சனி, 27 ஆகஸ்ட், 2016

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்

மீனாக்ஷி அம்மன்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனது வலைதளதிற்கு வந்த பின்னூட்ட்ங்களில் ஒரு நண்பர்,மதுரைக்காரன் என பெயர் வைத்து கொண்டு மீனாக்ஷி அம்மன் கோவிலை பற்றி ஏன் இன்னும் எழுதவில்லை என கேட்டிருந்தார். உண்மையில் நான் இந்த வலை பதிவை ஆரம்பித்த புதிதில் முதல் பதிவு மீனாக்ஷி அம்மன் கோவிலை பற்றி தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். பின்பு அதற்கு பதிலாக வாரியார் சுவாமி அருளிய மீனாக்ஷி அந்தாதி தான் எனது முதல் பதிவாக இருந்தது. இருந்தாலும் பிறிதொரு சமயம் மீனாக்ஷி அம்மன் கோவில் குறித்து எழுதாலாம் என இருந்தேன். இந்த பதிவில் மீனாக்ஷி அம்மன் கோவில் குறித்து மிகவும் விரிவாக எழுதியுள்ளேன்.


இந்தியாவின் மிக பழமையான ஐந்து நகரங்களில் ஒன்று மதுரை.  மற்ற நான்கு நகரங்கள் காசி, பாட்னா, உஜ்ஜைன் மற்றும் புஷ்கர் என்பவையாகும். இன்னும் சொல்ல போனால் மதுரை தான் இந்தியாவிலயே மிகவும் தொனமையான நகரம். நான் குறிப்பிடுவது குமரி கண்டத்தில் மூழ்கிய பழைய தென் மதுரையை.

     மதுரையின் வான் பார்வை 

மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ஆம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மெகஸ்தனிஸின் வருகைக்குப் பிறகு, ஏராளமான ரோமானியர்களும், கிரேக்கர்களும் மதுரைக்கு வந்து பாண்டிய அரசர்களுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்தனர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு பாண்டி நாட்டிலிருந்து முத்து, மயில் தோகை, அகில், சந்தனம் போன்ற பொருட்கள் ஏற்றுமதியானதாக கிரேக்க நாட்டுப் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.

வால்மீகி ராமாயணமும்,வியாசபாரதமும் கூட பாண்டியர்களைப் பற்றியும் கபாடபுரத்தைப் பற்றியும் பேசுகின்றன

"உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்."
-பரிபாடல்

உரை

நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள் (மதுரை தவிர) அனைத்தினது பெருமைகளையும் ஒரு தட்டிலிடும் நிறையாகவும், தனது (மதுரை) பெருமையை ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு, சீர்தூக்குமிடத்து உலகத்துள்ள ஏனை அனைத்து நகரங்களின் பெருமையும் மெலிந்தேற, தன் பெருமை அங்ஙனம் மெலியாமல் தன் பெருமையாலே துலாத்தட்டு தாழும் தன்மையுடைத்து  பாண்டியன் ஆளும் நான்மாடக்கூடல்நகர்.

இந்தியாவின் மிக பெரிய கோவில்களில் ஒன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில். ஏழு உலக அதிசயங்களுக்கு இந்தியாவில் இருந்து  பரிந்துரைக்கபட்ட அதிசயங்களில் ஒன்று மீனாக்ஷி அம்மன் கோவில்.

அம்மன் பெயர்கள் : மீனாக்ஷி அம்மன்,அங்கயற்கண்ணி
ஸ்வாமி பெயர்    : சுந்தரேஸ்வர்,சொக்கநாதர்  
தொனமை        : 3 ஆம் நூற்றாண்டு கோவில்

சிறப்புகள்-
  • சிவபெருமானுக்கும் மீனாக்ஷி அம்மனுக்கும் திருமணம் நடந்த இடம்.
  •  சிவபெருமானின் பெரும்பாலான திருவிளையாடல்கள் நடந்த இடம்
  •   நக்கீரன் வாழ்ந்த இடம்
  •   சங்க தமிழ் வளர்த்த தொனமை நகரம்
  •   திருவிளையாடல்கள் இடம் பெற்ற பொற்தாமரை குளம் உள்ள கோவில்
  •  ஆயிரங்கால் மண்டபம் உள்ள கோவில்
  •   உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடக்கும் ஊர்.
  •  பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர் மன்னர்கள்  போன்ற பல மன்னர்களால் திருப்பணி செய்யபட்ட பழம்பெரும் ஆலையம்.
  •  நவக்கிரக புதன் ஸ்தலம்.
  •  ராமன்,லக்ஷ்மணன் மற்றும் வருணன் சிவ பெருமானை வணங்கிய இடம்.
  •   நடராஜர் கால் மாற்றி ஆடிய ஊர். வெள்ளியம்பலம் என அறிய படுகிறது .பஞ்ச சபைகளில் ஒன்று. மற்ற எல்லா இடங்களிலும் இடது  காலை  தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்

வெள்ளியம்பல நடராசர்

  •  ஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் இருவராலும் பல பதிகங்கள்  பாட பெற்ற ஸ்தலம்.
  •  குமார்க்குருபரர் பிள்ளை தமிழ் பாடிய ஊர். மீனாட்சியை குழந்தையாக பாவித்த குமரகுருபரர், அவளின் சிறப்புக்களை பாடியபோது, குழந்தை வடிவில் வந்து பாடலை கேட்டாள்.அவருக்கு தன் கழுத்தில் அணிந்து இருந்த முத்து மாலையை எடுத்து அணிவித்தாள். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், அம்பாள் சன்னதியை சுற்றியுள்ள சுவரில் சிற்பமாக உள்ளது. 
  • மெய் ஞானியான நீலகண்டதீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராக திகழ்ந்தார். திருமலை நாயக்கர், இவரை தனது முதலமைச்சராக நியமித்தார். திருமலை மன்னரின் மனைவியின் சிலையை தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலதுதொடையில் ஒரு லேசான சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாக தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றி தெரிவித்தார்.ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும் படி கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். தீட்சிதர் மீனாட்சியம்மைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய், கற்பூர ஜோதியை தம் கண்ணில் வைத்து கண்களைப் பொசுக்கிக் கொண்டார்.மன்னருக்கு செய்தி பறந்தது. அவர் தம் தவறை உணர்ந்து தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்கு திருநெல்வேலி அருகிலுள்ள பாலாமடை என்ற இடத்தை தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவலாயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.
  • சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானபோதுசம்பந்தர் சிவனை வேண்டி திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார். மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர். எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.
  •  நால்வரில் ஒருவரான திருவாதவூரரூ!க்கு சிவ பெருமான் மாணிக்க்கவாசகர் என பெயர் சூட்டிய ஊர்.·
  •  மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படை யெடுப்பின் போது மீனாட்சி அம்மன் திருவுருவத்தையும், சுந்தரேஸ்வரரையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர். கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளது. சுந்தரேஸ்வரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டுஇருந்தது. இது அதிசயமாக கருதப்பட்டது.·
  •  உற்சவ மூர்த்தி அம்மனுக்கு பெயர் பிரியாவிடை அம்மன். பிரியாவிடை என்பது வேறு யாருமல்ல.இறைவனை விட்டு எப்போதும் பிரியாமல் இருக்கும் பார்வதி தேவியே. மீனாக்ஷி அவரது மானிட அவதாரமே.பார்வதி நிலைசக்தி மீனாக்ஷி இயங்கு சக்தி.
  • சிவன் பிட்டுக்கு மண் சுமந்த ஊர் 
  •  சிவபெருமான் நரியை பரியாகவும்,பரியை நரியாகவும் மாற்றிய ஊர்.·
  •  64 சக்தி பீடங்களில் ஒன்று.·
  •  கோவிலின் பரப்பளவு 25 ஏக்கர் 
  • கோவிலை சுற்றியுள்ள தெருக்கள் தமிழ் மாத பெயர்களால் அறியபடுகிறது. ஆடி வீதி,ஆவணி வீதி ,சித்திரை வீதி மற்றும் மாசி வீதி.
  • மொத்தம் 12 கோபுரங்கள் கொண்ட கோவில். மீனாக்ஷிக்கு நான்கு கோபுரங்கள்,சொக்கநாதருக்கு நான்கு கோபுரங்கள், வெளி மதி சுவரில் நான்கு கோபுரங்கள் என 12 கோபுரங்கள் கொண்ட கோவில் · 
  • மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் கிழக்கு கோபுரத்தின் நடுவில் இருந்து மேற்கு கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத்தின் நடு உச்சி வழியாக போகும். அதேபோல், வடக்கு தெற்கு கோபுரங்களுக்கு கோடிட்டு பார்த்தால் சுவாமி சன்னதியை இரண்டாக பகிர்ந்து செல்லும். இது தமிழக சிற்பக் கலைஞர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது,·
  •  மீனாக்ஷி அம்மனுக்கு 1.5 கிலோ எடையுள்ள தங்கத்தாலான கிரீடத்தில் 300 காரட் வைர கற்கள் மற்றும் 154 காரட் பச்சை மற்றும் சிவப்பு கறகளால் அலங்கரிக்கபட்ட வைர கிரீடம் உள்ளது. வெள்ளிக்கிழமைகளிலும் மற்ற பண்டிகைய நாட்களிலும் இந்த கிரீடம் அம்மனுக்கு  சார்த்தப்படும். . இதன் மதிப்பு சுமார் ஒன்றை கோடிக்கு மேல் இருக்கும் என நம்பபடுகிறது
  • ,உலகின் மிக சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்று லண்டனிலுள்ள அஷ்மோலியான் அருங்காட்சியகம், இங்கும் லண்டனிலுள்ள இந்தியன் ஆபீஸ் நூலகம், ஒக்ஸ்போர்ட், மற்றும் ஹூஸ்டன், டெக்ஸாசிலுள்ள மீனாக்ஷி கோவிலகளிலும் மதுரை மீனாக்ஷி கோவிலின் மிகவும் தொன்மைவாய்ந்த புகை படங்களை ஆவண காப்பகத்தில் வைத்துள்ளார்கள்.·
  •  மீனாக்ஷி அம்மனுக்கு வைர கிரீடமும் வைர மூக்குதிதியும் உள்ளது.·
  •  ஆங்கில மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியை சார்ந்த வெள்ளைக்காரர்கள் மீனாக்ஷி அம்மனுக்கு தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார்கள்.ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் ரோஸ் பீட்டர் என்பவரின் கனவில் மீனாக்ஷி அம்மன் தோன்றி தூங்கி கொண்டிருந்த அவரை கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல சொல்லியிருக்கிறார். அவர் வெளியே சென்ற சிறிது நேரத்திலயே அந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்து விட்டது. அதனால் அவர் கோவிலுக்கு தங்க காலணிகளை காணிக்கையாக செலுத்தினார்,
  • இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும்.எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு.·
  • இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
  • சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன,· 
  •  இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம் பிரிசித்தி பெற்றதாகும்

  • மதுரை நகரின் மற்ற பெயர்கள் நான்மாடக் கூடல்,திரு ஆலவாய், மற்றும் கடம்பவனம்,
  •  இங்குள்ள மீனாக்ஷியம்மன் விக்கிரகம் மரகத கல்லால் ஆனது.
  •  இங்கு அம்மனுக்கு செய்யும் அபிஷேகத்தை பக்தர்கள் பார்க்க அனுமதியில்லை,
  •  தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம்  மற்றும் வைகை.
  • கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர்

பொற்தாமரைக் குளம் 





  •  ·             பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம் இன்றும் ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
  • ·    இங்குள்ள சிவலிங்கம் கடம்பமரத்தின் கீழே சுயம்புவாக தோன்றிய லிங்கம்.·    தமிழகத்துக் கோவில்களிலேயே கோபுரத்தில் அதிக அளவு பொம்மைகள் இருப்பது மதுரைக் கோவிலில்தான்
  • ·        கடம்ப மரம்:மீனாக்ஷி அம்மன் கோவில் தற்பொழுது இருக்கும் இடம் முன்பொரு காலத்தில் கடம்பமர வனமாக இருந்த இடம். இந்திரன் கடம்பவன காட்டில் சுயம்புவாக எழும்பிய சிவலிங்கத்தை வழிபட்ட இடத்தில் தான் கோவில் எழுப்பபட்டது என்பது வரலாறு. அதற்கு சாட்சியாக சாமி சன்னதிக்கு வெளிபுறம் துர்க்கை சன்னதிக்கு எதிரில் இன்றும் இந்திரன் அமர்ந்து தவம் செய்த ஒரு கடம்ப மரம் சாட்சியாக உள்ளது. 
கடம்ப மரம் 



  • ·            இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ த்தி (மூக்குத்தி தீபாராதனை) நடக்கிறது. அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

ஆயிரங்கால் மண்டபம் 
  •      ஆயிரங்கால் மண்டபம்: இதில் சப்தஸ்வர ஓசை தரும் ஏழு தூண்கள்     உள்ளன.  பெயர் தான் ஆயிரங்கால் மண்டபம்.ஆனால் 985 தூண்களே உள்ளது 
  • .      வருடத்தின் 12 மாதங்களிலும் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.  
  •       சம்பந்தரால் திருநீற்றுப் பதிகம்பாடப்பட்டது  இந்த தலத்திலேயே.முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து அம்மன் சன்னதி வரும் வழியில் இந்த சாம்பல் உள்ளது மக்களுக்காக இடப்பட்டு இருக்கும்
  •    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பூகோள சக்கரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  •                      சைவமும், வைணவமும், இணைந்து கொண்டாடும்  ஒரு பெருவிழா என்றால், அது மதுரை சித்திரைத் திருவிழா தான்.சைவமும் வைணவமும் போட்டிப் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில்,  இருவரையும் இணைக்கும் விதத்தில் ,வேறு வேறு காலங்களில் நடந்து கொண்டிருந்த,  மதுரை மீனாக்ஷி அம்மனின் திருவிழாவையும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் ,திருமலை நாயக்கர் மன்னர், ஒன்றாய் இணைத்து  கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.


சுழலும் லிங்கம் 
 ·              

  • சுழலும் லிங்கம்: அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் முக்குருணி விநாயகர் அருகில் மேற் கூரையில் இந்த ஓவியம் வரைய பட்டுள்ளது . இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும் லிங்கத்தின் பீடம் நம்மை நோக்கி இருப்பது போல தோன்றும் .கிழக்கு நோக்கி நின்றால் பீடம் உங்கள் பக்கம் திரும்பி விடும்.குறுக்காக நின்று பார்த்தால் அந்த பக்கம் வந்து விடும்.சிவன் எங்கும் இருக்கிறார் என்பதை சுட்டி காட்டும் அதிசய ஓவியம் இது .சுற்றி வந்து எந்த திசையில் இருந்து பார்த்தாலும் நம்மை நோக்கி சுழன்றபடி காட்சி அளிப்பதால் இதற்க்கு சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளார்கள். சமீபத்தில் கோவில் சென்றிருந்த போது நான் இந்த அதிசய லிங்கத்தை புகை படம் எடுத்தேன் .அதையும் இங்கு வெளியுட்டுள்ளேன் . நான் நின்ற பக்கத்திற்கு லிங்கத்தின் பீடம் திரும்பிவிட்டது .அடுத்த முறை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது இந்த அதிசய ஓவியத்தை பார்த்து மகிழுங்கள்.
  •  சுந்தரானந்தர் சித்தர்: சுந்தரானந்தர் ஒரு சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவர் சிவபெருமானின் வடிவம் என்றும் நம்படுகிறது. சுந்தரானந்தர் மதுரை நகரின் வீதிகளில் ஆணைப் பெண்ணாக்கியும், பெண்ணை ஆணாக்கியும், ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும், திடிரென மறைந்தும் பல சித்துக்கள் செய்ததை மக்கள் மன்னனிடம் தெரிவிக்க சித்தரை அரண்மனைக்கு அழைத்துவர ஆள் அனுப்ப, சுந்தரானந்தர் அரசன் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி விட்டார். ஒரு நாள் எதேச்சையாக மன்னரும் சித்தரும் கோயிலில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர்.  அப்போது ஒருவன் கையில் கரும்புடன் நிற்க சித்தருடன் பேசிக்கொண்டிருந்த அரசன், சித்தரே இவன் கையில் இருக்கும் கரும்பை அந்தக் கல்யானை உண்ணும்படியாகச் செய்யுங்கள் என்றார். சித்தர் கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்து கண்சிமிட்டினார். யானை கரும்பை பெற்று உண்டது. மீண்டும் கல் யானையாக மாறியது. அந்தக் கல்யானை கரும்பைத் தின்னது மட்டுமின்றி, மன்னன் கழுத்தில் உள்ள முத்து மாலையையும் தன் தும்பிக்கையை நீட்டி எடுத்தது. தன் தவறை உணர்ந்த மன்னவன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்.அதைக் கண்ட அனைவரும் அதிசயப்பட்டனர்.  கோவிலில் உள்ளே சென்று சித்தர் மறைந்தார். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சமாதி இருக்கின்றது. துர்க்கை சன்னதிக்கு அருகில் சுந்தரானந்த சித்தருக்கு தனி சன்னதி மீனாக்ஷி அமன் கோவிலில் உள்ளது. வியாழக் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக குரு தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். புத்ர பாக்யம் உண்டாகும். புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும். சித்த பிரமை வியாதி குணமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். வயிறு குடல் நோய்கள் தீரும். வறுமை அகன்று வளமான வாழ்வாகும். வேண்டுதல் நிறைவேறிய உடன் சித்தருக்கு பூப்பந்தல்  அலங்காரம் செய்து பூஜை செய்வது மதுரை வாழ் மக்களின் பழக்கம்.
   முக்குறுணி விநாயகர்

  • முக்குறுணி விநாயகர்:  மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுவாமி சன்னதிக்குச் செல்லும் வழியில் எட்டு அடி உயரத்தில் காட்சி தருகிறார்..ஒரு குறுணி என்பது 6 படி. இவ்விநாயகருக்கு 3 குறுணி, அதாவது பதினெட்டு படி பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை  விநாயகர் சதுர்த்தி  நாளன்று இந்த விநாயகருக்குப் டைக்கப்படுகிறது.  எனவே இந்த விநாயகர் முக்குறுணி விநாயகர் என்று அறியப்படுகிறார். .மன்னர் திருமலை நாயக்கர்  வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டும்போது, கண்டெடுக்கப்பட்ட இவ்விநாயகரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்து வழிபட்டனர்.
  • மீனாக்ஷி அம்மன் கோவில் காசி விஸ்வநாதர் சன்னிதி: சுவாமி சன்னதியின் வெளி பிராகாரத்தில் சித்தர் சன்னதிக்கு பின்புறமுள்ள காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி விக்கிரகங்கள் காசி மன்னரால் கோவிலுக்கு வழங்கபட்டது என்று சொல்லப்படுகிறது.
  • சாட்சி கிணறு: மதுரைக்கு அருகில் வாழ்ந்த ஒரு வணிகருக்கு ஏராளமான சொத்துக்களும் ஒரு அழகான மகளும் இருந்தாள்.அவர் தன் மகளுக்கு முறை மாப்பிளையை மணம் செய்ய விரும்பினார். துரதிருஷ்ட வசமாக வணிகர் இறந்து போகவே, அந்த மாப்பிள்ளை கிராமத்திற்கு வந்து அவர் சொத்துக்களை எடுத்துக்கொண்டும், அவர் மகளைக் கூட்டிக்கொண்டும் சென்றான். அங்கும் விதி விளையாடவே, அவன் பாம்பு தீண்டி இறந்தான். இந்த சோக நிகழ்ச்சியைக் கேட்டறிந்த திருஞான சம்பந்த பெருமான், அந்தப் பெண்ணின்பால் கருணை கொண்டு, அந்த மாப்பிள்ளையை உயிர்பித்தார். அதோடு, ஒரு சிவலிங்கம் மற்றும் ஒரு கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு அவர்கள் திருமணத்தை நடத்திச் சென்றார்.அதன் பின்னால் ஒரு உண்மை தெரிய வந்தது; அவன் ஏற்கனவே மணம்முடித்தவன் என்பது. இரு பெண்களுக்கெதிரில் பிரச்சிணை எழுந்தது. முதல் மனைவி, இரண்டாம் பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கேட்க, சாட்சிக்கிணறும் லிங்கமும் அந்த இடத்திற்கு வந்து சாட்சி கூறியதாகவும், அதன் பின்னர் அந்த மூவரும் மீனாட்சியம்மன் கோயிலை நினைவில் கொண்டு வாழ்ந்ததாக அந்தக் கதை இயம்புகிறது. இந்த சாட்சி கிணறு இன்றும் கோவிலில் உள்ளது.
  • வன்னி மர விநாயகர்: மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோவிலில் வன்னி மர விநாயகர் மிகச் சிறப்பு வாய்ந்தவர் .ஆடி வீதியில் யானை கொட்டடிக்கு எதிரில் வன்னி மர விநாயகர் சன்னதி உள்ளது. இங்கு விநாயகரை வேண்டி வணங்கினால் வேண்டிய காரியம் உடனடி நிறைவேறும்.பெண்கள் இங்கு குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுவதை பார்க்கலாம். ராமபிரான் , இராவணுடன் போருக்கு செல்லும் முன் ,வன்னி மரத்தை வணங்கி விட்டு,சென்றதாக புராணங்களில்  கூறப்படுகிறது .வன்னி மரம் சிவ பெருமானின் அம்சம் .இந்த மரத்தடியில் தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும் .வில்வத்திற்கு  அடுத்தது வன்னி மரம் தான் சிவனுக்கு உரியது.
  • கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி: இது துர்க்கை சன்னதிக்கு எதிரில் உள்ள வாசல் வழியே வெளி பிராகாரத்திற்கு வந்தால் காணலாம். இது பிற்காலத்தில் வீரப்பன் அவர்கள் அறநிலைய துறை அமைச்சராக இருந்த பொழுது ஏற்படுத்தபட்ட சன்னதி. இங்கு ஒரு சிறு மண்டபமும் மீனாக்ஷி அம்மனும் சிவ பெருமானும்  திருமண கோலத்தில் இருப்பதையும் காணலாம். பெருமாள் கன்னிகாதானம் செய்யும் காட்சி. புதுமண தம்பதிகள் இங்கு வணங்கி ஆசி பெறுவதை காணலாம் மற்றும் எளிமையாக மாலை மாற்றி திருமணம் செய்யும் பலர் இந்த சன்னதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
  • பழனி தண்டாயுதபாணி,திருத்தணி முருகன்,மற்றும் கழுகுமலை முருகன் போன்றவர்களுக்கும் நவக்கிரக சன்னதிக்கு அருகில் தனி சன்னதிகள் உள்ளது. 
வீரபத்திரர் 


வெண்ணை காளி 

வளரும் ஆஞ்சநேயர் 


  • இதே பிராகாரத்தில் நவகிரக சன்னதி,வீரபத்திரசாமி, பத்திரகாளி, சடையப்பர் மற்றும் தியான மண்டபம் போன்றவைகளை காணலாம். பத்திரக்காளிக்கு இங்கு வெண்ணை சாத்துவது சிறப்பு. பத்திரக்காளிக்கு எதிர்புறம் ஒரு தூணில் ஆஞ்சநேயர் விக்கிரகம் உள்ளது. இந்த ஆஞ்சநேயர் முதலில் இருந்ததை விட காலபோக்கில் சிறிது வளர்ந்துள்ளதாக நம்பபடுகிறது. 
  • அம்மன் சன்னதிக்கு வெளிபிராகாரத்தில் வலது புறம் கூடல் குமரனுக்கு தனி சன்னதி உள்ளது

  • ·மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள் உள்ளன. ஆனால், வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார்.
  • மகாலிலிருந்து மன்னர் திருமலை நாய்க்கர் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு வருவதற்கு சுரங்க பாதை ஒன்று இருந்தது. இச்சுரங்கப் பாதை, இன்றும் சொக்கநாதர் சன்னதியின் வடபுறம் மகாலெட்சுமி சன்னதி அருகே பொற்படியான்என்ற சிறிய கதவை உடையதாக உள்ளது.. கத்வு மட்டுமே உள்ளது .உள்ளே சுரங்கபாதை மூடபட்டுள்ளது என சொல்கிறார்கள்.
    தாயுமானவர் 
     
  •   தாயுமானவர்: கம்பத்தடி மண்டபத்தில் வடக்கு நோக்கிய தூணில், கர்ப்பமான ஒரு பெண் நிற்பதையும், அவளுக்கு கீழே ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கும் நிலையில் நிற்பதையும் காணலாம். கீழே நிற்கும் பெண் தாயுமானவர்எனப்படுவார். சிவபெருமானுக்கு தாயுமானவர்என்று ஒரு பெயர் உண்டு. தனது பக்தையின் பக்திக்கு இணங்கி சிவபெருமானே பேறுகாலம் பார்த்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவருக்கு கோயில் திருச்சியில் உள்ளது. அந்தக் காட்சி இந்த தூணில் வடிக்கப்பட்டுள்ளது. சுகப்பிரசவம் ஆக இந்த சிற்பத்திற்கு எண்ணெய்க்காப்பிட்டு கர்ப்பிணிகள் வேண்டிக் கொள்கிறார்கள்.
  • சரபேஸ்வரர்: இரணியனைக் கொன்ற நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகி இங்கும் அங்கும் அலைந்தார். அசுரனின் ரத்தம் நரசிம்மரை கோபத்திற்கு ஆளாக்கியது. ஆவேசத்தைத் தணிக்கும்படி தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் மனிதன், மிருகம், பறவை என்ற அதிசய உருவெடுத்து வந்து நரசிம்மரை ஆலிங்கனம் செய்து (தழுவுதல்) சாந்தப்படுத்தினார். இச்சரபப்பெருமான் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள தூணில் காட்சிதருகிறார். ராகுகாலத்தில் வழிபாடு செய்கின்றனர்
    ஆயிரங்கால் மண்டப சிற்பங்கள் 


  • ராவணன் 10 தலையுடன் வீணை வாசிக்கும் சிற்பம் கூட மீனாக்ஷி அம்மன் கோவிலில் உள்ளது
வீணை வாசிக்கும் ராவணன் 

எனக்கு தெரிந்த அளவில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் சிறப்புகளை பற்றி எழுதியுள்ளேன். இதில் விட்டு போன தகவல்கள் ஏதேனும் இருந்தால் வாசக அன்பர்கள் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம்




கருத்துகள் இல்லை: