வெள்ளி, 9 நவம்பர், 2012

கழுகாசலமூர்த்தி திருக்கோவில் ,கழுகுமலை

சங்கரன்கோவில் -கோவில்பட்டி சாலையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவில் தான்  கழுகுமலை கோவில். கோவில்பட்டியில் இருந்து  சுமார் 20 கி.மீ  தொலைவில் உள்ளது இந்த திருத்தலம். இந்த கோவில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என அறியபடுகிறது. இது ஒரு புகழ் வாய்ந்த பாடல் பெற்ற ஸ்தலம் . அருணகிரிநாதர் இந்த ஆலயம் பற்றி பாடல் இயற்றி உள்ளார்.பிரபல கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்வாமி தீட்சிதரும் கழுகாசல மூர்த்தி குறித்து பாடல் இயற்றி உள்ளார்.காவடி சிந்து புகழ்  அண்ணாமலை ரெட்டியாரும்  கழுகுமலை முருகனை குறித்து பாடல் இயற்றி உள்ளார்.கழுகுமலைக்கு கழுகாசலம் என்று ஒரு பெயரும் உண்டு.தென் பழனி என்றும் கழுகுமலை அறியபடுகிறது.பழனியைப் போல மேற்கு முகமாக முருகன் சன்னிதானம் உள்ளதால்  தென் பழனி  என்று சொல்லபடுகிறது.இது ஒரு குடவரை ( Rock cut ) கோவில்.இந்த  ஊருக்கு இந்த பெயர் வருவதற்கு  இன்னொரு காரணமும் சொல்லபடுகிறது . கழுகு முனிவர்  என்று பெயருடைய சம்பாதி முனிவர் இந்த ஊர் முருகனை வழிபட்டதால் கழுகுமலை என்று  பெயர் வந்தது என்றும் சொல்லபடுகிறது.சம்பாதி முனிவர் ஜடாயுவின் சகோதரர் .ஸ்ரீ ராமர் சொன்னதின் பேரில் சம்பாதி இக்கோவில் தவம் செய்ததாகவும் சொல்லபடுகிறது.அகத்தியர்  பொதிகை மலை செல்லும் முன் இந்த கோவிலில் இளைப்பாறியதாகவும் சொல்லபடுகிறது. இக்கோவிலுக்கு மலையே விமானமாக திகழ்கிறது. குடவரைக்கோவில் என்பதால்  கோவில் பிரகாரம் சுற்றி வர வேண்டுமானால் மலையைச் சுற்றி கிரிவலம் வர வேண்டும். கருவறையும் , அர்த்த மண்டபமும் மலையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சியளிக்கிறார். மற்ற கோவில்களில் உள்ளதை போல இல்லாமல் முருகனின் வாகனமான மயில்  இடது பக்கத்தில் தோற்றம் அளிப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.தை பூசம்,பங்குனி உத்திரம் ,வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடபடுகிறது.மலையின் உச்சியில் பிள்ளையார் கோவிலும் (வெட்டுவான் கோவில் ), கோவிலுக்குச் செல்லும் வழியில் சமணர் சிலைகளும் அய்யனார் கோவிலும்  குகையும்,சுனையும் உள்ளன. இந்த கோவிலில் பல சிறந்த சிற்ப வேலைபாடுகளை காணலாம்.சமண தீர்த்தங்கரர்களின் அருமையான சிற்பங்களையும் இந்த மலையில் காணலாம்.

கருத்துகள் இல்லை: