புதன், 28 ஜனவரி, 2009

அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயம்


அவினாசி கோவையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் திருப்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ளது. இது ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம்.இறைவன் திருநாமம் அவிநாசியப்பர்,அம்மன் திருநாமம் கருணாம்பிகை. சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.சுந்தரமூர்த்தி நாயனார் இங்குள்ள தாமரைக்குளத்தில் 'முதலை வாயில்' சிக்கிய சிறுவனை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.பிரம்மன் இங்கு நூறு ஆண்டுகளாக சிவனை வழிபட்டதாகவும் ,இந்திரனின் யானை ஐராவதம் இந்த சிவஸ்தலத்தில் 12 ஆண்டுகள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.முருகன்,காரைக்கால் அம்மன் மற்றும் காலபைரவருக்கும் தனி சன்னதிகள் உள்ளது.காலபைரவருக்கு வட மாலை சாற்றி வழிபாடு செய்வது இங்கு மிகவும் விசேஷம்.

சங்கமேஸ்வரர் ஆலயம்

சங்கமேஸ்வரர் ஆலயம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் உள்ளது.இது ஒரு கொங்கு நாடு பாடல் பெற்ற ஸ்தலம். இதற்க்கு மறுபெயர் கூடுதுறை . மூன்று நதிகள் கூடும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. பவனி ஆறு,காவிரி மற்றும் அம்ரிதவாகினி என்பது அந்த மூன்று நதிகளாகும்.அம்ரிதவாகினி என்பது சரஸ்வதி நதி போன்றது. அது மண்ணிற்கு அடியில் பாய்வதாக ஐதீகம்.கூடுதுறை திரிவேணி சங்கமத்திற்கு இணையானது.சங்கமேஸ்வரரையும் வேதநாயகி அம்மனையும் வணங்கினால் எந்த தீமையும் அணுகாது என்பது நம்பிக்கை.பவானிக்கு இன்னொரு பெயர் திருநன்னா அதாவது தீமை நன்னா ஊர் என்று பொருள்.
இந்த ஆலயத்தை சுற்றி ஐந்து மலைகள் உள்ளது.சங்ககிரி,திருசெங்கோடு,பத்மகிரி,மங்களகிரி மற்றும் வேதகிரி என்பதாகும் இந்த மலைகள்.சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. இன்னொரு முக்கியமான விஷயம் இது ஒரு சிவ ஸ்தலமாக இருந்தாலும் இங்கு பெருமாளுக்கும் தனி ஆலயம் உள்ளது. அதிகேசவ பெருமாள் மற்றும் சௌந்தரவல்லி தாயார் சன்னதியும் இங்கு உள்ளது. சுப்பிரமணியருக்கும் தனி சன்னதி உள்ளது. அருணகிரிநாதர் இங்கு வந்து முருகனை தரிசித்து பாடல்கள் இயற்றி உள்ளார்.பவானி ஈரோடில் இருந்தி 15 கி.மீ தொலைவிலும் சேலத்தில் இருந்து 56 கி.மீ தொலைவிலும் உள்ளது. கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடில் இருந்து இங்கு சென்று வர பேரூந்து வசதிகள் உள்ளது.

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்.

இஷா தியான மண்டபத்தில் இருந்து சுமார் ஐந்து கி.மீ தூரம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள கோவில் சென்றடையலாம். மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி நாதர் கோவில் உள்ளது. அம்மன் திருநாமம் சௌந்தரிய நாயகி.கோவில் பின் புறம் இருந்து மலை கோவில் செல்லும் பாதை தொடங்குகிறது.தென் கயிலை என்று அறியப்படும் வெள்ளியங்கிரி மலை மேல் இயற்கையாக அமைந்த குகைக்குள் பஞ்சலிங்கம் உள்ளது. அடிவாரத்தில் உள்ள கோவில் மட்டுமே எங்களால் தரிசனம் செய்ய முடிந்தது. சுமார் 6 கி.மீ தூரம் செங்குத்தான மலையில் ஏறி பஞ்சலிங்க தரிசனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.ஏழு மலைகள் ஏறவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகள் நிறைந்த மலை இது .இயற்க்கை சுனைகள் நிறைந்த மலை . பொதுவாக பௌர்ணமி இரவில் தான் வெள்ளியங்கிரி மலை ஏறுவார்கள் என்று எனது கோவை நண்பர் வெள்ளியங்கிரி சொல்லி இருக்கிறார். மலை ஏறி சிவ லிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருந்தும் என்னால் அங்கு செல்ல முடியவில்லை.பங்குனி உத்திரம்,சித்திரா பௌர்ணமி,மகா சிவராத்திரி போன்ற சமயங்களில் அதிக அளவில் பக்த ஜனங்கள் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்வார்கள் .தென்னக மக்கள் அமர்நாத் யாத்திரை அளவு வெள்ளியங்கிரி பஞ்சலிங்க தரிசனத்தையும் புனிதமாக கருதுகிறார்கள்.

தியானலிங்கம்

பேரூரில் இருந்து சிறுவாணி செல்லும் பாதையில் செல்லும் விலக்கு பாதையில் சென்றால் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் செல்லும் பாதையில் சுமார் நாலு அல்லது ஐந்து கி.மீ முன்பு தியானலிங்கம் செல்லும் பாதை பிரிகிறது.மெயின் சாலையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரம் உள்ளே நடந்து தான் செல்லவேண்டும். சொந்த வாகனத்தில் போனீர்கள் என்றால் தியானலிங்க மையம் வரை செல்லலாம்.சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் உருவாக்கப்பட்ட இஷா யோகா மையத்தினர் தான் இந்த தியானலிங்க ஆலயத்தை நிர்வாகம் பண்ணுகிறார்கள். இது ஒரு ஆலயம் என்று சொல்லமுடியாது. ஒரு தியான மண்டபம்.எல்லா மதத்தினரும் தியானத்திற்கு என்று வந்து போகும் இடம். அதற்க்கு ஏற்றார் போல உள்ளே நுழையும் முன் ஒரு சர்வ மத ஸ்தம்பம் இருப்பதை பார்க்கலாம்.அதில் இந்து,கிறிஸ்துவ,இஸ்லாமிய மற்றும் சீக்கிய ,ஜைன மதங்கள் சம்பந்தப்பட்ட சின்னங்கள் காணலாம். சிவலிங்கம் ஒரு தியான சின்னமாக தான் இங்கு கருதபடுகிறதே தவிர,இந்து மதம் சம்பந்தப்பட்ட ஒரு சின்னமாக அல்ல.இங்கு எந்த மொழியிலும் இறைவனை துதிப்பதோ பிரார்த்தனை செய்வதோ கிடையாது. தியான மண்டபத்திற்குள் நுழையும் முன்பு இந்த விஷயம் உங்களுக்கு சொல்லப்படுகிறது.லிங்கத்தை வணங்க கூடாது.எதுவும் வேண்டுவதோ பிரார்த்தனை செய்வதோ கூடாது. லிங்கத்தை நோக்கி மௌனமாக அமர்ந்து தியானம் மட்டும் செய்யுங்கள் என்று அறிவுரை தருகிறார்கள்.தியான மண்டபம் dome shaped ஆக உள்ளது இதன் தனித்தன்மை.எந்த விதமான தூண்களும் வட்டவடிவத்தில் இருக்கும் இந்த தியான மண்டபத்தில் இல்லை. அரை வட்டவடிவில் இருக்கும் தியான மண்டபத்தின் கூரை பிரமபிப்பு ஊட்டும். தியான மண்டபத்திற்குள் நடுநாயகமாக சர்ப்ப சுருள் மேல் பதிமூன்று அடி உயர சிவலிங்கம் காட்சி தருகிறது. வட்ட வடிவ கூரையில் இருந்து ஒரு கூம்பு வழி நீர் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சிவலிங்கம் மேல் விழுந்து கொண்டே இருக்கிறது. வட்ட வடிவத்தில் இருக்கும் மண்டபத்திற்குள் சுற்றிலும் சிறு சிறு தியான மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள் அமர்ந்து தியானம் பண்ணுகிறார்கள். இது அல்லாமல் சுற்றிலும் பாய் விரித்து வைத்துள்ளார்கள்..அதில் அமர்ந்தும் தியானம் செய்யலாம். எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் அமர்ந்து தியானம் செய்யலாம்.மண்டபத்திற்குள் நுழைந்த உடனயே நம்மை அங்கு நிலவும் அசாத்தியமான மௌனம் தாக்கும்.உண்மையிலயே இது போன்ற மௌனமான ஒரு சூழ்நிலையை நான் வேறு எங்கும் கண்டதில்லை. ஏதோ ஒரு வித அதிர்வு உங்களை தாக்குவதையும் உங்களால் உணரமுடிகிறது. பல பேர் செய்த தியான சக்தி லிங்கத்தில் உறைந்து அதிர்வுகளை நம்மை வந்தடைகிறது என்றும் சொல்கிறார்கள்.மண்டபத்திற்குள் நடப்பவர்கள் கட்டை விரல்களை தரையில் ஊன்றி தான் நடக்க வேண்டும்.நாம் சாதாரணமாக தரையில் நடக்கும்போது எந்த அளவிற்கு சப்தம் ஏற்படுகிறது என்று நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் தவறுதலாக சில சமயம் பாதம் தரையில் ஊன்றி நடந்துவிட்டால் அங்கு ஏற்படும் சத்தம் மிகவும் பெரிதாக கேட்கிறது. அது தியானத்திற்கு இடையூறாக இருப்பது நமக்கு உடனே புரிகிறது.இதனாலயே தியான மண்டபத்திற்கு உள் நுழையும் முன் பெண்களிடம் கொலுசு போன்றவை அணிந்திருந்தால் கழற்றி விடுமாறு அறிவுரை கூறுகிறார்கள்.இங்கு யோகா மற்றும் தியான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. வெளி நாட்டினரும் இங்கு தியானம் செய்வதற்காக அதிக அளவில் வருகிறார்கள்.

சனி, 10 ஜனவரி, 2009

பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்

கோயம்பத்தூரில் இருந்து சிறுவாணி செல்லும் பாதையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.இந்த ஆலயத்தின் கர்பகிரகத்தை கரிகால சோழன் எழுப்பினார் என்பது வரலாறு.ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இங்கு வந்து தரிசித்து பதிகங்கள் இயற்றி உள்ளார்.காமதேனுவின் மகள் பட்டி சிவனை இங்கு வழிபட்டதால் ஈஸ்வரனுக்கு பட்டீஸ்வரர் என்று திருநாமம்.மூலகிரகத்தில் சிவலிங்கத்திற்கு பின்னால் சுவற்றில் இன்றும் காமதேனுவின் ஓவியம் உள்ளது.பிற்காலத்தில் கர்நாடகத்தின் ஹோய்சால மன்னர்களும் விஜயநகர மன்னர்களும் கூட இங்கு சிவனை வழிபட்டதாக சொல்லப்படுகிறது.இங்குள்ள நடராஜ சபை கனகசபை என்று அழைக்கப்படுகிறது.மிகுந்த கலை வேலைபாடுகள் நிறைந்த சபை இது.மதுரை நாயக்கர் மன்னர் வழிதோன்றல் அழகாத்ரி நாய்கரால் எழுப்பப்பட்டது இந்த கனகசபை.இந்த பதிவு ஆரூத்ரா தரிசனத்தன்று எழுதப்படுவது தற்செயலாக அமைந்த ஒரு சிறப்பு என்று நான் கருதிகிறேன்.மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று ஆரூத்ரா தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.எல்லா சிவ ஆலயங்களிலும் ஆரூத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடபட்டாலும் மிகவும் விசேஷம் ஐந்து சபைகளில் நடைபெறும் அரூத்ரா தரிசனம் தான். பஞ்ச சபைகள் என்று சொல்லப்படும் இந்த சபைகளில் சிவ பெருமான் நடனமாடியதாக சொல்லப்படுகிறது.
1.தில்லை நடராஜர் ஆலயத்தில் உள்ள கனகசபை
2.மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் உள்ள வெள்ளி அம்பலம்( இங்கு இறைவன் கால் மாற்றி ஆடியதாக சொல்லப்படுகிறது)
3.சென்னை அருகே உள்ள திருவலங்காட்டில் ரத்தின சபை (திருவள்ளூர் அரக்கோணம் பாதையில் உள்ளது)
4.திருநெல்வேலியில் நெல்லையப்பர் ஆலயத்தில் தாமிரசபை
5.குற்றாலத்தில் குற்றாலநாதர் ஆலயத்தில் சித்திரசபை
இந்த பஞ்ச சபைகள் தவிர புகழ் வாய்ந்த மற்ற நடராஜர் சன்னதிகள் சிலவற்றிலும் அரூத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
1.பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்
2.குடந்தை கீழ்கோட்டம் ஆலயம்
3.திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் (விழுப்புரம் அருகில்)
4.உத்திரகோசமங்கை மரகத நடராஜர்
5.திருவாரூர் ஆலயம்
6.திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம்
பேரூர் கோவிலில் நடைபெறும் நாட்டிய அஞ்சலி விழா மிகவும் பிரசித்தம்.இறைவனுக்கு நாட்டிய கலை வடிவில் வழிபாடு செய்யும் கலை விழா இது.வெளி பிரகாரத்தில் அம்மன் மரகதாம்பாள் சன்னதி உள்ளது.

செவ்வாய், 6 ஜனவரி, 2009

மாசானி அம்மன் ஆலயம்,ஆனைமலை

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் ஆனைமலையில் உள்ளது அருள்மிகு மாசானி அம்மன் திருகோவில்.சீதையை தேடி ராமர் சென்ற பொழுது ஆனைமலை மயானத்தில் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.அப்பொழுது ராமர் களி மண்ணில் அம்மன் சிலை செய்து அங்கு வழிபட்டதாக சொல்லப்படுகிறது.அம்மன் காட்சி அளித்து ராவண வத்திற்கு அருளியதாக சொல்லப்படுகிறது. வடமொழியில் மயானத்தை ஸ்மஸாநம் என்று சொல்லப்படுகிறது.அம்மனின் திருபெயர் ஆரம்பத்தில் ச்மாசனி என்று இருந்தது மருவி மாசானி என்றானது என்றும் சொல்லப்படுகிறது.ஆழியார் மற்றும் உப்பர் நதிகள் இரண்டும் கலக்கும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம் இது.குறை தீர்க்கும் ஆலயம் என்றும் இதற்க்கு பெயர் உண்டு.மிக முக்கியமான விஷயம் இந்த கோவிலில் அம்மன் மல்லாக்க படுத்த நிலையில் காட்சி தருகிறார்.நான்கு கைகளுடன் 15 அடி உயரமுள்ள அம்மன் விக்கிரகம் படுத்த நிலையில் அருள் பாலிக்கிறார்.இரண்டு கைகள் தரையில் வைத்த நிலையிலும் இன்னும் இரண்டு கைகள் உயர்த்தி பிடித்த நிலையிலும் அம்மன் காட்சி தருகிறார்.பக்தர்களின் குறைகள்,உடல் நல குறைபாடுகள் மற்றும் வம்பு வழக்குகளில் நீதி வழுங்கதல் போன்றவை மாசானி அம்மன் அருளால் நடைபெறுகிறது என்று இன்றும் பக்த ஜனங்கள் நம்புகிறார்கள்.இந்த ஆலயத்தில் ஒரு நீதி கல் உள்ளது.பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள்,பிரார்த்தனைகள்,ஒரு காதிகத்தில் எழுதி அம்மன் முன் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து விட்டு ,மிளகாய் அரைத்து நீதி கல்லில் தேய்த்து பிரார்த்தனை செய்தால் 19 நாட்களுக்குள் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஓம் ஸ்ரீ ஹரி ஆதி மகாசக்தி மாசானி அம்மே சரணம்

புளியகுளம் விநாயகர் ஆலயம்

கோவை அருகே உள்ள இன்னொரு பிரபலமான விநாயகர் ஆலயம் தான் புளியகுளம் முந்தி விநாயகர் ஆலயம். ஆசியாவிலையே இது தான் மிக பெரிய விநாயகர் விக்கிரகம்.இந்த விநாயகர் விக்கிரகத்தின் எடை பதினான்கு டன் என்று சொல்லப்படுகிறது.1993 ஆம் அண்டு முதல் இந்த ஆலயம் உள்ளது. தமிழகத்தில் பிரபலமான பல விநாயகர் பிரதிஷ்டைகள் பல ஆலயங்களில் உள்ளது.அவைகளில் சில கீழே தரப்பட்டுள்ளது.


மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர்
மூன்று குறுணி அரிசி மாவில் மோதகம் செய்து விநாயகருக்கு படைக்கபடுவதால் முக்குறுணி விநாயகர் என்று பெயர்.


சிவ லிங்கம் கையில் வைத்திருக்கும் பிள்ளையார்பட்டி விநாயகர்
மூஞ்சிறு மேல் அமர்ந்திருக்கும் பிள்ளையார் திருவல்லத்தில் உள்ளது
ஸிம்ஹ வாகனத்தில் அமர்ந்திருக்கும் விநாயகரை சென்னை பாரி முனையில் உள்ள கச்சலீஸ்வரர் ஆலயத்தில் காணலாம்.

சுவாமிமலையில் உள்ள கணபதிக்கு நேத்ரா கணபதி என்று பெயர்.

திருபரங்குன்றத்தில் உள்ள விநாயகர் கையில் கரும்புடன் காணபடுகிறார்.

காரைக்குடி அருகே இலுப்பைகுடியில் இருப்பதிலையே சின்ன விநாயகரை காணலாம்.

புளியகுளம் விநாயகர் சுமார் 19 அடி உயரம் உள்ள விக்கிரகம்

ஈச்சனாரி விநாயகர் ஆலயம்

கோயம்பத்தூர் அருகே உள்ள மிக முக்கியமான விநாயகர் ஆலயங்களில் ஈச்சனாரி விநாயகர் ஆலயமும் ஓன்று.மிகவும் பழமையான ஆலயம். கி.பி. 1500 ஆம் ஆண்டு முதலே இந்த ஆலயம் உள்ளதகாக வரலாறு. கோயம்பத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பாதையில் கோவையில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் சாலை ஓரத்திலயே உள்ளது இந்த விநாயகர் ஆலயம்.விநாயகர் சிலை ஆறு அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்டது. மதுரையில் இருந்து பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு இந்த விநாயகர் சிலையை கொண்டு செல்லும் பாதையில் வாகனம் இந்த இடத்தில் சிக்கி,மேலும் நகர்த்த முடியாமல் போனது. அதனால் விநாயகர் சிலையை அந்த இடத்திலயே வைத்து விட்டனர்.இது தான் ஈச்சனாரி கோவிலின் ஸ்தல வரலாறு. இந்த விநாயகருக்கு தங்க ரத வாகனம் உண்டு.

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

அச்சன் கோவில் ஐயப்பன் ஆலயம்

முருகனுக்கு அறுபடை வீடு போல அய்யப்பனுக்கு ஐந்து திருத்தலங்கள்.அவை  குளத்தூபுழை,ஆரியன்காவு,அச்சன்கோவில்,எருமேலி,சபரிமலை ஆகும்.பெருமாளின் 10 அவதாரங்களில் ஒருவரான பரசுராமன் தான் இந்த ஐந்து அய்யப்ப கோவில்களில் அமைய காரணமானவர் என்பது வரலாறு.செங்கோட்டையில் இருந்து அச்சன் கோவில் செல்ல மலை பாதை உள்ளது.செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ மலை மேல் அடர்ந்த காட்டில் உள்ளது இந்த ஐயப்பன் ஆலயம். செங்கோட்டையில் இருந்து தமிழக மற்றும் கேரள அரசு பேரூந்துகள் அச்சன் கோவில் செல்ல இயக்கப்பட்டு வருகிறது.ஆனால் நாங்கள் சென்ற நேரம் புனலூர் செங்கோட்டை மலைப்பாதை செப்பனிட்டு வந்த காரணத்தினால் கேரளாவில் இருந்து பேரூந்துகள் வர இயலாத நிலையில், பயணிகள் குறைவாக இருந்த காரணத்தால், இரண்டு அரசு போக்குவரத்து பேரூந்துகளும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டிருந்தது.அதே காரணத்தினால் எங்களால் ஆரியன்காவு மற்றும் குளத்தூபுழை செல்ல முடியவில்லை.செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் இருந்து அச்சன் கோவில் சென்று வர டாக்சி 550 ரூபாய் கேட்கிறார்கள்.நாங்கள் அப்படி தான் சென்றோம்.அச்சன் கோவில் இருக்கும் மலை பகுதி கேரள மாநிலத்தின் எல்லைக்கு உட்பட்டது.போகும் வழியில் மணலார் மற்றும் கும்புவுருட்டி நீர்வீழ்ச்சிகள் உள்ளது.குற்றால அருவி போல இதுவும் ஒரு சுற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது.கோவிலில் இருக்கும் அயப்பன் விக்கிரகம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இங்கு கொடுக்கும் ஐயப்பன் சந்தனம் பாம்பு கடிக்கு பயன்படும் மருந்தாக பக்தர்கள் நம்புகிறார்கள்.அச்சன் கோவிலில் ஐயப்பன் பூர்ணா புஷ்கலா என்று இரண்டு தேவியருடன் காட்சி அளிக்கிறார்.ஐயப்பன் தனது ஐந்து திருதலங்களிலும் வேறு வேறு கோலத்தில் தரிசனம் தருகிறார்.குளத்தூபுழையில் பாலகனாகவும்,ஆரியங்காவில் இளைஞனாகவும் ,அச்சன் கோவிலில் குடும்பஸ்தனாக மனைவியருடனும்,எருமேலியில் காக்கும் கடவுள் தர்ம சாஸ்தாவாக்வும், சபரிமலையில் பிரம்மசாரியாகவும் காட்சி தருகிறார்.சாமியே சரணம் ஐயப்பா.

குற்றாலநாத ஸ்வாமி கோவில்

திருநெவேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகில் உள்ளது குற்றாலம்.பல அருவிகள் உள்ள ஒரு சுற்றுலா ஸ்தலமும் கூட.இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.சிவ பெருமான் சங்கு வடிவத்தில் இங்கு காட்சி அளிக்கிறார். நடராஜர் சந்நிதி சித்திரசபை என்று அறியப்படுகிறது. அருவிக்கு மிக அருகாமையில் ,அருவி சத்தம் எப்பொழுதும் கேட்டு கொண்டே இருக்கும் ஓர் ஆலயம். கைலாயத்தில் சிவ பெருமான் பார்வதி தேவி திருமணம் நடக்கும் சமயத்தில் அனைத்து கடவுள்களும் அங்கு கூடி விடுவதால் ஒரு பக்கமாக உலகம் சாயவும் சமநிலைபடுத்துவதற்காக சிவ பெருமான் அகத்திய முனிவரை தெற்கு நோக்கி செல்ல பணிக்கிறார்.அப்படி குற்றாலம் வரும் அகத்தியர் இப்போது குற்றாலநாதர் ஆலயம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்.அபொழுது அங்கு ஒரு வைஷ்ணவ ஆலயம் இருந்திருக்கிறது.அகத்தியர் அந்த ஆலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.அகத்தியர் இலஞ்சியில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வேண்டுகிறார்.பின்பு ஒரு வைணவ பக்தர் போல மீண்டும் குற்றாலத்திற்கு வருகிறார்.அங்கு அவர் பெருமாளை சிவலிங்கமாக மாற்றி அற்புதம் செய்கிறார்.அப்படி சுருங்கி சிவ லிங்கமாக மாறியதினால் குறுகுடல் என்றும் ஒரு பெயர் உண்டு.அந்த பெயர் தான் மருவி குற்றாலம் என்றானது என்றும் சொல்லப்படுகிறது.அதனால் தானோ என்னவோ இங்கு ஆண்டு திருவிழா நேரத்தில் சிவ பெருமான் ஆறு கோலத்தில் காட்சி தருகிறார். பிரம்மா,விஷ்ணு,ருத்திரர்,ஈஸ்வரர்,சதாசிவர்,மற்றும் சுப்பிரமணியர் என்று காட்சி தருகிறார்.