சனி, 9 ஜனவரி, 2016

கூடல் அழகர் பெருமாள் கோவில் மதுரை



மதுரை மாநகரில் பெரியார் பேரூந்து நிலயம் அருகில் உள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கூடல் அழகர் பெருமாள் கோவில். மதனகோபாலஸ்வாமி கோவில், இன்மையில் நன்மை தருவார் கோவில், கூடல் அழகர் கோவில்  மூன்றுமே மிக அருகில் உள்ளது.

பெருமாளின் திருநாமம் கூடலழகர் பூமகள் திருமகள் உடனுறைய.அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார். தாயார் மதுரவல்லி தாயார். சக்கரத்தாழ்வார்,ஆஞ்சநேயர் மற்றும் ஆண்டாள் சன்னதியும் இங்கு உண்டு. பொதுவாக பெருமாள் கோவிலில் நவக்கிரக சன்னதி இருப்பதில்லை.அதற்கு பதிலாக சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கும். ஆனால் கூடல் அழகர் கோவிலில் இரண்டுமே காணலாம். ஆண்டாள் சன்னதிக்கு பின்புறம் நந்தவனம் உள்ளது. தாயார் சன்னதி மண்டபத்தில் இருபுறமும் உள்ள தூண்களில் தட்டினால் சப்த ஸ்வரங்கள் கேட்கலாம்.

பாண்டிய மன்னன் முக்தியளிக்கும் மதம் என்பதுக்கு விளக்கம் கேட்டு ஒரு பொற்கிழி கட்டி தொங்க விடுகிறார். இதற்கு சரியான விளக்கம் யாராவது அளித்தால் பொற்கிழி அறுந்து விழும் என அரசவை புரோகிதர் செல்வநம்பி அரசரிடம் கூறுகிறார். பலர் விளக்கம் அளித்தும் எந்த அதிசயமும் நடக்கவில்லை. அப்போது செல்வநம்பியின் கனவில் பெருமாள் வந்து ஸ்ரீவல்லிபுதூரில் வசிக்கும் விஷ்ணு சித்தரை அழைத்து விளக்கம் கேட்க சொல்லுகிறார். அதன்படி மன்னரால் அழைக்கபட்டு விஷ்ணு சித்தர் மன்னார் முன் வந்து வைணவம் தான் முக்தியளிக்கும் மதம் என விளக்க பொற்கிழியறுந்து விழுகிறது. வியப்படைந்த மன்னர். விஷ்ணு சித்தருக்கு பொற்கிழி பரிசளித்து கௌவரிக்கும் பொருட்டு மதுரை மாநகரிலே பல்லக்கில் வைத்து ஊர்வலமாக அழைத்து வர ஏற்பாடு  செய்கிறார். அப்பொழுது விஷ்ணு சித்தர் முன் வானத்தில் விண்ணகர பெருமாள் தோன்றி ஆசீர்வாதம் செய்கிறார். பெருமாளின் அழகில் மயங்கிய விஷ்ணு சித்தர் பக்தர்களின் கண் பட்டு விடுமே என பயந்து

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்;
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா


என பெருமாள் பல்லாண்டு வாழவேண்டும் என பாடுகிறார்..இது பக்தியின் உச்சகட்டம். பெருமாள் மனம் மகிழ்ந்து நீரே பக்தியில் பெரியவர் என்று வாழ்த்துகிறார்.அன்று முதல் விஷ்ணு சித்தர் பெரியஆழ்வார் என அறியப்பட்டார்.  இங்கு பல்லாண்டு பாட்பெற்றதால் ராமானுஜர் இந்த திருத்தலத்தை பரமபதத்துக்கு நிகரான புனித தலமாக கருதினார். சிலப்பதிகாரத்தில் கூடல் அழகரை அந்தர வானத்து எம்பெருமாள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: