திங்கள், 15 டிசம்பர், 2008

விருபாக்ஷ சுவாமி திருகோவில்

ஹம்பி மற்றும் விஜயநகர சாம்ராஜ்ய புராதன கலாசார சின்னங்களை பற்றி தனியாகவும் விரிவாகவும் எழுத உள்ளேன்.அனால் இந்த பதிவில் விருபாக்ஷ சுவாமி ஆலயத்தை பற்றி மட்டுமே கூறியுள்ளேன்.அதற்க்கு ஒரு காரணமும் உண்டு.பரந்து விரிந்து கிடக்கும் விஜயநகர சாம்ராஜ்ய அழிவுகளில் அழிந்த நிலையில், எந்த வித தெய்வ வழிபாடும் இல்லாமல்,வெறும் சுற்றுலா ஸ்தலமாக பல ஆலயங்கள் இருக்கும் இடத்தில் இன்றும் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக மக்கள் தினசரி வழிபடும் ஆலயமாக திகழ்வது இந்த விருபாக்ஷ சுவாமி ஆலயம் மட்டுமே.ஹம்பியில் துங்கபத்ரா நதி கரையில் உள்ளது இந்த சிவாலயம்.விருபாக்ஷச்வாமி என்பது சுவாமியின் திருநாமம்.அம்மனின் திருநாமம் பம்பாதேவி. இங்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது.துங்கபத்ரா நதிக்கு இன்னொரு பெயர் பம்பா நதி. அதனாலயே இறைவனுக்கு இங்கு பம்பாபதி என்றும் ஒரு பெயர் உண்டு.ஆலயத்திற்கு நடுவிலும் பூமிக்கு அடியில் துங்கபத்ராவின் ஒரு சிறு பகுதி ஓடுகிறதாக சொல்லப்படுகிறது.விஜயநகர அரசர்களின் குலதெய்வம் விருபாக்ஷச்வாமி .விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு ஆரம்பத்தில் விருபாக்ஷா நகர சாம்ராஜ்யம் என்று ஒரு பெயர் இருந்ததாக கூற படுகிறது.அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த ஆலயம்.விஜய நகர சாம்ராஜ்ய சிற்ப கலையின் நுட்பத்தை இங்கு கண்டு களிக்கலாம். தத்ரூபமாக கல்லிலேயே பெரிய கொப்பரை ஓன்று உள்ளது.அதே போல் சுவாமி சன்னதிக்கு முன் கல்லிலேயே பெரிய விபூதி மறை செதுக்கி உள்ளார்கள்.மிகவும் அற்புதமாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரு அபூர்வ மூன்று தலை நந்தி உள்ளது.மூல ஸ்தானத்திற்கு முன் உள்ள நடு மண்டபம் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இரு அம்மன் சன்னதிகள் உள்ளது.பம்பா தேவி மற்றும் புவநேஸ்வரிதேவி .சிவன் சன்னதிக்கு பின் புறம் உள்ள படிக்கட்டுகளில் ஏறி வலது புறம் பார்த்தால் ஒரு சிறு துவாரம் வழியாக கிழக்கு புறம் உள்ள பிரதான கோபுரம் தெரியும்.அதற்க்கு நேர் எதிர் புறம் திரும்பி சுவற்றில் பார்த்தால் கோவில் கோபுர நிழல் தலை கீழாக தெரியும்.இது ஒரு விந்தையான விடயம்.சுற்றிலும் பல சமகால ஆலயங்கள் முற்றிலும் அழிந்த நிலையில் இருக்க இந்த சிவாலயம் மட்டும் வழிபாட்டு ஸ்தலமாக இன்றும் திகழ்வதும் ஒரு ஆச்சர்யமே.

கருத்துகள் இல்லை: