செவ்வாய், 17 ஏப்ரல், 2018

ஓம்காலேஸ்வர் கோவில், சிவபுரி (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)

ஓம்காலேஸ்வர் கோவில்


இந்த ஆலயம் மிகவும் புராதனமான சிவாலயம். மத்யப்ரதேச மாநிலத்தில் உஜ்ஜயின் என்ற ஊரில் இருந்து சுமார் 140 கி. மீ தொலைவில் காண்ட்வா ரோடில் உள்ள சிவபுரி என்ற தீவில் உள்ளது. நர்மதா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. நதியை படகில் கடந்து தான் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். படகில் சென்று வர ஒரு நபருக்கு 20 ரூபாய் வசூல் செய்கிறார்கள். படகில் ஆலயம் செல்லும் பொழுதே சற்று தொலைவில் நர்மதா அணை தெரியும். அக்கரைக்கு சென்ற பிறகு படிகள் ஏறி மேலே ஆலயத்துக்கு செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியிலயே பஞ்சமுக கணபதிக்கும் பார்வதி தேவிக்கும் தனி சன்னதிகள் இருப்பதை பார்க்கலாம். இங்கும் வட இந்திய கோவில்களில் எல்லாம் உள்ளது  போல சிவ பெருமானுக்கு பக்த ஜனங்கள் நீராபிஷேகம் செய்யலாம். சிவலிங்கம் சற்று தாழ்வாக இருப்பதால்  நாம் கொண்டு போகும் நீரை அதற்கான துவாரம் வழியாக ஊற்றினால் அந்த நீர் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது போல விழுகிறது. இந்த சிவாலயத்துக்கு கீழே ஒரு குகை உள்ளது .அதற்கு பெயர் ஆதி சங்கரர் குகை.ஆதி சங்கரர் அவரது குருவான கோவிந்தபாதரை இந்த குகையில் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. ஓம்காலேஸ்வர் கோவில் அமைந்திருக்கும் மலை ஓம் வடிவத்தில் உள்ளதால் இந்த கோவிலுக்கு ஓம்காலேஸ்வர் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

மாமலேஸ்வர் கோவில்

படகுத்துறைக்கு செல்லும் வழியில் இன்னொரு மிக புராதனமான சிவன் கோவில் உள்ளது. சிலர் இது தான் ஜ்யோதிர்லிங்க கோவில் என்றும் சொல்கிறார்கள். இங்கு ஈசனுக்கு பெயர் மாமலேஸ்வர் அல்லது அம்ரேஸ்வர். முதலாம் நூற்றாண்டு கோவில் என சொல்கிறார்கள். கோவிலின் பழமை பார்த்தாலே தெரியும். இங்குள்ள சிவலிங்கம் ஓம்காலேஸ்வரரை விட சற்று பெரியது. இங்கும் விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. சிதிலமடைந்திருந்தாலும் பழங்கால சிற்ப கலைகள் கண்டு ரசிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக