சனி, 10 ஜனவரி, 2009

பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்

கோயம்பத்தூரில் இருந்து சிறுவாணி செல்லும் பாதையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.இந்த ஆலயத்தின் கர்பகிரகத்தை கரிகால சோழன் எழுப்பினார் என்பது வரலாறு.ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இங்கு வந்து தரிசித்து பதிகங்கள் இயற்றி உள்ளார்.காமதேனுவின் மகள் பட்டி சிவனை இங்கு வழிபட்டதால் ஈஸ்வரனுக்கு பட்டீஸ்வரர் என்று திருநாமம்.மூலகிரகத்தில் சிவலிங்கத்திற்கு பின்னால் சுவற்றில் இன்றும் காமதேனுவின் ஓவியம் உள்ளது.பிற்காலத்தில் கர்நாடகத்தின் ஹோய்சால மன்னர்களும் விஜயநகர மன்னர்களும் கூட இங்கு சிவனை வழிபட்டதாக சொல்லப்படுகிறது.இங்குள்ள நடராஜ சபை கனகசபை என்று அழைக்கப்படுகிறது.மிகுந்த கலை வேலைபாடுகள் நிறைந்த சபை இது.மதுரை நாயக்கர் மன்னர் வழிதோன்றல் அழகாத்ரி நாய்கரால் எழுப்பப்பட்டது இந்த கனகசபை.இந்த பதிவு ஆரூத்ரா தரிசனத்தன்று எழுதப்படுவது தற்செயலாக அமைந்த ஒரு சிறப்பு என்று நான் கருதிகிறேன்.மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று ஆரூத்ரா தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.எல்லா சிவ ஆலயங்களிலும் ஆரூத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடபட்டாலும் மிகவும் விசேஷம் ஐந்து சபைகளில் நடைபெறும் அரூத்ரா தரிசனம் தான். பஞ்ச சபைகள் என்று சொல்லப்படும் இந்த சபைகளில் சிவ பெருமான் நடனமாடியதாக சொல்லப்படுகிறது.
1.தில்லை நடராஜர் ஆலயத்தில் உள்ள கனகசபை
2.மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் உள்ள வெள்ளி அம்பலம்( இங்கு இறைவன் கால் மாற்றி ஆடியதாக சொல்லப்படுகிறது)
3.சென்னை அருகே உள்ள திருவலங்காட்டில் ரத்தின சபை (திருவள்ளூர் அரக்கோணம் பாதையில் உள்ளது)
4.திருநெல்வேலியில் நெல்லையப்பர் ஆலயத்தில் தாமிரசபை
5.குற்றாலத்தில் குற்றாலநாதர் ஆலயத்தில் சித்திரசபை
இந்த பஞ்ச சபைகள் தவிர புகழ் வாய்ந்த மற்ற நடராஜர் சன்னதிகள் சிலவற்றிலும் அரூத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
1.பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்
2.குடந்தை கீழ்கோட்டம் ஆலயம்
3.திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் (விழுப்புரம் அருகில்)
4.உத்திரகோசமங்கை மரகத நடராஜர்
5.திருவாரூர் ஆலயம்
6.திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம்
பேரூர் கோவிலில் நடைபெறும் நாட்டிய அஞ்சலி விழா மிகவும் பிரசித்தம்.இறைவனுக்கு நாட்டிய கலை வடிவில் வழிபாடு செய்யும் கலை விழா இது.வெளி பிரகாரத்தில் அம்மன் மரகதாம்பாள் சன்னதி உள்ளது.

கருத்துகள் இல்லை: