செவ்வாய், 9 ஏப்ரல், 2013

திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

சுந்தரேஸ்வரர் என்ற சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த ஊர் திருமணஞ்சேரி.கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவு.சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடந்த திருமணம். கன்னிகா தானம் செய்து நடத்தி வைத்தவரோ சாட்சாத் மகாவிஷ்ணு. இந்த தெய்வத் திருமணத்திற்குப் பின் சிவனும் - பார்வதியும், விஷ்ணுவும் - லட்சுமியும் நால்வருமாக அங்கேயே வாசம் செய்கிறார்கள்.பூமியில் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி சாபம் பெற்றாள்.பார்வதி இங்கே வந்தபோது, அந்தப் பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணுவும் உடன் வந்தார். சாப விமோசனம் பெற்ற பின் பார்வதி சிவனை மணந்துகொண்டார். அப்போது விஷ்ணுவே பார்வதியை சிவனுக்கு கன்யாதானம் செய்து வைத்தார். திருமணஞ்சேரியில் மணந்துகொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். அம்பிகை கோகிலாம்பாள். மணமாகாதவர்கள் மணவாழ்வு வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு உடனேயே திருமணம் கைகூடுகிறது.அம்மையும், அப்பனும் அருள்புரியும் இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மணமாலை வேண்டி வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு.விபூதியையும், குங்குமத்தையும் அணிந்து வர வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைகூடிவிடும் என்பது ஐதீகம்.இப்படி திருமணம் நடந்த பின், தம்பதியர் சகிதம் மீண்டும் இக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து, ஏற்கனவே இங்கு தந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும்.

சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி. அங்கேதான் திருமணத்திற்கு வந்த தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றாராம். அதனால் எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது.திருக்கல்யாணத்திற்கு இன்றைக்கும் சீர் வரிசைகள் லட்சுமி நாராயணப் பெருமாளின் எதிர்கொள்பாடியிலிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. 

விடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடையவல்லார்க்கு இல்லை அல்லலே.

-திருஞானசம்பந்தர்

கருத்துகள் இல்லை: