வெள்ளி, 21 ஜூன், 2013

தேனுபுரீஸ்வரர் கோவில்,பட்டீஸ்வரம்

Patteswaram Durai amman
கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ  தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம்  .காமதேனுவின்  கன்றுக்கு பட்டி என்று பெயர்.பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்று பெயர்.2000 ஆண்டு பழமையான கோவில் இது .பாடல் பெற்ற ஸ்தலம் .இறைவன் பெயர் பட்டீசுவரர் .இறைவனுக்கு இன்னொரு பெயர் தேனுபுரீசுவரர் .இறைவி பெயர் பல்வளநாயகி . இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.அஷ்டபுஜங்களுடன் அருள் பாலிக்கும் துர்கையை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கப் பெறலாம்.இத்தலத்து பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் . விஷக்கடி ,நாய்க்கடி ஆகியவையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து வேண்டி குணம் ஆனதாக சொல்லபடுகிறது .
இத்தலத்தின் ஏனைய சிறப்புகள் ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துபந்தல் அமைத்து வெயில் கொடுமை தெரியாமல் நடப்பதற்கு வழி செய்து கொடுத்தது .ஞானசம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும், திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது.இன்றும் இத்தலத்தில் முத்து பந்தல் திருவிழா நடைபெறுகிறது. ஆனிமாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும்.இதுவே இத்தலத்தின் சிறப்பு விழா. முத்துப்பந்தல் விழா நாளில் பகல் 12 மணிக்கு திருஞானசம்பந்தர் அடியார்களுடன் திருச்சத்திமுற்றம் கோயில் சன்னதியிலிருந்து முத்துப்பந்தல் நிழலில் எழுந்தருளி, பட்டீச்சரத்துக்கு வருதலும், பதிகம் பாடுதலும், திருமடத்துக்கு எழுந்தருளுதலும் ஆகிய காட்சிகள் நடைபெறும்.

பராசக்தியே தவம் செய்து வழிபட்ட தலம்.தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது.பட்டி தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய லிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார்.

கருத்துகள் இல்லை: