திங்கள், 8 ஜூலை, 2013

எட்டுக்குடி முருகன் கோவில்


திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில் .அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று .இது மிக பழமையான கோவில்களில் ஓன்று.அருணகிரிநாதர் இந்த கோவில் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார் .நாகப்பட்டினம் அருகில் பொருள்வைத்த்சேரி என்ற ஊரில் ஒருசிற்பி இருந்தார். அவர் ஒரு தீவிர முருக பக்தர்.அவர் ஒரு சமயம் முருகன் சிலையை செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த சோழ மன்னர் முருகன் சிலையின் அழகில் மயங்கி சிற்பி இதுபோன்ற சிலையை வேறு எங்கும் உருவாக்க கூடாது என்று நினைத்து சிற்பியின் கட்டை விரலை அறுத்து விடுகிறார்..சிற்பி அந்த ஊரை விட்டு பக்கத்தில் இருந்த வேறு ஊருக்கு செல்கிறார் .
 
அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை வடிக்கிறார். கட்டை  விரல் இல்லாமலும் அதே போன்று இன்னொரு அழகான சிலையை வடிக்கிறார்.அந்த சமயம் முத்தரசன் என்ற ஒரு குறுநில மன்னர் அந்த வழியே வருகிறார் .மன்னரை பார்த்ததும் முருகன் அமர்ந்து இருந்த மயில் பறக்க ஆரம்பிக்கிறது . மன்னர் காவலாளிகளை பார்த்து அந்த மயிலை ' எட்டிப்பிடி ' என்று கூறுகிறார் .காவலர்கள் மயிலை பிடிக்கும் பொழுது மயிலின் கால் சிறிது சேதம் அடைந்துவிடுகிறது . மயில் சிலை அஙகயே நின்று விடுகிறது .எட்டுப்பிடி என்ற பெயர் தான் மருவி பின்பு எட்டுக்குடி ஆனது . பின்பு மீண்டும் அதே சிற்பி இன்னொரு முருகன் சிலை வடித்தார் .அது தான் என்கண் கோவிலில் உள்ள முருகன் சிலை .முதலில் செய்த சிலை தான் சிக்கல் கோவிலில் உள்ள சிலை.
 
எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார்.முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இந்த கோவிலில் முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள்தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம் . வான்மீகி சித்தர் கோவில் கொண்ட ஸ்தலம் .சத்ரு சம்ஹாரம் செய்ய இங்கு வேண்டுவார்கள் ஆசைக்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு ஓசைக்கு மணி கட்டுவதாக வேண்டுகிறார்கள் . எல்லா முருகன் கோவில்களிலும்  இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு .

கருத்துகள் இல்லை: