வியாழன், 25 டிசம்பர், 2008

பேலூர் சென்னகேசவ ஆலயம்





பேலூர் கர்நாடகத்தின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்.இது ஒரு காலத்தில் ஹோய்சால மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது.இங்கு உள்ள சென்னகேசவ ஆலயம் மிகவும் கலை நயம் மிகுந்தது.ஹளபேடு போல இங்கும் அருமையான கலை சிற்பங்களை கண்டு களிக்கலாம்.ஹோய்சால பாணியில் அமைந்த கோவில் இது.ஆனால் முகப்பில் உள்ள ராஜகோபுரம் மட்டும் திராவிட பாணியில் உள்ளது.இதற்க்கு காரணம் இந்த கோபுரம் மட்டும் பிற்காலத்திலே விஜயநகர மன்னர்களால் எழுப்பப்பட்டது.சென்னகேசவ என்றால் கன்னடத்தில் அழகான விஷ்ணு என்று பொருள்.ஹோய்சால மன்னன் விஷ்ணுவர்த்தனால் எழுப்பப்பட்ட ஆலயம்.தலக்காட்டில் சோழ மன்னர்களை வென்ற பிறகு அந்த வெற்றியை கொண்டாட எழுப்பப்பட்ட ஆலயம் தான் இது.இது ஒரு 10 ஆம் நூற்றாண்டு ஆலயம்.இந்த ஆலயம் கட்டிமுடிக்க சுமார் 108 ஆண்டுகள் ஆனது என்று சொல்லப்படுகிறது.விஷ்னுவர்த்தனரின் பேரன் காலத்தில் தான் ஆலயம் முழுமை பெற்றது.ஹளபேடு போல இங்கும் சைவ வைணவ சிற்பங்களின் அழகை கண்டு களிக்கலாம்.மிகவும் நுட்பமான கலை வேலைப்பாடுகள்.ஹளபேடு ஆலயம் எழுப்ப 190 ஆண்டுகள் ஆயின என்று சொல்லப்படுகிறது.இருந்தும் அந்த ஆலயம் முழுமை பெறவில்லை.ஆனால் பேலூர் ஆலயம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டது.சென்னகேசவர் தான் இங்கு மூலவர்.கம்பீரமாக நிற்கும் மூலவர் கண்ணை கவருகிறது.சௌமிய தேவி தாயார் சன்னதி உள்ளது.ஆண்டாள் சன்னதியும் உள்ளது.கோவில் உள்ளேயே புஷ்கரனியும் உள்ளது.பல இடங்களில் லக்ஷ்மி நரஸிம்ஹர் சிற்பங்களை அற்புதமாக பல அளவுகளில் கண்டு ரசிக்கலாம்.நாங்கள் சென்றிருந்த சமயம் பெருமாளுக்கு அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது.அந்த நேரத்திலே பக்தர்களுக்கு மிகவும் நன்றாக தெரிவதற்கு ஏதுவாக பெருமாள் மேல light focus செய்யப்படுகிறது.பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது. ரதம்,நாட்டிய நிலைகள் இவைகளெல்லாம் கூட மிகவும் அருமையாக சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.ஹசனில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது பேலூர்.பேலூர் செல்லும் பாதையில் உள்ளது ஹளபேடு.

கருத்துகள் இல்லை: