செவ்வாய், 10 ஜூலை, 2012

பெங்களூரில் அறுபடை வீடு -ஷண்முகர் கோவில்

முருகனின் அறுபடை வீடு கோவில்களும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தமிழகத்தில் கோவை அடுத்துள்ள சூலூரிலும் ,சென்னை பெசன்ட் நகரிலும் அமைந்துள்ளது . இங்கு அறுபடை வீடு ஊர்களின் பெயர்களிலேயே முருகனுக்கு தனி சன்னதிகள் உண்டு . கோவை கோவில் சாலை ஓரத்திலும் , சென்னை கோவில் கடற்கரை அருகிலும் அமைந்துள்ளது. தற்பொழுது இந்த வரிசையில் பெங்களூரில் குறிஞ்சி கடவுள் முருகனுக்கு ஒரு சிறிய குன்றின் மேலே அறுபடை வீடு கோவில்கள் அமைத்துள்ளார்கள் . கண்டிப்பாக தரிசனம் செய்து பரவசம் அடைய வேண்டிய ஒரு கோவில் . இந்த கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு . மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள பெம்ல் லே அவுட்டில் ,இந்த ஷண்முகர் கோவில் அமைந்துள்ளது.

ஒரே இடத்தில் அறுபடை வீட்டு முருகனையும் தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.ஸ்ரின்கேரி சங்கராச்சார்யா சுவாமிகளின் உத்தரவு படி அருணாச்சல முதலியார்  என்பவர் இந்த கோவிலை உருவாக்கி உள்ளார்.சற்று தொலைவில் இருந்து பார்த்தாலும் குன்றின் மேல் ஆறு முகங்களும் தெரியும் படி கோபுர அமைப்பு உள்ளது .முருகன் சன்னதிகள் குன்றின் மேல் வட்டவடிவத்தில் அமைத்துள்ளார்கள் .கீழே பஞ்சமுக விநாயகர் சன்னதி உள்ளது.

கோவிலின் உச்சியில்  சூரிய ஒளியை உள்வாங்கும் நான்கு  உணரிகள் பொருத்தி உள்ளார்கள்.இதில் இரண்டு உணரிகள் பக்கவாட்டிலும் இரண்டு செங்குத்தாகவும் பொருத்தி உள்ளார்கள் .இவைகள் காலை முதல் மாலை வரை  அதிக பட்ச சூரிய ஒளியை உள்வாங்கும் திசைக்கு தானாகவே இடம் மாற்றி கொள்கிறது.இப்படி உள்வாங்கப்படும் சூரிய ஒளி காலை முதல் மாலை வரை மூல விகரகத்தின் மேலும் விழும் படி அமைத்துள்ளார்கள்.இதை சூர்யா கிரண அபிஷேகம் என்று சொல்கிறார்கள் .இது தவிர கோபுர உச்சியில் ஒரு பளிங்கு குவிமாடம் உள்ளது .இது 42 அடி உயரத்தில் அமைத்துள்ளார்கள் .இதில்  ஒரு இஞ்சு அகலத்தில் 2500 பளிங்கு கற்கள் பதித்துள்ளார்கள் .பகல் நேரத்தில் சூரிய ஒளி இந்த கற்களின் மேல் படும் பொழுது அழகிய வானவில் நிறங்களை அதில் காண முடியும் .இரவில் 27 வாட் LED விளக்குகளால் ஒளிமயமாகிறது .அப்பொழுது இந்த பளிங்கு கற்களில் இருந்து 16 விதமான வண்ணங்கள் வெளிபடுகிறது.ஏறக்குறைய 138 விதமான வெவ்வேறு வடிவங்களாக  வெளிபடுகிறது .சுற்று வட்டாரத்தில் 10 கி.மீ ஆரத்திற்கு இந்த ஒளிமயமான காட்சிகள் தெரியும் என்று சொல்லபடுகிறது .பளிங்கு கோபுரம் நல்ல உயரத்தில் குன்றின் மேல் இருப்பதால் இது சாத்தியமே.

கருத்துகள் இல்லை: