செவ்வாய், 22 டிசம்பர், 2015

அருள்மிகு பாபநாசநாதர் கோவில்,பாபநாசம்


திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த  சிவாலயம் பாபநாசநாதர் கோவில். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ கைலாய கோவில்களில் முதல் கோவில் பாபநாசநாதர் கோவில். நவ கைலாய சிவாலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகங்களுக்கான கோவில்களாகவும் விளங்குகிறது. பாபநாசர் கோவில் ஒரு சூரிய ஸ்தலம். இந்த கோவில் ஒரு சக்தி பீட ஸ்தலமாகவும் விளங்குகிறது. சக்தி பீடங்களில் இந்த கோவில் விமலை பீடம் என்று அறியப்படுகிறது.

சுவாமியின் திருநாமம் பாபநாசநாதர். அம்பாள் திருநாமம் உலகநாயகி. உலகம்மை என்றும் விமலை என்றும் அம்பாள் இங்கு அறியப்படுகிறார். இங்குள்ள அம்மன் சன்னதி முன் ஒரு உரல் உள்ளது. இந்த உரலில் மஞ்சள் இடித்து அந்த மஞ்சள் நீராலே அம்மனுக்கு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை பருகினால் திருமண மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள். இது தவிர தீர்க்க சுமங்கலிகளாக இருக்கவும் இங்கு பெண்கள் அதிக அளவில் பிரார்தனை செய்து கொள்கிறார்கள்.

சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்த பொழுது வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது. உடனே பூமியை சமநிலைப்படுத்த சிவ பெருமான் அகத்திய முனிவரை பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அதனால்  சிவன் சித்திரை மாத பிறப்பன்று அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார். எனவே தான் கருவறைக்கு பின்புறம் சிவன் ரிஷபத்தில அமர்ந்து அம்பாளுடன் இங்கு காட்சி தருகிறார். அகத்தியர் தன் மனைவியுடன் சிவனையும் அம்பாளையும் வணங்கும் காட்சியையும் காணலாம்.  

இந்திரன் துவஷ்டா என்ற அரக்கனை கொன்று பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகிறான். வியாழ பகவான் இந்திரனிடம் பாபநாசத்திலுள்ள சிவனை வழிபட்டு பாப விமோசனம் அடைய வழி சொல்கிறார். அதன்படி இந்திரன் இங்கு சிவனை வணங்கி பாப விமோசனம் பெறுகிறான். இந்திரனின் பாபத்தை நீக்கிய பெருமான் எனபதாலயே இறைவனுக்கு பாபநாசநாதர் என்று இங்கு திருநாமம். இந்த கோவிலில் நடராஜருக்கு தனி சந்நிதி உண்டு. இங்கு நடராஜர் ஆனந்த தாண்டவத்தில் காட்சி தருகிறார். இங்கு தைபூசத்தன்று வியாகரபாதர்,பதஞ்சலி ஆகிய முனிவர்களுக்கு நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடராஜர் நடன தரிசனம் அளித்துள்ளார். அதை சிறப்பிக்கவே தை பூசத்தன்று இங்கு நந்திக்கு சந்தனக்காப்பு சார்த்தபட்டு பூஜைகள் செய்ய்ப்படுகின்றன .

இந்த கோவிலுக்கு இன்னொரு தலபுராண கதையும் உள்ளது. அகத்திய முனிவரின் சீடரான உரோமச  முனிவர் தாமிரபரணி கரையில் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்ய இடங்களை தேர்வு செய்து தரும்படி கேட்கிறார். அப்பொழுது அகத்தியர் சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலரை தாமிரபரணியில் வீசி இந்த பூக்கள் எங்கெல்லாம் கரை ஒதுங்கதோ அங்கெல்லாம் லிங்கங்களை பிரதிஷ்டை செய்ய கூறுகிறார். அந்த பூக்கள் ஒன்பது இடங்களில் கரை ஒதுங்குகிறது. அந்த ஒன்பது இடங்களிலும் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்ய்ப்படுகிறது . அவை தான் நவ கைலாய கோவில்கள். இவை அனைத்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதி கரையிலயே உள்ளது. இந்த ஒன்பது  கோவில்களும் நவக்கிரக ஸ்தலங்களாகவும் விளங்குகிறது. இதில் பாபநாசம் சூரிய ஸ்தலம். மற்றவை சந்திர ஸ்தலம் - சேரன்மகாதேவியில் உள்ள அம்மநாதர் கோவில் - இந்த கோவில் பற்றிய பதிவு எனது வலைதளத்திலயே உள்ளது. கொடகநல்லூர் என்ற ஊரிலுள்ள கைலாசநாதர் கோவில் செவ்வாய் ஸ்தலம். குன்னத்தூர் என்ற ஊரிலுள்ளது ராகு ஸ்தலமான ஸ்ரீகோத்த பரமேஸ்வர் என்ற கைலாசநாதர் கோவில். உள்ளூர் காரர்கள் இந்த கோவிலை சங்காணி கோவில் என்றே சொல்கிறார்கள். குருஸ்தலம் முறப்பநாடு என்ற இடத்திலுள்ள கைலாசநாதர் கோவில் .இது தூத்துக்குடி செல்லும் சாலையிலுள்ளது . இந்த கோவில் பற்றிய பதிவும் எனது வலைதளத்திலயே உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலுள்ள கைலாசநாதர் கோவில் தான் சனி ஸ்தலம்.தென்திருப்பேரை என்ற ஊரிலுள்ள கைலாசநாதர் கோவில் புதன் ஸ்தலம். இதன் மிக அருகிலயே சுமார் 2 கி.மீ தொலைவிலயே ராஜபதி என்ற ஊரிலுள்ள கைலாசநாதர் கோவில் தான் கேது ஸ்தலம் திருசெந்தூர் செல்லும் பாதியிலுள்ள சேர்ந்த பூமங்கலம் என்ற ஊரிலுள்ள கைலாசநாதர் கோவில் தான் சுக்கிர ஸ்தலம்.


பாபநாசம் கோவிலை தாண்டி மேலே செல்லும் மேற்கு தொடர்ச்சி மலையில் சென்றால் அகத்தியர் நீர்வீழிச்சி உள்ளது. இது அருமையான ஒரு சுற்றுலா ஸ்தலம். இன்னும் மேலே சென்றால் காரையார் அணையும் அதன் மேலே பாணதீர்த்த நீர் வீழ்ச்சியும் உள்ளது. இது சற்று ஆபத்தான இடம். இங்கு நிறைய விபத்துக்களும் உயிற்பலிகளும் நேர்ந்துள்ளது. அகத்தியர் மலையின் ஒரு பகுதியாக தான் முண்டன்துறை புலிகள் சரணாலயமும் உள்ளது.


அகத்திய முனிவர் தான் சித்த மருத்துவத்தின் தந்தை. பல விதமான மூலிகைகள் பொதிகை மலையிலிருந்து தான் அவருக்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவர் அகத்தியர். அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியவரும் அவரே. அவர் எழிதிய "ஆதிதித்ய ஹ்ருதயம்" என்ற நூலை படித்த பின்பே ராவணனை போரில் வெல்லும் வித்தையை ராமன் அறிந்து கொண்டார் என்றும் நம்பபடுகிறது. அகத்தியர் 15000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பொதிகை மலையில் வாழ்ந்ததாக நம்பபடுகிறது. ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் அகத்திய முனிவர் பற்றிய குறிப்புகள் உள்ளது. அம்பாசமுத்திரம் என்ற ஊரில் (இங்கிருந்து சுமார் 20 கி. மீ தொலைவிலுள்ளது பாபநாசம்) அகஸ்திய முனிவருக்கு என்றே ஒரு தனி கோவில் உள்ளது. 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு.

Unknown சொன்னது…

அருமை நவம்பர்13 நான் செல்கிறேன் தரிசிக்க