ஞாயிறு, 18 ஜனவரி, 2009

தியானலிங்கம்

பேரூரில் இருந்து சிறுவாணி செல்லும் பாதையில் செல்லும் விலக்கு பாதையில் சென்றால் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் செல்லும் பாதையில் சுமார் நாலு அல்லது ஐந்து கி.மீ முன்பு தியானலிங்கம் செல்லும் பாதை பிரிகிறது.மெயின் சாலையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரம் உள்ளே நடந்து தான் செல்லவேண்டும். சொந்த வாகனத்தில் போனீர்கள் என்றால் தியானலிங்க மையம் வரை செல்லலாம்.சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் உருவாக்கப்பட்ட இஷா யோகா மையத்தினர் தான் இந்த தியானலிங்க ஆலயத்தை நிர்வாகம் பண்ணுகிறார்கள். இது ஒரு ஆலயம் என்று சொல்லமுடியாது. ஒரு தியான மண்டபம்.எல்லா மதத்தினரும் தியானத்திற்கு என்று வந்து போகும் இடம். அதற்க்கு ஏற்றார் போல உள்ளே நுழையும் முன் ஒரு சர்வ மத ஸ்தம்பம் இருப்பதை பார்க்கலாம்.அதில் இந்து,கிறிஸ்துவ,இஸ்லாமிய மற்றும் சீக்கிய ,ஜைன மதங்கள் சம்பந்தப்பட்ட சின்னங்கள் காணலாம். சிவலிங்கம் ஒரு தியான சின்னமாக தான் இங்கு கருதபடுகிறதே தவிர,இந்து மதம் சம்பந்தப்பட்ட ஒரு சின்னமாக அல்ல.இங்கு எந்த மொழியிலும் இறைவனை துதிப்பதோ பிரார்த்தனை செய்வதோ கிடையாது. தியான மண்டபத்திற்குள் நுழையும் முன்பு இந்த விஷயம் உங்களுக்கு சொல்லப்படுகிறது.லிங்கத்தை வணங்க கூடாது.எதுவும் வேண்டுவதோ பிரார்த்தனை செய்வதோ கூடாது. லிங்கத்தை நோக்கி மௌனமாக அமர்ந்து தியானம் மட்டும் செய்யுங்கள் என்று அறிவுரை தருகிறார்கள்.தியான மண்டபம் dome shaped ஆக உள்ளது இதன் தனித்தன்மை.எந்த விதமான தூண்களும் வட்டவடிவத்தில் இருக்கும் இந்த தியான மண்டபத்தில் இல்லை. அரை வட்டவடிவில் இருக்கும் தியான மண்டபத்தின் கூரை பிரமபிப்பு ஊட்டும். தியான மண்டபத்திற்குள் நடுநாயகமாக சர்ப்ப சுருள் மேல் பதிமூன்று அடி உயர சிவலிங்கம் காட்சி தருகிறது. வட்ட வடிவ கூரையில் இருந்து ஒரு கூம்பு வழி நீர் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சிவலிங்கம் மேல் விழுந்து கொண்டே இருக்கிறது. வட்ட வடிவத்தில் இருக்கும் மண்டபத்திற்குள் சுற்றிலும் சிறு சிறு தியான மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள் அமர்ந்து தியானம் பண்ணுகிறார்கள். இது அல்லாமல் சுற்றிலும் பாய் விரித்து வைத்துள்ளார்கள்..அதில் அமர்ந்தும் தியானம் செய்யலாம். எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் அமர்ந்து தியானம் செய்யலாம்.மண்டபத்திற்குள் நுழைந்த உடனயே நம்மை அங்கு நிலவும் அசாத்தியமான மௌனம் தாக்கும்.உண்மையிலயே இது போன்ற மௌனமான ஒரு சூழ்நிலையை நான் வேறு எங்கும் கண்டதில்லை. ஏதோ ஒரு வித அதிர்வு உங்களை தாக்குவதையும் உங்களால் உணரமுடிகிறது. பல பேர் செய்த தியான சக்தி லிங்கத்தில் உறைந்து அதிர்வுகளை நம்மை வந்தடைகிறது என்றும் சொல்கிறார்கள்.மண்டபத்திற்குள் நடப்பவர்கள் கட்டை விரல்களை தரையில் ஊன்றி தான் நடக்க வேண்டும்.நாம் சாதாரணமாக தரையில் நடக்கும்போது எந்த அளவிற்கு சப்தம் ஏற்படுகிறது என்று நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் தவறுதலாக சில சமயம் பாதம் தரையில் ஊன்றி நடந்துவிட்டால் அங்கு ஏற்படும் சத்தம் மிகவும் பெரிதாக கேட்கிறது. அது தியானத்திற்கு இடையூறாக இருப்பது நமக்கு உடனே புரிகிறது.இதனாலயே தியான மண்டபத்திற்கு உள் நுழையும் முன் பெண்களிடம் கொலுசு போன்றவை அணிந்திருந்தால் கழற்றி விடுமாறு அறிவுரை கூறுகிறார்கள்.இங்கு யோகா மற்றும் தியான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. வெளி நாட்டினரும் இங்கு தியானம் செய்வதற்காக அதிக அளவில் வருகிறார்கள்.

1 கருத்து:

Bhargavisri Gurunathan சொன்னது…

லிங்க வடிவின் பொருள் என்ன.... ஏன் லிங்க வடிவன் தேர்வு செய்ய பட்டது....