வியாழன், 11 டிசம்பர், 2008

மந்திராலயம்


கடந்த சில தினங்களில் மந்திராலயம்,பஞ்சமுகி ,நவபிரிந்தாவனம்,ஹம்பி,ஆநேகுட்டி,உடுப்பி மற்றும் கொல்லூர் சென்று வந்தேன்.இந்த பயண விபரங்களை விரிவாக பல பகுதிகளாக இணையதள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றுள்ளேன்.தமிழில் இந்த ஆலய தரிசன வலைப்பதிவினை கடந்த சூலை மாதம் தான் தொடங்கினேன்.அதற்க்கு முன்பு நான் சென்று வந்த பல ஆலயங்களை பற்றியும் எழுத எண்ணி இருந்தேன். ஆனால் அதற்குள்ளாக இந்த பயணம் செல்ல வேண்டி வந்தது.அதனால் முதலில் சமீபத்தில் சென்று வந்த விபரங்களை வலைபதிவில் பகிர்ந்த பின்பு மற்றவை குறித்து எழுதலாம் என்றுள்ளேன்.ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் எம்மிகநூர்.இது துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது.அங்கு தான் ஸ்ரீ குரு ராகவேந்திரா மந்திராலயம் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ராகவேந்திரர் இங்கு ஜீவ சமாதி அடைந்து பிரிந்தாவனத்தில் பிரவேசித்தார்.அவர் இன்றும் தனது யோக சமாதியில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்தும் ராய்ச்சூர் செல்லும் பாதை வழியாகவும் மந்திராலயம் வந்து சேரலாம்.இங்கு ராகவேந்திரர் தவிர வாதீந்திர தீர்த்தருக்கும் பிரிந்தாவனம் உள்ளது.ராகவேந்தரரின் பிரிந்தாவனதிற்க்கு செல்லும் முன் வலது புறம் மஞ்சலம்மா சன்னதி உள்ளது. இங்கு வழிபட்ட பின்பு தான் ராகவேந்தரரின் பிரிந்தாவன தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பிரிந்தாவனத்தின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.பூர்வாச்ரமத்தில் அவரது இயற் பெயர் வேங்கடநாதர் .அவரது குரு சுதீந்திர தீர்த்தர் அவரை பீட பொறுப்பை ஏற்குமாறு பணித்த போது மரியாதையுடன் மறுத்து விடுகிறார்.தனக்கு குடும்பம்,மனைவி,மற்றும் மகன் உள்ளதால் ஏற்க முடியாது என்று கூறி விடுகிறார்.ஆனால் தெய்வ செயல் வேறு விதமாக இருக்கவும் இறுதியில் குடும்பத்தை துறந்து சன்யாசம் மேற்கொள்கிறார்.பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார்.இறந்தவருக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்,தீராத வியாதிகளை குணப்படுத்தி உள்ளார்.சித்தி மசூத் கான் என்ற நவாப் வேண்டும் என்றே பழம் மற்றும் இனிப்புகளுடன் மாமிசத்தையும் மைத்து சுவாமிகளிடம் கொடுத்துள்ளார்.ராகவேந்திரர் தனது சக்தியால் அவற்றை பழங்கள் மற்றும் முந்திரி பருப்புகளாக மாற்றி நவாபை திகைக்க வைத்தார்.உடனே சுவாமிகளிடம் மன்னிப்பு கோரிவிட்டு விளைநிலத்தை மடத்திற்கு தானமாக அளிக்கிறார்.ஆனால் சுவாமிகள் அதை மறுத்து விட்டு மடத்திற்கு மானியம் கோருகிறார்.இன்னொரு அதிசயம் சர் தாமஸ் மன்றோ சம்பந்தப்பட்டது.மானியங்களை திரும்ப பெறும் சட்டம் மூலம் மடத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த மானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.மந்திராலயம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் மசூத் கான் மடத்துக்கு தானமாக கொடுத்த நிலத்தை திரும்ப பெற கூடாது என்று கோரிக்கை எழுப்பினார்கள்.அந்த நேரம் பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த மன்றோ நேரில் சென்று விசாரிக்க எண்ணி மடத்துக்கு சென்றார்.மடத்துக்குள் நுழைந்த உடன் அவர் ஆங்கிலத்தில் யாருடனோ உரையாட ஆரம்பித்தார்.சுற்றி இருந்தவர்களுக்கு அவர் யாருடன் உரையாடினார் என்பது புரியவில்லை.மன்றோ நீங்கள் குறிப்பிடும் மகான் இவர் தானா என்று மட்டும் கேட்டு விட்டு சென்று விடுகிறார். பின்பு அவர் ஆளுநருக்கு மடத்துக்கு சட்டப்படி உரிமை உள்ள நிலம் அது என்று தகவல் அனுப்புகிறார்.அந்த தகவல் ஆளுநருக்கு சென்று அடையும் முன்பே ஆளுநர் இங்கிலாந்துக்கு விடுமுறையில் செல்கிறார்.மன்றோ தாற்காலிக ஆளுநராக பொறுப்பேற்கிறார். ஆளுநராக அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு மடத்துக்கு நிலம் அளிப்பது சம்பந்தப்பட்டது தான். நாடெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கு ராகவேந்திரர் தனது பிரிந்தாவனத்தில் யோக சமாதி நிலையில் அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்

கருத்துகள் இல்லை: