வெள்ளி, 26 அக்டோபர், 2018

கால பைரவர் கோவில், உஜ்ஜயின்



உஜ்ஜயின், மதுரையை போன்றே இந்தியாவின் புராதான நகரங்களில் ஒன்று. மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் மற்றும் சுதாமர் அவர்களின் குருவான சண்டபாணியிடம் இங்குள்ள சண்டபாணி ஆசிரமத்தில் தான் குருகுல கல்வி பயின்றார்கள் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கால பைரவர் கோவிலும் ஒன்று.

பொதுவாக சைவ வழிப்பாட்டில் அஷ்ட பைரவர்களை வழிபடுவது வழக்கம். அஷ்ட பைரவர்களுக்கும் தலைவராக கருத்தப்படுபவர் தான் கால பைரவர். கால பைரவர் சிவ பெருமானின் ஒரு அவதாரமாகவே கருதப்படுவார். தமிழகத்தில் அஷ்ட பைரவர்களுக்கும் கோவில்கள் உண்டு. அஷ்ட பைரவர்களும் எட்டு திசையையும் காப்பதாக ஐதீகம். பைரவர் சிவனின் ருத்ரமூர்த்தி. குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய பைரவ கோவிலுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்வது தமிழ் நாட்டில் வழக்கம். சீர்காழியிலுள்ள சட்டநாதர் கோவிலில் உள்ளது 1. அசிதாங்க பைரவர் .தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவர் கிழக்கு திசையை காக்கும் கடவுள். நன்னிலம் அருகிலுள்ள திருமருகையிலுள்ள ரத்னகிரீஸ்வரர் ஆலயத்திலுள்ளது 2. .ருரு பைரவர் - .தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -கார்த்திகை, உத்திராடம், உத்திரம்- தென் கிழக்கு திசையை காக்கும் கடவுள். வைதீஸ்வரன் கோவிலிலுள்ளது 3. சந்த பைரவர். திசை -தெற்கு, தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம். திருநாரையூரிலுள்ள திருவிசநல்லூர் கோவிலில் உள்ளது 4. க்ரோத பைரவர் - திசை தென் மேற்கு, தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள்- ரோகிணி, அஸ்தம், திருவோணம், 5. உன்மத்த பைரவர் - திருவீழிமலை திசை மேற்கு தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள்- தெரியவில்லை. 6.கபால பைரவர் , தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்பந்துருத்தியிலுள்ள திருவினன்குடி ஆலயம், திசை வட மேற்கு, தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -பரணி, பூரம், பூராடம். 7. பீஷண பைரவர், பிரண்மலை, திசை -வடக்கு- தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -திருவாதிரை, ஸ்வாதி, சதயம், அஸ்வினி, மகம், மூலம் 8. சம்ஹார பைரவர்- திருவெண்காடு மற்றும் வைரவன்பட்டி, திசை வடகிழக்கு- தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி.

அகோரிகள் பைரவரையே அதிகம் வழிபடுவார்கள். உஜ்ஜயினில் அகோரிகள் அதிகம் உள்ளனர். இங்கு பைரவருக்கு பக்தார்களால் மது வேண்டுதலாக வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வெளியே விதவிதமாக மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்கிறார்கள். சனிகிழமைகளில் வரும் பௌர்ணமியன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். காளிதாசர் இங்கு பைரவரை வழிப்பட்டதாக சொல்கிறார்கள். இங்கு பக்தர்களால் அளிக்கப்படும் மதுவை பூசாரி பைரவர் விக்கிரகத்தின் உதட்டருகில் உள்ள ஒரு சிறு பிளவில் சற்று சரித்து ஊத்துகிறார். பைரவருக்கு பின்பு ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் மது மாயமாக மறைந்து விடுகிறது. பாட்டிலில் மீதமுள்ள மதுவை பகத்ருக்கே பிரசாதமாக திரும்ப கொடுத்து விடுவார்கள்.

உஜ்ஜயின் மஹா காளி கோவில்


எனது பதிவுகளை வாசிக்கும் அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். எனது உடல்நிலை காரணமாக வெகு நாள் இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும் வலைப்பதிவுக்கு திரும்பியுள்ளேன். கடந்த நான்காம் மாதம் உஜ்ஜயின் பதிவுக்கு பிறகு விட்டு போன பதிவுகளை இப்போது பதிவிடுகிறேன்.

மகாகாலேஸ்வர் தரிசனம் முடித்து விட்டு நாங்கள் உஜ்ஜயின் மஹா களி கோவிலுக்கு சென்றோம். வட இந்தியர்கள் காளி என்றும் ஹர சித்தி மாதா என்றும் அழைக்கிறார்கள். நமது நாட்டிலுள்ள முக்கியமான சக்தி பீடங்களில் உஜ்ஜயின் மாகாளி கோவிலும் ஒன்று. மன்னர் விக்ரமாதித்யர் இந்த காளி தேவியை வழிப்பட்டதாக கூறுகிறார்க்ள். விக்ரமாதித்யர் 11 முறை தனது தலையை வெட்டி காளி மாதாவுக்கு காணிக்கையாக செலுத்தினார் என்றும் ஒவ்வொரு முறையும் காளி மாதா அவரை உயிர்ப்பித்தார் என்பதும் வரலாறாக இங்கு கூறப்படுகிறது. கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு அரங்கில் ஒரு பெரிய விக்ரமாதித்யர் படம் வைத்துள்ள்ர்கள்.

இன்னொரு முக்கியமான ஸ்தல வரலாறுபடி ஒரு காலத்தில் அந்தகாசுரன் என்ற ஒரு அசுரன் உஜ்ஜயினை ஆண்டு கொண்டிருந்தார். அவரருக்கிருந்த ஒரு அசுர சக்தி மூலம் அவரது உடலில் இருந்து சிந்தும் ஒவ்வொரு இரத்த துளியும் பூமியில் விழுந்த உடனே அதிலிருந்து இன்னொரு அந்தகாசுரன் தோன்றினான். இவ்வாறாக அவன் அழிவில்லாதவனக இருந்தான். கடைசியில் சிவ பெருமான் திருசூலம் மூலம் அவனின் உடலை கிழித்து அசுரனை கொல்கிறார். அந்த நேரம் கீழே ஒரு துளி இரத்தம் கூட விழாமல் மாகாளி அனைத்து இரத்தத்தையும் குடித்து உஜ்ஜயின் மக்களை அந்த அசுரனிடமிருந்து காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது. மகாலக்ஷ்மி மற்றும் மகாசரஸ்வதி சிலைகளுக்கு நடுவில் மகா காளி சிலை உள்ளது. காளி சிலை சிந்தூர நிறத்தில் இங்கு காணப்படும். இங்கு இரண்டு உயரமான தீபம் ஏற்றும் தூண்கள் உள்ளது. நவராத்ரி விழாவின் போது இந்த தூண்களில் விளக்கு ஏற்றுவார்கள் என்று சொன்னார்கள்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

மகாகாலேஸ்வர் கோவில், உஜ்ஜயின் (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)

மகாகாலேஸ்வர்



மத்யபிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜையின் என்ற ஊரில் உள்ளது இந்த சிவாலயம். மிகவும் பிரசித்தமான ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று இது. கும்பமேளா நடக்கும் ஊர்களில் உஜஜயினியும் ஒன்று. கோவில் வளாகம் மிக பெரியது. மூலவரை தரிசனம் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. தரைத் தளத்திலிருந்து நில மட்டத்துக்கு கீழே அமைந்திருக்கிறது மூலஸ்தானம். மூலஸ்தானம் செல்லும் வழியில் ஒரு குளக்கரையும் உள்ளது. சற்று பிரம்மாண்டமான அமைப்புடன் கூடிய கோவில் இது. சற்று பெரிய நந்தியும் சிவபெருமானையும் தள்ளி இருந்து தான் தரிசனம் செய்ய முடிந்தது. டிக்கெட் வாங்கி உள்ளே செல்ல அனுமதி இருந்தாலும் நாங்கள் சென்ற நேரம் அந்த தரிசன நேரம் முடிந்ததென சொன்னார்கள். உள்ளே பிள்ளையார், பார்வதி மற்றும் கார்த்திக் (முருகன்) சன்னதிகள் உள்ளது என சொன்னார்கள். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு சிவ பெருமான்  தெற்கு நோக்கி அமைந்திருப்பது. கோவிலின் மூன்றாவது நிலையில் நாகசந்ந்திரேஸ்வர் அமைய பெற்றுள்ளது. நாகபஞ்சமி அன்று மட்டுமே அங்கு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும். இங்கு மகாசிவராத்ரி மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

ஓம்காலேஸ்வர் கோவில், சிவபுரி (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)

ஓம்காலேஸ்வர் கோவில்


இந்த ஆலயம் மிகவும் புராதனமான சிவாலயம். மத்யப்ரதேச மாநிலத்தில் உஜ்ஜயின் என்ற ஊரில் இருந்து சுமார் 140 கி. மீ தொலைவில் காண்ட்வா ரோடில் உள்ள சிவபுரி என்ற தீவில் உள்ளது. நர்மதா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. நதியை படகில் கடந்து தான் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். படகில் சென்று வர ஒரு நபருக்கு 20 ரூபாய் வசூல் செய்கிறார்கள். படகில் ஆலயம் செல்லும் பொழுதே சற்று தொலைவில் நர்மதா அணை தெரியும். அக்கரைக்கு சென்ற பிறகு படிகள் ஏறி மேலே ஆலயத்துக்கு செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியிலயே பஞ்சமுக கணபதிக்கும் பார்வதி தேவிக்கும் தனி சன்னதிகள் இருப்பதை பார்க்கலாம். இங்கும் வட இந்திய கோவில்களில் எல்லாம் உள்ளது  போல சிவ பெருமானுக்கு பக்த ஜனங்கள் நீராபிஷேகம் செய்யலாம். சிவலிங்கம் சற்று தாழ்வாக இருப்பதால்  நாம் கொண்டு போகும் நீரை அதற்கான துவாரம் வழியாக ஊற்றினால் அந்த நீர் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது போல விழுகிறது. இந்த சிவாலயத்துக்கு கீழே ஒரு குகை உள்ளது .அதற்கு பெயர் ஆதி சங்கரர் குகை.ஆதி சங்கரர் அவரது குருவான கோவிந்தபாதரை இந்த குகையில் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. ஓம்காலேஸ்வர் கோவில் அமைந்திருக்கும் மலை ஓம் வடிவத்தில் உள்ளதால் இந்த கோவிலுக்கு ஓம்காலேஸ்வர் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

மாமலேஸ்வர் கோவில்

படகுத்துறைக்கு செல்லும் வழியில் இன்னொரு மிக புராதனமான சிவன் கோவில் உள்ளது. சிலர் இது தான் ஜ்யோதிர்லிங்க கோவில் என்றும் சொல்கிறார்கள். இங்கு ஈசனுக்கு பெயர் மாமலேஸ்வர் அல்லது அம்ரேஸ்வர். முதலாம் நூற்றாண்டு கோவில் என சொல்கிறார்கள். கோவிலின் பழமை பார்த்தாலே தெரியும். இங்குள்ள சிவலிங்கம் ஓம்காலேஸ்வரரை விட சற்று பெரியது. இங்கும் விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. சிதிலமடைந்திருந்தாலும் பழங்கால சிற்ப கலைகள் கண்டு ரசிக்கலாம்.

வியாழன், 1 மார்ச், 2018

சோமாநாத் கோவில், சோமநாத் (12 ஜ்யோதிர்லங்களில் ஒன்று)


குஜராத் மாநிலத்தின் மேற்கு கடற்கரையோரத்தில் உள்ள சோம்நாத் என்ற ஊரில் உள்ளது இந்த புகழ்பெற்ற சிவாலயம். இந்த கோவில் 12 ஜ்யோதிர்லிங்க கோவில்களில் முதலாவது. பல்வேறு முஸ்லீம் மன்னர்களாலும் போர்த்துகீஸ் ஆட்சியிலும் பல முறை படையெடுப்பின் போது முற்றிலுமாக அழிகிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஒரு சரித்திர புகழ் வாய்ந்த சிவஸ்தலம் இது.  தற்போதுள்ள கோவில் 1951 ஆம் ஆண்டு சாளூக்கிய கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்டது. இங்கு மூலவர் நாமம் சோமேஸ்வர் அல்லது சோம்நாத். கோவிலின் காலை மற்றும் மாலை ஆரத்தி தரிசனம் பார்க்க வேண்டிய ஒன்று.

முதன் முதலாக இந்த கோவில் எப்போது கட்டபட்டது என்பதற்கு சரியான வாலாற்று சான்றுகள் இல்லை. ஆனால் இரண்டாம் முறை 6 ஆம் நோற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. பின்பு 7 ஆம் மற்றும் 8 ஆம் நூற்றாண்டில் படையெடுக்கப்பட்டு மீண்டும் கட்டியெழ்ழுப்பப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் முகமது கஜினி படையெடுத்து ஜ்யோதிர்லிங்கத்தை எடுத்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. தவிர கோவிலை சேர்ந்த பெரும் செல்வங்களையும் கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது. பின்பு 12 ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜி விலைமதிப்பற்ற கோவில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான். பின்பு 13 ஆம் நூற்றாண்டில் இரு முறை கோவில் மீது படையெடுத்தார்கள். அதன் பின்பு 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் பல இந்து ஆலயங்கள் மற்றும் மசூதிகளை அழித்தார்கள். அதில் சோமாநாத் ஆலயமும் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப் சோம்நாத் ஆலயத்தை முற்றிலுமாக அழிக்க உத்தரவிட்டார். 17ஆம் நூற்றாண்டில் மாறாத்திய மன்னர் லாகூர் சென்று கோவிலிலிருந்து திருடி சென்ற 3 வெள்ளி கதவுகளை திரும்ப கொண்டு வந்தார். ஆனால் கோவில் பூசாரிகள் மீண்டும் அந்த கதவுகளை கோவிலில் நிறுவ மறுத்ததினால் அந்த கதவுகள் உஜ்ஜைனிலுள்ள மகா காலேஸ்வர் கோவிலிலும்(மற்றொரு ஜ்யோதிர்லைங்க கோவில்) கோபால் கோவிலில் வைத்துள்ளதை இன்றும் பார்க்கலாம். மூன்ஸ்டோன் என்ற பிரபல ஆங்கில நாவலில் சொல்லப்படும் வைரம் சோம்நாத் கோவிலிலிருந்து திருடப்பட்டது தான். சோமாநாத், ஜூனாகத் என்ற சம்ஸ்தானத்தை சேர்ந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பொழுது ஜூனாகத் மன்னர் அவரது சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைத்தார். அதை ஏற்றுக்கொள்ளாத வல்லபாய் பட்டேல் இந்திய ராணுவத்தை அனுப்பி ஜூனாகத் ஐ கைபற்றினார். கைப்பற்றியது மட்டுமில்லாமல் கோவிலை புனருத்தாரணம் செய்ய உத்தரவிட்டார். அங்கிருந்த மசூதியை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு கோவிலை மீண்டும் கட்டியெழுப்பினார். இன்று நாம் காணும் சோம்நாத் ஆலயம் 1951 ஆண் ஆண்டு கட்டியெழுப்பியது தான். இந்த வரலாறு முழுதும் கோவிலில் மிக அழகாக  ஒலி ஒளி காட்சியாக காண்பிக்கிறார்கள். தினமும் இரவு ஆரத்தி முடிந்தவுடன் இரு காட்சிகளாக அரை மணி நேரம் இந்த ஒலி ஒலி காட்சி நடைபெறுகிறது. இதற்கு தனி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கடற்கரையோரம் இந்த கோவில் உள்ளது. வெளிப்புறத்தில் இருந்து கடல் நோக்கி அமர்ந்து இயற்கையை ரசிக்கவும் பெஞ்சுகள் போட்டுள்ளார்கள்.


பாணஸ்தம்பம்


இன்னொரு சுவாரசியமான தகவல் சோம்நாத் கடற்கரையிலிருந்து அண்டார்டிக்கா வரையுள்ள நேர்கோடில் உள்ள ஒரே நிலப்பகுதியில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள அம்பு தூண்(Arrow Pillar) அமைந்திருக்கும் இடம் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையிலான நிலப்பகுதியிலுள்ள புவி நெடுங்கோடின் முதல் புள்ளியாகும். இத்தகவலை பாணஸ்தம்பம்  என்றழைக்கப்படும் அந்த தூணில் வடமொழியில் எழுதி வைத்துள்ளார்கள். இந்த கோவிலில் முன்பு இடிக்கப்பட்ட பார்வதி கோவில் மட்டும் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் அதே இடத்தில் வெறும் அடித்தளத்துடன் அப்படியே விட்டு வைத்துள்ளார்கள்.ஏனென்று தெரியவில்லை. 

பழைய சோம்நாதர் ஆலயம்


கோவிலுக்கு வெளிப்புறம் பழைய சோமநாதர் ஆலயம் என்றொரு ஆலயம் உள்ளது. அதுவும் பார்க்க வேண்டிய ஒன்று.  மராத்தா ராணி அகல்யாபாயி ஹோல்கர் என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த கோவில். அடிக்கடி நடக்கும் படையெடுப்பினால் அழிந்து போகும் சோம்நாத் ஆலயம் குறித்து ராணி அகல்யா மிகவும் வருந்தினார், அவரது கனவில் இங்குள்ள சுயம்புலிங்கம் இருக்கும் இடம் தெரிந்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இங்கு சுயம்பலிங்கம் இருப்பதை கண்டு கோவில் கட்டியதாகவும் கூறப்படுகிறது. வேறு சிலர், படையெடுப்பை தவிர்ப்பதற்காக அசல் சோமேஸ்வர் லிங்கத்தை இங்கு இந்துக்கள் புதைத்து வைத்ததாக கூறுகிறார்கள். இங்குள்ளது தான் அசல் சிவலிங்கம் என அவர்கள் கூறுகிறார்கள். இங்கு பக்தர்கள் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கோவிலை இங்குள்ள மக்கள் அகல்யாபாய் ஹோல்கர் கோவில் என்றும் அழைக்கிறார்கள். 



செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

துவாரகேஷ் கோவில், துவாரகா & நாகேஸ்வரர் கோவில், துவாரகா (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)

துவாரகேஷ் கோவில்




குஜராத் மாநிலத்தில் துவாரகா என்ற ஊரில் உள்ளது இந்த கிருஷ்ணன் கோவில். இந்த மாவட்டத்துக்கு பெயரே தேவபூமி துவாரகா என்பது தான்.  108 திவ்ய தேச கோவில்களில் துவரகீஸ்வர் கோவிலும் ஒன்று. மிகவும் பழமையான கோவில். கோமதி நதி, அரபி கடலுடன் இணையும் முகத்துவாரத்தில்  அமைந்துள்ளது இந்த கோவில். 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் தான் கிருஷ்ணனின் அரண்மனை இருதது என நம்பப்படுகிறது. ஆதி சங்கரர் இந்தியாவில் அமைத்த நான்கு சங்கர மடங்களில் முதல் மடம் துவாரகையில் தான் 9 ஆம் நூற்றாண்டில் நிறுவினார். துவரகீஷ்வர் கோவிலுக்கு முன்பாகவே கோவிலை ஒட்டியே சங்கர மடம் உள்ளது. துவாரகா ஒரு துறைமுக நகரமும் கூட. பண்டைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு ஆழிபேரலையால் துவாரகா நகரத்தின் பெரும்பகுதி நீரில் மூழ்கியதாக நமபப்படுகிறது. கோவிலுக்கு மேல் பறக்கும் கொடிக்கம்பத்தில் சூரியன் மற்றும் சந்திரன் உருவங்கள் காணலாம். இங்கு கிருஷ்ண ஜென்மாஷ்டமி மிக சிறப்பாக கொண்டாடப்ப்டுகிறது. 



                              துவாரகீஷ்வர் 



கோவிலில் கிருஷ்ணர், பலராமர், ருக்மணி, பிரதியும்னன், தேவகி, புருஷோத்தமர், குசேலர் போன்றவர்களுக்கு தனி சன்னதிகள் உண்டு. இந்த கோவில் கிருஷ்ணனின் பேரன் வஜ்ரனாப் என்பவரால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. நான்கு முறை ஆழிபேரலையால் அழிக்கபட்டு ஐந்தாவது முறை மீண்டும் கட்டப்பட்டது தான் தற்போது இருக்கும் கிருஷ்ணர் கோவில். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்நகரத்தின் பழமைக்கு சான்று கூறும்படி பல்வேறு செப்பேடுகளை கண்டெடுத்துள்ளார்கள். இப்பொழுது இருக்கும் துவாரகா நகர குடியிருப்பு ஏழு முறை அழிந்து எட்டாவது முறையாக கட்டமைக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. துவாரகாவிலிருந்து 14 கி.மீ தொலைவில் கோபி என்று ஒரு ஊர் உள்ளது . இங்கு தான் கிருஷ்ணர் கோபிகைகளுடன் ராச லீலைகள் செய்தார் என சொல்லப்படுகிறது. இது ஒரு ஏரிக்கரையில் உள்ளது .ஆனால் தற்பொழுது ஏரியில் நீர் இல்லை. இங்கும் 5000 ஆண்டு பழமையான ஒரு கிரூஷ்ணர் கோவில் உள்ளது.  ஒரு பழமையான வீடு போல உள்ளது இந்த சிறிய கோவில். துவாரகா வில் இருந்து 2 கி மீ தொலைவில் ருக்மணிக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது.  

பேட் துவாரகா


கேஷ்வராஜ்


பேட் துவாரகா என்பது, துவாரகாவின் மேற்கு கடல் எல்லையான  ஓகா(Okha) இல் உள்ள ஒரு கடலோர தீவு, தற்போது கச் வளைகுடா என அறியப்படும் பகுதியின் முகத்துவாரம் தான் இந்த தீவு. 3 கி. மீ சுற்றளவுள்ள இந்த தீவில் மக்கள் வசிக்கிறார்கள். இது துவரகா நகரத்தில் இருந்து சுமார் 19 கி. மீ தொலைவில் உள்ளது. பெரும்பாலும் கடலோர காவல்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த பகுதி. இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இந்த பேட் துவாரகா பகுதியும் கிருஷ்ணர் காலத்தில் துவாரகாவின் பகுதியாக இருந்துள்ளது. தொன்மையான துவாரகா நகரம் எந்த அளவுக்கு பெரிய நகரமாக இருந்தது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. சுனாமி பேரலையில் சிதறுண்டு தனித்து தீவு போல காட்சியளிக்கும், மக்கள் வசிக்கும் இந்த பகுதிக்கு தான் பேட் துவாரகா எனறு பெயர். இந்த பகுதிக்கு மோட்டார் படகில் அழைத்து செல்கிறார்கள். அழைத்து செல்லவும் திரும்ப கொண்டு விடவும் நபருக்கு 10 ரூபாய் என வசூல் செய்கிறார்கள். மகாபாரதத்திலும் ஸ்கந்தபுராணத்திலும் சொல்லப்படும் துவாரகா ,தற்போதைய பேட் துவாரகாவும் இணைந்த ஒரு பெரும் நகரம். கிருஷ்ணரின் தலைநகரம். தொல்பொருள் நிபுணர்கள் சிந்து சமவெளி காலத்தை சேர்ந்த ஒரு நகரம் இந்த பகுதியில் கடலுக்கடியில் புதையுண்டு கிடக்கிறது என சொல்கிறார்கள். இந்த தீவில் கேஷவராஜ் கோவில் என்ற ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு மீனவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். மீன்பிடி தொழில் தான் அவர்களது வாழ்வாதாரம். பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அருகில் உள்ளதால் குஜராத் மீன்வர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் பொழுது பாகிஸ்தான் கடற்படை அவர்களை அடிக்கடி கைது செய்கிறார்கள்.


நாகேஸ்வரர் கோவில், துவாரகா (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)



இந்த கோவிலும் துவாரகாவில் உள்ளது. 12 ஜ்யோதிர்லிங்கங்களில் இந்த ஆலயமும் உள்ளது என கூறப்படுகிறது. இந்த ஆலயம் துவராகாவில் இருந்து சுமார் 16 கி மீட்டர் தொலைவில் உள்ளது .இது புராதன கோவில் என சொன்னாலும் கோவிலை பார்த்தால் ஒரு நவீன் கோவில் போல தெரிகிறது. இந்த கோவில் குறித்து ஒரு சர்ச்சையும் உள்ளது. உண்மையான நாகேஸ்வர் கோவில் என்ப்து உத்தராகண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற ஊரில் உள்ளது தான் 12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேஸ்வர் ஆலயம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.  புராணாத்தில் தூராகவன என்று குறிப்பிட்டதை வைத்து இந்த கோவிலை தவறாக நாகேஸ்வர் கோவில் என சொல்கிறார்கள் என்பது சிலரது வாதம். ஆனால் இந்த இடத்தில் எந்த வனமும் இருந்ததாக தெரியவில்லை. 

செவ்வாய், 16 ஜனவரி, 2018

பீமாஷங்கர் ஆலயம் (12 ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று)



2017 நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நாங்கள் சென்று வந்த பீமஷங்கர் (மகாராஷ்ட்ரா), த்வாராகேஷ்வர்,நாகேஷ்வர், சோமநாதர் ஆலயம் (குஜ்ராத்),உஜ்ஜைன் மகாகாலேஷ்வர், மகா காலிகா மா, கால பைரவர் மற்றும் ஓம்காரேஷ்வர், மகாகாலேஷ்வர்(மத்திய பிரதேசம்) கோவில்களை பற்றி இனி வரும் பதிவுகளில் எழுத உள்ளேன்.

பீமாஷங்கர் ஆலயம் அடர்ந்த வனபகுதியில் புனேயிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது. நாங்கள் புனேயிலிருந்து வாடகை காரில் இந்த கோவிலுக்கு சென்று வந்தோம். இது 12 ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று. மேற்கு மலை தொடர்ச்சியில் உள்ள சாயாத்ரி மலைகள் என்று இதற்கு பெயர். இங்கிருந்து தான் பீமா நதி உற்பத்தியாகிறது.

ஸ்தலபுராணம்: இங்கு பீமா என்று ஒரு அசுரன் வாழந்ததாகவும் (கும்பகர்ணனின் மகன்) வாழ்ந்ததாகவும், அவன் விஷ்ணுவை பழிவாங்குவதற்காக தவமிருந்து பிரம்மனிடம் வரம் பெற்று மூவுலகத்தில் உள்ள அனைத்து தேவர்களையும் தனது செயல்களால் மனவருத்தம் அடைய செய்கிறான். இவனது தீய செய்லகளிலிருந்து தங்களை காப்பாற்றிகொள்ள பிரமன் தலமையில் அனைத்து தேவர்களும் சிவ பெருமானை வேண்டுகிறார்கள். கமரூபேஷ்வர் என்ற சிவனடியாரை பீமா துன்புறுத்தி சிவனை வணங்காமல் தன்னை வணங்க வாற்புறுத்துகிறார். சிவனைடியார் அவ்வாறு செய்ய மறுக்கிறார். கோபமடைந்த பீமா உடனே அவர் பூஜை செய்யும் சிவலிங்கத்தை அழிக்க வாளை எடுக்கிறான். கோபமுற்ற சிவபெருமான் அங்கு பிரத்யக்ஷ்மாயி பீமா என்ற அசுரனை பஸ்மாமாக்கிறார். நாரதர் மற்றும் மற்ற தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவ பெருமான் அங்கயே தங்கி அருள் புரிவதாக ஸ்தலபுராணம். பீமன் என்ற அரக்கனை அழித்ததினால் இங்கு சிவவபெருமானுக்கு பெயர் பீமாஷங்கர். பீமனுடன் நடத்திய போரின் போது சிவபெருமானின் உடலிலிருந்து வந்த வியர்வை தான் பீமா நதியாக உருவாகியது என இங்கு நமபப்படுகிறது.

இன்னொரு ஸ்தலபுராணம் சிவபெருமான் இங்கு ஆதியும் அந்தமுமில்லா ஜ்யோதியாக காட்சியளித்தார் என்பது தான். இது 13 ஆம் நூற்றாண்டு கோவில் என சொல்லப்ப்டுகிறது. வீர சிவாஜி 18 ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

மலை ஏறி சென்றாலும் கோவில் தாழவான பகுதியில் உள்ளது. படிகளில் கீழ் நோக்கி இறங்க வேண்டும். சமதளத்தில் கோவில் உள்ளது. வட நாட்டு கோவில்கள் போல இங்கும் சிவலிங்கத்துக்கு நாம் அபிஷேகம் செய்யலாம்.

கோவில் உள்ளே செல்லும் இடத்தில் முதலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது .நேரே எதிர்புறமாக மூலஸ்தானம் உள்ளது.
மூலஸ்தானம் சுயம்புலிங்கம்.நந்தி முன்புறம் அர்த்தமண்டபத்தில் உள்ளது. சன்னதிக்கு வெளியில் காலபைரவருக்கு சன்னதி உள்ளது.


கோவிலுக்கு 1 கி.மீ முன்னதாக ஒரே ஒரு ஹோட்டல் உள்ளது .அதை தவிர்த்து கோவிலுக்கு அருகில் ஏதுமில்லை. சிறு கடைகள் கோவில் அருகில் உள்ளது.