வியாழன், 11 டிசம்பர், 2008

பஞ்சமுகி

மந்திராலயத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள இடம் தான் எம்மிகநூர். இங்கு தான் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இந்த இடத்தை பஞ்சமுகி என்றும் அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு செல்லும் சாலை இறுதியில் சுமார் 5 கி.மீ மிகவும் குறுகலான மோசமான சாலையாக உள்ளது. ஒரு பெரிய பாறையின் மேல் அமைந்து உள்ள குன்றில் தான் இந்த ஆலயம் உள்ளது.குகை வடிவில் உள்ள இந்த இடத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் 12 ஆண்டு காலம் தவம் இருந்திருக்கிறார்.இந்த இடத்திலும் இதன் சுற்று வட்டாரத்திலும் பல வித வடிவங்களில் பெரிய பாறைகள் நிறைந்திருக்கிறது.Boulders என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அந்த வித பாறைகள். இந்த வடிவங்கள் இயற்கையாக அமைந்தவை.விமான வடிவ பாறை,மெத்தை தலையனை வடிவ பாறை போன்றவைகளும் இங்கு உள்ளது. இங்கு பாறை மேல் உள்ள ஆஞ்சநேயர் சுயம்புவாக வந்தது .ஐந்து தலை மற்றும் பத்து கைகளுடன் அமைந்துள்ளது. ஸ்ரீ ராகவேந்தரின் தவத்தை அடுத்து , திருப்பதி வேங்கடவர்,மகாலக்ஷ்மி,பஞ்சமுகி ப்ரானதேவரு மற்றும் கூர்மாவதாரர் ராகவேந்திர சுவாமிகளுக்கு காட்சி அளித்ததாக வரலாறு.அதற்க்கு பின்பு தான் சுவாமிகள் மந்திராலயம் சென்று ஜீவ சமாதி அடைகிறார்கள்.ஹனுமான்,கருடர்,நரசிம்ஹர்,வராஹர் மற்றும் ஹயக்ரீவர் தான் இந்த ஐந்து முகங்கள்.கிழக்கு நோக்கி இருப்பது அனுமன் முகம்,தெற்கு நோக்கி இருப்பது நரசிம்ஹர்,மேற்கு நோக்கி இருப்பது கருடர்,வடக்கு நோக்கி இருப்பது வராஹர் .உச்சியில் இருப்பது ஹயக்ரீவர்.ஐந்து வகையில் இறை வழிபாடு செய்யலாம். இறைவன் நாமாவளி சொல்வது,இறைவனை ஸ்மரித்து கொண்டே இருப்பது,இறைவனை கீர்த்தனைகள் மூலம் பாடி துதிப்பது,இறைவனிடம் யாசிப்பது கடைசியில் இறைவனிடம் சரணாகதி அடைவது.பஞ்சமுகத்தில் உள்ள ஐந்து முகங்களும் இந்த ஐந்து நிலைகளை தான் குறிக்கிறது.

கருத்துகள் இல்லை: