புதன், 30 ஜூலை, 2008

தலக்காடு பஞ்சலிங்க தரிசனம்



காவிரியின் இடது கரையோரம் உள்ள ஒரு கிராமம் தான் தலக்காடு . தெற்கு திசை நோக்கி ஓடும் காவிரி இந்த இடத்தில் நன்றாக வளைந்து கிழக்கு திசை நோக்கி ஓடுகிறது. அந்த கரையில் தான் இந்த கோவில் உள்ளது .தலக்காடு மைசூரில் இருந்து 45 கி .மீ தொலைவிலும் பெங்களுருவில் இருந்து 185 கி . மீ தொலைவிலும் உள்ளது .காற்றினால் உருவான மணல் குன்றுகள் (sand dunes) நிறைந்த இடம் . எங்கு பார்க்கினும் பரந்த மணல் பரப்புகள் .ஒரு காலத்தில் இங்கு 30 க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அவை எல்லாம் மணலுக்குள் புதைந்து விட்டது. 11 ஆம் நூற்றாண்டில் தமிழ் சோழ மன்னர்கள் இங்கு ஆட்சி செய்தார்கள் . 12 ஆம் நூற்றாண்டில் ஹோய்சால அரசர்களும் , அவர்களுக்கு பின் விஜயநகர சாம்ராஜ்யம் மற்றும் மைசூர் அரசர்களின் ஆட்சியின் கீழும் தலக்காடு இருந்ததாக வரலாறு. தலக்காடு குறித்து பல துணை கதைகுளும் உள்ளது . ஆனால் அந்த கதைகளுக்கு சரித்திர சான்றுகள் இல்லை .

இன்று இந்த மணல் பரப்புகளுக்கு மத்தயில் கம்பீரமாக நிற்பது தான் தலக்காடு வைதீஸ்வரன் கோவில் .வைதீஸ்வரன் சந்நிதி போக இங்கு அர்கேஸ்வரர் பாடலேஸ்வரர் ,மரலேஸ்வரர் மற்றும் மல்லிகார்ஜுனர் என்று 4 சிவா லிங்கங்களும் உள்ளது . இந்த 5 லிங்கங்களும் சிவனின் ஐந்து முகங்களை குறிப்பதாக ஐதீகம் .இதில் பாடலேஸ்வரர் காலையில் சிவப்பாகவும் ,மதியம் கருப்பாகவும் மாலையில் வெள்ளையாகவும் தெரிவதாக கூறப்படுகிறது .பஞ்சலிங்க தரிசனம் என்பது 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு திருவிழா . குக யோகமும் விசாக நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் கார்த்திகை மாதத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா கொண்டாடப்படும் . சமீபத்தில் 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது . கர்நாடக மாநிலத்தில் இது ஒரு பெரும் திருவிழா . வேறு நேரங்களிலும் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் . மழைகாலம் இல்லாமலும் , காற்று அதிகம் வீசாத நேரத்திலும் சென்று தரிசித்து வரலாம் . பெரும்பாலான சமயங்களில் இன்றும் இங்குள்ள சில கோவில்கள் மணலுக்குள் புதைந்து போகிறது என்றும் கூறப்படுகிறது .

பஞ்சலிங்க தரிசன முறை ஓன்று வழக்கில் உள்ளதாக கூறப்படுகிறது . கோகர்ணதில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு கோகர்நேஸ்வரர் மற்றும் சந்திகா தேவியை முதலில் தரிசிக்க வேண்டும் .அதற்க்கு பின் வைதீசவறரை தரிசிக்க வேண்டும் .பின்பு காவிரியின் வடக்கு ,கிழக்கு ,தெற்கு மற்றும் மேற்கு கரையில் நீராடிவிட்டு அர்கேஸ்வரர் ,பாடலேஸ்வரர் ,மரலேஸ்வரர் மற்றும் மல்லிகார்ஜுனர் தரிசித்து விட்டு மீண்டும் .வைதீஸ்வறரை தரிசிக்க வேண்டும்.நான்கு லிங்கங்களில் ஒவொன்றையும் தரிசித்து விட்டு மீண்டும் வைதீஸ்வறரை தரிசிக்க வேண்டும் .கடைசியாக தலகாட்டிலுள்ள கீர்த்தி நாராயனார் கோவில் தரிசனம் செய்து முடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது .இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை ஆனந்தும் ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்பது தான் .இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை .

நாங்கள் அப்படி செய்யவில்லை . காவிரி கரையில் கால் நனைத்து விட்டு தலக்காடு கோவில் மட்டும் சென்று வந்தோம் .பார்க்க வேண்டிய இடம் .மிகவும் புராதனமான சிவன் கோவில் .சுற்றிலும் உள்ள மணற்பரப்புகள் பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது .மைசூரில் இருந்து டி .நரசிபுரா ,ஹெம்மிகே வழியாக தலக்காடு சென்றடையலாம் .தலக்காடில் சூரிய அஸ்தமனமும் பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது .மணல் பரப்பு சூழ்ந்த இடமாக இருப்பதால் தலக்காடு கோவில் மாலை வெகு சீக்கிரம் மூடி விடுவார்கள் .


கருத்துகள் இல்லை: