சனி, 9 ஜனவரி, 2016

கள்ளழகர் கோவில், திருமாலிருஞ்சோலை




மதுரையிலிருந்து 21 கி.மீ தொலைவிலுள்ளது அழகர்மலை.அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த இடத்துக்கு சோலைமலை,திருமாலிருஞ்சோலை என்னும் பெயர்களும் உண்டு. இன்னொரு சிறப்பு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையும் இந்த மலையில் தான் உள்ளது. அழகர் கோவிலின் தீர்த்தம் நூபரகங்கை மலை மேலே உள்ளது.நூபர கங்கை போகும் பாதையில் உள்ளது பழமுதிர்சோலை. பழமுதிர்சோலை குறித்த தனி பதிவு இந்த வலைதளத்திலுள்ளது.

இங்கு மூலவருக்கு பெயர் பரமஸ்வாமி. உற்சவர் அழகர் மற்றும் சுந்தரராஜ பெருமாள் என அறியப்படுகிறார். தாயார் பெயர் கல்யாணசுந்தரவல்லி. முதிர் கன்னிகள் திருமண வரம் வேண்டி கல்யாணசுந்தரவல்லி தாயாரை வேண்டினால் திருமணம் நடப்பது உறுதி என பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு பொதுவாக நின்ற கோலத்திலிருக்கும் ஆண்டாள் இங்கு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பக்தர்கள் இங்கு வேண்டுதல் நியறைவேறிய உடன் முடி காணிக்கை செய்வது வழக்கம். ஐயப்பன் கோவிலில் இருப்பது போலவே இங்கும் கோவிலுக்கு செல்லும் முன் பதிநெட்டாம்படி கருப்பணசாமி காவல் தெய்வமாக விளங்குகிறார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்னொரு சிறப்பு. மதுரை மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த சித்திரை திருவிழாவில் நடக்கும் மீனாக்ஷி கல்யாணமும்,அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த விழாக்கள். தங்கை மீனாக்ஷியின் கல்யாணதிற்கு பெருமாள் வரும் முன் திருமணம் முடிந்து விட்டதால் கல்யாணதிற்கு செல்லாமல் கோவித்து கொண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா தான் மதுரை சித்திரை விழா. கல்யாணத்திற்கு அழகர் மலையிலிருந்து மதுரைக்கு வரும் அழகரை எதிரில் சென்று வரவேற்று சேவிப்பது தான் எதிர் சேவை என்பது. சித்திரை திருவிழாவில் எதிர் சேவை என்பது ஒரு முக்கியமான அம்சம். இன்னொரு அமசம்  அழகர் ஆற்றில் இறங்க வரும் பொழுது அணியும் பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து கொண்டு வரப்படுகிறது.
நூபுர கங்கை ஒரு வற்றாத நீரூற்று. நூபுர கங்கை, செல்லும் பாதை, அடிவார கள்ளழகர் கோவில், பழமுதிர்சோலை போன்ற இடங்களில் அதிக அளவில் குரங்குகள் உள்ளன. சற்று கவனக்குறைவாக இருந்தால் கையிலிருக்கும் பொருட்களை எடுத்து சென்று விடும். 

கருத்துகள் இல்லை: