் திருப்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ளது. இது ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம்.இறைவன் திருநாமம் அவிநாசியப்பர்,அம்மன் திருநாமம் கருணாம்பிகை. சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.சுந்தரமூர்த்தி நாயனார் இங்குள்ள தாமரைக்குளத்தில் 'முதலை வாயில்' சிக்கிய சிறுவனை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.பிரம்மன் இங்கு நூறு ஆண்டுகளாக சிவனை வழிபட்டதாகவும் ,இந்திரனின் யானை ஐராவதம் இந்த சிவஸ்தலத்தில் 12 ஆண்டுகள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.முருகன்,காரைக்கால் அம்மன் மற்றும் காலபைரவருக்கும் தனி சன்னதிகள் உள்ளது.காலபைரவருக்கு வட மாலை சாற்றி வழிபாடு செய்வது இங்கு மிகவும் விசேஷம்.

சங்கமேஸ்வரர் ஆலயம்

சங்கமேஸ்வரர் ஆலயம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் உள்ளது.இது ஒரு கொங்கு நாடு பாடல் பெற்ற ஸ்தலம். இதற்க்கு மறுபெயர் கூடுதுறை . மூன்று நதிகள் கூடும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. பவனி ஆறு,காவிரி மற்றும் அம்ரிதவாகினி என்பது அந்த மூன்று நதிகளாகும்.அம்ரிதவாகினி என்பது சரஸ்வதி நதி போன்றது. அது மண்ணிற்கு அடியில் பாய்வதாக ஐதீகம்.கூடுதுறை திரிவேணி சங்கமத்திற்கு இணையானது.சங்கமேஸ்வரரையும் வேதநாயகி அம்மனையும் வணங்கினால் எந்த தீமையும் அணுகாது என்பது நம்பிக்கை.பவானிக்கு இன்னொரு பெயர் திருநன்னா அதாவது தீமை நன்னா ஊர் என்று பொருள்.
இந்த ஆலயத்தை சுற்றி ஐந்து மலைகள் உள்ளது.சங்ககிரி,திருசெங்கோடு,பத்மகிரி,மங்களகிரி மற்றும் வேதகிரி என்பதாகும் இந்த மலைகள்.சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. இன்னொரு முக்கியமான விஷயம் இது ஒரு சிவ ஸ்தலமாக இருந்தாலும் இங்கு பெருமாளுக்கும் தனி ஆலயம் உள்ளது. அதிகேசவ பெருமாள் மற்றும் சௌந்தரவல்லி தாயார் சன்னதியும் இங்கு உள்ளது. சுப்பிரமணியருக்கும் தனி சன்னதி உள்ளது. அருணகிரிநாதர் இங்கு வந்து முருகனை தரிசித்து பாடல்கள் இயற்றி உள்ளார்.பவானி ஈரோடில் இருந்தி 15 கி.மீ தொலைவிலும் சேலத்தில் இருந்து 56 கி.மீ தொலைவிலும் உள்ளது. கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடில் இருந்து இங்கு சென்று வர பேரூந்து வசதிகள் உள்ளது.

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்.

இஷா தியான மண்டபத்தில் இருந்து சுமார் ஐந்து கி.மீ தூரம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள கோவில் சென்றடையலாம். மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி நாதர் கோவில் உள்ளது. அம்மன் திருநாமம் சௌந்தரிய நாயகி.கோவில் பின் புறம் இருந்து மலை கோவில் செல்லும் பாதை தொடங்குகிறது.தென் கயிலை என்று அறியப்படும் வெள்ளியங்கிரி மலை மேல் இயற்கையாக அமைந்த குகைக்குள் பஞ்சலிங்கம் உள்ளது. அடிவாரத்தில் உள்ள கோவில் மட்டுமே எங்களால் தரிசனம் செய்ய முடிந்தது. சுமார் 6 கி.மீ தூரம் செங்குத்தான மலையில் ஏறி பஞ்சலிங்க தரிசனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.ஏழு மலைகள் ஏறவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகள் நிறைந்த மலை இது .இயற்க்கை சுனைகள் நிறைந்த மலை . பொதுவாக பௌர்ணமி இரவில் தான் வெள்ளியங்கிரி மலை ஏறுவார்கள் என்று எனது கோவை நண்பர் வெள்ளியங்கிரி சொல்லி இருக்கிறார். மலை ஏறி சிவ லிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருந்தும் என்னால் அங்கு செல்ல முடியவில்லை.பங்குனி உத்திரம்,சித்திரா பௌர்ணமி,மகா சிவராத்திரி போன்ற சமயங்களில் அதிக அளவில் பக்த ஜனங்கள் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்வார்கள் .தென்னக மக்கள் அமர்நாத் யாத்திரை அளவு வெள்ளியங்கிரி பஞ்சலிங்க தரிசனத்தையும் புனிதமாக கருதுகிறார்கள்.