சனி, 9 ஜனவரி, 2016

காளமேகபெருமாள் கோவில்,திருமோகூர்




மதுரையிலிருந்து மேலூர் செல்லும் பாதையில் 12 கி.மீ தொலைவில் உள்ள திருமோகூர் என்ற இடத்தில் உள்ளது காளமேகபெருமாள் கோவில். 108 வைணவ திவ்ய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் பெருமாள் மோஹினி ரூபத்தில் காட்சியளித்ததால் இந்த கோவிலுக்கு மோகனக்ஷேத்ரம் என்றும் ஒரு பெயருள்ளது.

பெருமாள் திருநாமம் காளமேகபெருமாள்,தாயார் திருநாமம் மோகனவல்லி. இந்த கோவிலின் சிறப்பு மோட்ச தீபம் ஏற்றுவதும் மிகவும் பழ்மைவாய்ந்த சக்திமிக்க சக்கரத்தாழ்வாரை வணங்குவதும் தான். இங்குள்ள பெருமாளுக்கு மோட்சம் தரும் பெருமாள் என்று ஒரு பெயரும் உண்டு. இங்குள்ள உற்சவருக்கு ஆப்தன் என பெயர்.அதனால் காளமேகபெருமாள் நண்பன் ஸ்வாமி என்றும் அறியப்படுகிறார். இங்கு சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் சன்னதியும் ஒன்று உள்ளது. அதற்கு பிரார்தனை சயன பெருமாள் சன்னதி என பெயர். பூதேவி ஸ்ரீதேவி அடிவருட பெருமாளை சயன கோலத்தில் காணலாம். இந்த சன்னதிக்கு கீழே திருபாற்கடல் ஓடுவதாக ஐதீகம்.
  
மாசி மகம் அன்று பெருமாள் மோகினி  வடிவில் இங்கு காட்சி தருவார். அன்று பெருமாள் ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவிலுக்கு எழுந்தருளுவார். யோக நரசிம்மர் குறித்த பதிவு இந்த வலை தளத்தில் உள்ளது. திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்கு திருமண வரம் வேண்டி கோவிலின் முன் மண்டபத்திலுள்ள மன்மதன் மற்றும் ரதி சிலைகளுக்கு சந்தனம் பூசி நெய் தீபம் ஏற்றி கல்கண்டு படைத்து வேண்டி கொள்வார்கள். ஆண்கள் ரதி தேவியையும்,பெண்கள் மன்மதனையும் வேண்டுவார்கள். மேலும் ராகு கேது தோஷ நிவாரணத்திற்கு இங்குள்ள விநாயகர் சன்னிதியில் ராகு காலத்தில் பக்தர்கள் பூஜைகள் செய்வதும்  இங்கு வழக்கம்.


இந்த கோவிலிலுள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. பதினாறு கைகளிலும் ஆயுதங்களுடன் தலையில் அக்னி கிரீடத்துடனும் ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். 

கருத்துகள் இல்லை: