புதன், 23 டிசம்பர், 2015

மதனகோபாலஸ்வாமி கோவில் மதுரை

மதுரை நகரில் மேலமாசி வீதியில் அமைந்துள்ளது இந்த கோவில். கூடல் அழகர் கோவிலுக்கும் இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்கும் மிக அருகில் உள்ளது இந்த மிகவும் பழமையான கோவில்.

இங்கு மூலவர் திருநாமம் மதனகோபாலஸ்வாமி - குழலூதும் கண்ணன்- நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தேவியர் இருவர் பாமா மற்றும் ருக்மணி. கருவறைக்கு அருகிலயே ராமனுக்கும் சன்னதி உண்டு. இது தவிர விநாயகர்,மதுரவல்லி தாயார்,ஆண்டாள், சக்கரத்தாழ்வார்,லக்ஷ்மி நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர், பெரியாழ்வார், ராமானுஜர் போன்றோருக்கும் இங்கு தனி சன்னதிகள் உண்டு. இந்த கோவிலிலுள்ள நாகராஜா ஹரிஹர சர்ப்ப ராஜா என அறியப்படுகிறார்.

ஒரு முறை மதுரையில் சிவபெருமான் லிங்க பூஜை செய்யும் பொழுது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். சிவன் அவராலயே உருவாக்கபட்ட லிங்கத்தை பூஜை செய்த கோவில் தான் இன்மையில் நன்மை தருவார் கோவில். இந்த கோவில் மதனகோபாலஸ்வாமி கோவிலிலிருந்து சில அடிகள் தூரத்திலயே உள்ளது.இந்த கோவில் பற்றிய பதிவு எனது வலைத்தலத்திலயே உள்ளது. தியானம் செய்த சிவபெருமான் உடல் அக்கினி ஜ்வாலையாகி உலகத்தில்  வெப்பத்தை அதிகரிக்க செய்கிறது. எனவே உலகை காக்க பிரம்மாவின் தலைமயில் தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று சிவபெருமானின் தியானத்தை பற்றி கூறி உலகை காக்கும்படி கூறுகிறார். சிவ பெருமானின் தியானத்தை கலைத்து வெப்பத்தை குறைப்பதற்காக விஷ்ணு புல்லாங்குழலை இசைக்கிறார். இசைக்கு மயங்கி சிவபெருமான் தியானம் கலைந்து கண் விழிக்கிறார், உலகமும் காபாற்றப்படுகிறது. சிவ பெருமான் உடனே மகிழ்ச்சியுடன் விஷ்ணுவை பார்த்து நீங்கள் எப்போதும் புல்லாங்குழல் இசைத்து என் அருகிலயே இருந்து மகிழ்விக்க வேண்டும் என கோருகிறார். இது தான் மதனகோபாலஸ்வாமி கோவிலின் தல வரலாறு. இங்கு சிவன் கோவிலும்,விஷ்ணு கோவிலும் மிக அருகிலயே இருப்பதை பார்க்கலாம்.

இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு ஆண்டாள் ஸ்ரீரெங்கம் சென்று ரெங்கமன்னாருடன் ஐக்கியமாகும் முன் இந்த கோவிலுக்கு வந்து மதனகோபாலஸ்வாமியை தரிசித்ததாக நம்பப்படுகிறது. இசைதுறையில் மேன்மையடைய விரும்புபவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.


இந்த கோவிலில் கிருஷ்ணா ஜெயந்தி,வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவை நோன்பு போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

கருத்துகள் இல்லை: