திங்கள், 24 நவம்பர், 2008

தனுஷ்கோடி

தனுஷ் என்றால் வில், கோடி என்றால் கடைசி.ராமர் தன் வில்லின் கோடியால் தொட்டு சேதுவின் ஒரு முனையை காட்டினார் என்பதால் இந்த இடத்திற்கு தனுஷ்கோடி என்று பெயர். இங்கிருந்து இலங்கைக்கு கடல் வழியாக 18 மைல் தொலைவு. 1964 ல் நடந்த கோர ரயில் விபத்துக்கு முன் சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை போட் மெயில் என்ற விரைவு ரயில் ஓடி கொண்டிருந்தது. தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கையை அடையவும் அப்பொழுது வசதி இருந்ததாக சொல்லப்படுகிறது. உலக அளவில் நடந்த மிக பெரிய ரயில் விபத்துக்களில் தனுஷ்கோடி ரயில் விபத்தும் ஓன்று.இரவு நேரத்தில் அடித்த சூறாவளி புயலில் சிக்கி தனுஷ்கோடி தீவு முற்றிலுமாக அழிந்தது. ரயில் பாலம் முற்றிலுமாக சேதம் அடைந்து ரயில் கடல் நீரில் மூழ்கியது. Dec 23 1964 ல் நடந்த இந்த விபத்தில் அந்த ரயிலில் இருந்த 123 பயணிகளும் ,ரயில் ஓட்டுனர்களும் மாண்டார்கள். இன்று மனிதர்கள் யாரும் வசிக்காத ஒரு இடமாக தனுஷ்கோடி திகழ்கிறது. அழிந்த நிலையில் உள்ள ஒரு மாதா கோவில் இன்றும் அந்த புயலுக்கு சாட்சியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் மணல் வெளி . தார் சாலை முடிவில் சுமார் 6 கி.மீ தூரம் மிகவும் மெலிதான மணல் ஆன பகுதியாக உள்ளது. அதன் கோடியில் இரு கடல் சங்கமம் உள்ளது. அங்கிருந்து தான் ராமரின் வானர சேனை இலங்கைக்கு சேது பாலம் அமைத்தார்கள் என்பது வரலாறு. இன்று வெறும் மணல் பரப்பாக மட்டுமே காட்சி அளிக்கிறது. இந்த 6 கி.மீ தூரம் four wheel drive உள்ள வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும்.

கோதண்டராமசாமி கோவில்

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. 1964 இல் வீசிய புயலில் முற்றிலுமாக தனுஷ்கோடி அழிந்துவிட்டது. ஆனால் கோதண்டராமஸ்வாமி கோவில் மட்டும் அந்த புயல் தாக்குதலில் இருந்து தப்பித்தது.ராவணனின் தம்பி விபீடணன் இங்கு வந்து தான் ராமரிடம் சரண் அடைந்து தனது தமயனாருக்காக மன்னிப்பு கேட்டதாக வரலாறு.ராமர் விபீடணின் மன்னிப்பை ஏற்று அவருக்கு லங்காதிபதியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்.இங்குள்ள கோதண்டராமஸ்வாமி கோவிலில் ராமர்,சீதை,லக்ஷ்மணன்,அனுமன் மற்றும் விபீடணன் காட்சி அளிக்கின்றனர் .

சாட்சி ஹனுமார் கோவில்

ராமர் பாதம் போகும் பாதையில் சாட்சி அனுமன் கோவில் உள்ளது. இந்த இடத்தில் தான் ஆஞ்சநேயர் பெருமான் ராமனிடத்தில் சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக சீதை அணிந்திருந்த சூடாமணியை ராமரிடம் காண்பிக்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள இன்னொரு ஆஞ்சநேயர் கோவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வரும் அனுமன் சீதை மணலில் சிவ லிங்கம் பிடித்திருப்பதை கண்டு கோபம் அடைந்து அந்த சிவ லிங்கத்தை தன் வாலில் கட்டி இழுக்கிறார். அப்பொழுது அனுமனின் வால் அறுந்து தெறித்து இந்த இடத்தில் வந்து விழுகிறார். அனுமன் வால் அறுந்து விழுந்த அந்த இடத்தில் தான் இந்த பஞ்சமுக அனுமன் கோவில் உள்ளது. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள சிவ லிங்கத்தில் அனுமனின் வால் தடம் இன்றும் உச்சியில் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

ராமர் பாதம்

ராமேஸ்வரத்திற்கு வட மேற்கு திசையில் இருக்கும் ஒரு சிறு குன்றுக்கு பெயர் பர்வத மலை. இங்கிருந்து பார்த்தால் ராமேஸ்வரம் தீவு முழுவதும் மிகவும் ரம்மியமாக தெரியும். இந்த குன்றின் மேல் இருந்து தான் அனுமன் இலங்கைக்கு தாவினதாக கூறப்படுகிறது. ராமர் இந்த குன்றின் மேல் நின்று இலங்கை திசையை நோக்கி பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. பாறை மேல் ராமர் பாதம் பதிந்துள்ளது.ராமர்,சீதை மற்றும் லக்ஷ்மணர் சன்னதி இங்குள்ளது.

ராமேஸ்வரம்

இந்துக்களின் புனித ஆலயம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி ஆலயம்.இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஓன்று .ராவணனை வதம் செய்த பிறகு ப்ரம்மஹத்தி தோஷ நிவாரணத்திற்கு ராமர் சிவ பூஜை செய்ய விரும்பிகிறார். அனுமனை காசிக்கு அனுப்பி சிவலிங்கம் எடுத்து வர பணிக்கிறார்.ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமானதால் சீதை மணலில் பிடித்த சிவ லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்கிறார். தாமதமாக வரும் ஆஞ்சநேயர் இதை பார்த்து கோபம் கொள்கிறார். அனுமனை சமாதனம் செய்ய அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் அருகில் வைத்து ராமர் பூஜை செய்கிறார். இன்றும் அனுமன் லிங்கமும் ராமலிங்கமும் இந்த ஆலயத்தில் உள்ளது. முதலில் அனுமன் லிங்கத்திற்கு பூஜை செய்த பின்பே ராமலிங்கத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. இங்கு 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளது. ஒவ்வொரு தீர்த்தத்தின் நீர் ருசி வித்தியாசமாக இருக்கும்.இந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ராமலிங்க தரிசனம் செய்வது இங்கு வழக்கம். முன்னோர்களுக்கு பித்ரு தோஷ நிவர்த்தியும் ராமேஸ்வரம் கடல் கரையில் இந்துக்கள் செய்வது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.

தேவிபட்டிணம்

ராமேஸ்வரத்திற்கு பதினைந்து கி.மீ முன்பு உள்ள ஊர் இது.ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு இங்கு நவக்கிரக பூஜை செய்து போனார் என்று சான்றுகள் கூறுகிறது. ஒன்பது நவபாஷாண கற்கள் சுமார் நூறு மீட்டர் தூரத்தில் கடலுக்குள் இருக்கிறது. இங்கு சாதரணமாக முழங்கால் அளவிற்கு தான் கடல் நீர் இருக்கும். ஒன்பது கிரகங்களும் நீருக்கு மேல் தெரியும் வகையில் இருக்கும். சில சமயங்களில் நீரின் அளவு அதிகமாகி நாலு அல்லது ஐந்து கிரகங்கள் மட்டுமே நீர் மேல தெரியும். ராமர் இங்கு நவக்கிரக பூஜை செய்யும் பொது கடல் அலை வராமல் ஜெகநாத பெருமாள் தடுத்து நிறுத்துகிறார்.இன்றும் தேவிபட்டினத்தில் கடலைடத்த ஜெகநாத பெருமாள் ஆலயம் கடல் கரையில் உள்ளது. இன்றும் இந்த பகுதியில் கடல் அமைதியாக காட்சி அளிப்பதற்கு இந்த பெருமாள் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.திருப்புல்லாணி ஜெகநாத பெருமாளையும் தரிசனம் பண்ணிவிட்டு ராமர் இலங்கைக்கு சென்றதாக வரலாறு.

ஞாயிறு, 23 நவம்பர், 2008

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் ஆலயம்


உத்திரகோசமங்கை ஆலயத்தில் இருந்து மிக அருகில் உள்ளது திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் ஆலயம்.108 திவ்ய தேச கோவில்களில் இதுவும் ஓன்று.இங்கு மூலவர் கல்யாண ஜெகநாதர் தாயார் கல்யாண பத்மாசினி .கல்யாணம் ஆகாதவர்கள் இங்கு தாயாரை வேண்டி திருமண ப்ராப்தி அடைகிறார்கள்.இங்கு சயன கோலத்திலும் பெருமாள் சன்னதி உண்டு.ராமர் பட்டாபிஷேக சன்னதியும் உண்டு.ராமர்,சீதை,லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார்.

உத்திரகோசமங்கை

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்திரகோசமங்கை என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.மாணிக்கவாசகர் அதிக நாள் இந்த ஆலயத்தில் தங்கி இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர்.இங்கு நடராஜர் சிலை மரகதத்தில் உள்ளது.இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் சொல்லப்படுகிறது.அதாவது தில்லை நடராஜரக்கு முன்பு இருந்தே இந்த ஆலயம் உள்ளது.ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்கமுடியும்.மற்ற நாட்களில் சந்தனகாப்பு சார்த்தபட்டிருக்கும்.ஆரூதரா தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தன காப்பு சார்த்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே களையப்படும்.இறைவன் உமையவள் மட்டும் காணுமாறு நடனம் ஆடியது உத்திரகோசமங்கையில் மட்டுமே.இங்கு இறைவன் உமயவளக்கு வேதம் உபதேசித்து நாட்டியமும் காட்டி அருளியதாக வரலாறு.இங்கு உள்ள நடராஜர் சபை ரத்தின சபை என்று அழைக்க படுகிறது.உத்திரகோசமங்கை என்பது அன்னை உமயவளையே குறிக்கும்.ரகசியமாக உபதேசம் அளிக்கப்பட்ட மங்கை என்று பொருள்.இங்குள்ள ஸ்தல விருட்சம் 3000 ஆண்டு பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

இன்மையில் நன்மை தருவார் கோவில்

மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் மட்டுமே. ஆனால் மதுரையில் மற்றுமொரு பழமை வாய்ந்த மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. அதுவும் நகரின் மத்தியில்.அது தான் இன்மையில் நன்மை தருவார் கோவில்.இது மிகவும் முக்கியமான் கோவில்களில் ஓன்று. நேதாஜி சாலையில் இருந்து இந்த கோவிலுக்கு செல்லலாம்.மேல மாசி வீதியில் இருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.இங்கு சிவ பெருமான் அவராலயே உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட்டுள்ளார். சோமசுந்தரர் தான் இங்குள்ள சுவாமியும். போன ஜென்ம பாவங்களுக்கு இந்த ஜென்மத்திலயே மன்னிப்பு அருளுகிறார் இந்த ஆலயத்தில்.வெளி பிரகாரத்தில் விபூதி விநாயகர்,பைரவர்,கால பைரவர்,முருகன்,கணேசர் உள்ளனர்.பொதுவாக சிவன் கோவில்களில் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கி இருக்கும்.ஆனால் இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி மேற்கு நோக்கி அமைக்க பட்டுள்ளது.மற்றுமொரு சிறப்பு சுவாமி சன்னதியில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சுவாமி அம்மனுடன் இருக்கும் காட்சி.அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.சுவாமி சன்னதியின் உள்புறம் நடராஜர்,மகாலக்ஷ்மி,விசாலாக்ஷி,பிரம்மா,சரஸ்வதி,துர்க்கா,சிவகாமி,தக்ஷிணாமூர்த்தி, மற்றும் கோதண்டராமர் சன்னதிகள் உள்ளது.பிரதோஷ காலத்தில் நடைபெறும் 108 சங்காபிஷேகம் மிகவும் பிரசித்தம்.பிரதோஷ காலத்தில் மீனாக்ஷி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கும் சங்காபிஷேக தரிசனம் செய்கிறார்கள். ஆவணி மாதத்தில் மீனாக்ஷி கோவில் உற்சவ மூர்த்திகளான சுவாமியும் அம்மனும் இந்த ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு செங்கோல் பெற்று ஆட்சி புரிகின்றனர்.

வெட்டுடையார் காளி கோவில்

மதுரையில் இருந்து தொண்டி செல்லும் பாதையில் கொல்லங்குடி என்ற சிற்றூர் உள்ளது.சிவகங்கையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர்.இங்குள்ள அருள்மிகு வெட்டுடையார் காளி கோவில் மிகவும் பிரசித்தம்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.பொதுவாக கிராமத்து மக்கள் வம்பு வழுக்ககளில் இருந்து விடுபட இந்த அம்மனிடம் வேண்டுகிறார்கள்.இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பு தொலைந்துபோன அல்லது காணாமல் போன பொருட்கள் மீண்டும் திரும்ப கிடைப்பதற்கு இந்த சக்தி வாய்ந்த அம்மனிடம் வேண்டி காரியசித்தி பெற்றவர்கள் ஏராளம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் செல்லும் ஒரு கோவிலாக தற்பொழுது வெட்டுடையார் கோவில் உள்ளது.மெயின் சாலையில் இருந்து கோவிலுக்கு சென்றுவர ஆட்டோ வசதி தற்பொழுது உள்ளது.மெயின் சாலையில் இருந்து சுமார் 3 கி.மீ உள் செல்ல வேண்டும். மெயின் சாலையில் கோவிலின் முகப்பு வளைவு உள்ளது.

வெட்டுடயாள் என்பாள் விளங்கும் திருக்கரங்கள்
எட்டுடயாள் சின்ன இடுப்பினிலே பட்டுடயாள்
தெம்புடயாள் பாதகர்க்கு வம்புடயாள்
கிண்கிணிய பூனுன்கிளி

ச்ண்டியாயி ச்ங்கரியாயி சாமாளயாயி
கோமளயாயி அருளும் இறையாவளாயி
அண்டி வருவார் தமக்கெல்லாம்
வாழ்வளிக்கும் காளிதருவாள் நமக்கு தனம்

வேதம் வணங்கிடும் வெட்டுடயாள் காளி
தனில் பாதம் பணிந்தால் பதம் தரும் -நிதம்
கிடைக்கும் சுகம் ஓங்கும் கேடில்லா
வாழ்க்கை படைக்கும் நிலைக்கும் பரந்து




வெள்ளி, 14 நவம்பர், 2008

திருகோஷ்டியூர்


திருகோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஓன்று.திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் சிவகங்கையில் இருந்து 25 கி.மீ வடக்கும் ,காரைக்குடியில் இருந்து 25 கி.மீ மேற்கு திசையிலும் உள்ளது திருகோஷ்டியூர் என்ற திருத்தலம். திருகோஷ்டியூர் நம்பி பிறந்த ஊர். ராமானுஜருக்கு நம்பி திருமந்திரம் உபதேசித்த ஊர்.திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் இந்த திருகோயில் உள்ளது.மாசி மாதம் மகம் நட்சித்திர கூடி வரும் தினத்தில் தெப்ப உற்சவம் நடைப்பெறும்.தெப்பத்தில் மிதக்கும் பெருமாளை சேவித்து சங்கல்பம் செய்து விளக்கு எடுத்தால் நினைத்த காரியம் உடனே கை கூடும். காரிய சித்தி ஆன பிறகு மீண்டும் அடுத்த மாசி மகம் தெப்ப திருவிழா நேரத்தில் வந்து விளக்கு தெப்பத்தில் மிதக்க விட வேண்டும்.முதல் முறை விளக்கு எடுப்பவர் காரியசித்தி ஆனவர்கள் விடும் விளக்கை எடுத்து சங்கல்பம் செய்ய வேண்டும்.தெப்ப திருவிழா சமயத்தில் நாடெங்கும் இருந்து வரும் மக்கள் வெள்ளம் கட்டுகடங்காமல் இருக்கும்.இந்த திருகோவில் 3 நிலைகளில் உள்ளது. கீழ் தளத்தில் சிவலிங்கம் உள்ளது.அதன் மேல் 3 நிலைகள் உள்ளது.முதல் நிலையில் பெருமாள் சவுமிய நாராயண பெருமாள் சயன கோலத்தில் உள்ளார்.இரண்டாம் நிலையில் பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார்.மூன்றாவது நிலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.மூன்றாவது தளத்தில் ஒரு சிறு இடைவெளி உள்ளது.அங்கிருந்து தான் ராமானுஜர் திருமந்திரத்தை உலகிற்கு தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ராமானுஜருக்கு திருமந்திரம் உபதேசிக்க நம்பி 17 முறை மறுக்கிறார்.18 வது முறை ஒத்துக்கொண்டு உபதேசிக்கிறார்.ஆனால் ராமனுஜரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு,அதாவது அவர் திருமந்திரத்தை வேறு எவருக்கும் சொல்லக்கூடாது என்று வாக்குறிதி.தவறினால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்று நம்பி கூறுகிறார்.ஆனால் ராமானுஜர் சத்தியத்தை மீறுகிறார்.தனக்கு நரகம் கிடைத்தாலும் பலருக்கு மோட்சம் கிடைக்கும் என்று நம்பிக்கு பதில் உரைக்கிறார்.நம்பி உடனே ராமானுஜரை எம்பெருமானார் என்று அழைக்கிறார்.இங்கு எம்பெருமனாருக்கும் சன்னதி உண்டு.


வியாழன், 13 நவம்பர், 2008

வெண்ணைமலை முருகன் கோவில்

கரூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெண்ணைமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி திருகோயில்.கரூர் திண்டுக்கல் புறவழி சாலையில்,இருந்து இந்த கோவிலுக்கு எளிதாக செல்லலாம்..ஒரு சிறு குன்றின் மேல் இந்த ஆலயம் அமைந்துள்ளது.படிகள் அதிகம் இல்லாததால் மிகவும் எளிதாக மலை ஏறி முருகனை தரிசித்து வரலாம்.ஸ்கந்த கவசத்தில் இந்த திருத்தலத்தை குறித்து "வெண்ணைமலை முருகா மெயவீட்டை தந்திடுவீர்" என்ற வரிகள் இடம் பெறுகிறது.காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி சந்நிதிகளும் இந்த கோவிலில் உள்ளது.தை பூசம் மற்றும் ஆடி கிருத்திகை இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்

திண்டுகல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 200 வருடங்கள் பழமையானது.சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுர வடிவில் இந்த கோவில் அமைக்க பட்டுள்ளது.திண்டுகல் கோட்டை (fort) மலை அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளதால் கோட்டை மாரியம்மன் என்று பெயர்.இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலை திப்பு சுல்தானின் படை வீரர்களால் பிரதிஷ்டை செய்ய பட்டது.தெற்கு புறம் வெற்றி விநாயகர் சன்னதியும் வடக்கு புறம் முருகன் சந்நிதியும் இந்த கோவிலில் உள்ளது.அம்மன் சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில் ஸிம்ஹ வாகனம் உள்ளது.மூல சன்னதியில் அம்மன் சற்று தாழ்வாகவே உள்ளது.தினமும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை அம்மனக்கு தங்க கவசம் சார்த்தப்படுகிறது.